Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!

'சரியா பல் தேய்ச்சியா..?’

- இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நடத்தும் சுகாதார பாலபாடம். இந்தப் பல் பாடம், பாலகர்களுக்கு மட்டுமல்ல; குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான்!

'பல் சுகாதாரத்தை கர்ப்பிணிகள் அலட்சியப்படுத்தினால்... பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது!’ என்று எச்சரிக்கின்றன, வாய்க்குழி சுகாதாரத்துக்காக 'வாய்ஸ்' கொடுத்துவரும் சர்வதேச அமைப்புகள்.

இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த பல் பாதுகாப்பு சிறப்பு மருத்துவரான என்.குருச்சரண் விரிவாகப் பேசுகிறார்...

'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீரியோடண்டாலஜி (American Academy of Periodontology) என்கிற ஈறு நோய்கள் மற்றும் சுகாதாரத்துக்கான அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய எச்சரிக்கையை எழுப்பி வருகிறது!

குணப்படுத்த முடியாத ஈறு வியாதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைப்பிரசவமும், எடை குறைவான குழந்தைகள் பிறக்கவும் ஏழு மடங்கு அதிக வாய்ப்புகள் உருவாவதாக அந்த அமைப்பின் ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.

இந்த ஈறு வியாதி, கர்ப்பிணிகளின் உடலில் சில உயிர்ம திரவங்களின் அளவை அதிகரிப்பதுதான், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான காரணம்.

ஈறு வியாதியை உண்டாக்கும் 'போர்ஃபிரோ மோனஸ் ஜிஞ்ஜிவாலிஸ்’ (Porphyromonas Gingivalis) என்ற பாக்டீரியா, கர்ப்பிணியின் வயிற்றில் பனிக்குட நீரில் இருப்பது, 2007-ம் ஆண்டில் டாக்டர்களால் கண்டறியப்பட்டது. அதன் பிறகுதான் கர்ப்பிணிகளுக்கான ஈறு சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை, மேலைநாடுகள் துரிதப்படுத்தின. ஆனால், அடிப்படை சுகாதாரத்துக்கே அல்லாடும் நம் நாட்டில் ஈறு பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வோ, அக்கறையோ இன்னமும் ஏற்படவில்லை. ஈறு பாதிப்பால் உருவாகும் பாக்டீரியா, 'எக்லாம்சியா’ (Eclampsia) என்கிற வலிப்பு நோயையும் உருவாக்கக்கூடியது.

 

ஈறு கோளாறு உள்ளவர்களின் ரத்தத்தில் 'சி ரியாக்டிவ் புரோட்டீன்' (C-Reactive Protein) என்கிற கெடுதலை உண்டு பண்ணும் புரோட்டீனின் அளவு, 65 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

கர்ப்பக் காலத்தின்போது பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோயை அதிகமாக தூண்டிவிடுவதோடு, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியையும்  இந்த ஈறு கோளாறின் கூறுகள் கடினமாக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது!' என்ற குருச்சரண்,

''என்ன, இதையெல்லாம் கேட்டுவிட்டு திகிலடைந்துவிட்டீர்களா? அதற்காக நான் இதைச் சொல்லவில்லை... திகில் அடையவும் தேவையில்லை. எந்த அளவுக்கு சுகாதாரமாக நாம் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இதைச் சொல்கிறேன்'' என்று சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

''வாய்க்குழி சுகாதாரம் என்பதில் பல், ஈறு, நாக்கு போன்றவற்றின் சுகாதாரமும் உள்ளடங்கி இருக்கிறது. பெரும்பாலானோர் பல் தேய்ப்பதையே கடமையாக நினைக்கிறார்கள். 'சாதாரண ஈறு பாதிப்புத்தானே’ என அசமந்தமாக இருந்துவிடுவதால் குறைப்பிரசவம் நிகழவும், எடை குறைவாக குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். பிறவிக் கோளாறுகள்கூட ஏற்படலாம்.

இதையெல்லாம் கேட்டு பயப்படத் தேவையில்லை. தினமும் ஈறுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது பெரிய சிரமம் இல்லையே..! அத்தகைய எளிதான முயற்சிகளைக்கூட செய்யாமல் பெரிய விளைவுகளுக்கு நாமே நம்மை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது'' என்றவர், விளைவுகளைத் தடுக்கும் வழிமுறைகளையும் சொல்லத் தொடங்கினார்...

''18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குதான் ஞானப்பல் எனப்படும் மூன்றாவது கடைவாய்ப்பல் முளைக்கத் தொடங்கும். சாப்பிடும்போது, பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையிலான 'கேப்’பில் உணவுப் பொருட்கள் சிக்கிக்கொள்ளும். பல் துலக்கும்போது அவை சரியாக அகப்படாது. இதனால், ஈறில் கிருமிகள் உருவாகி சீழ் ஏற்படும். ஆகவே, ஞானப்பல் முளைக்கும் தருணத்தில், கர்ப்பம் தரிக்க நேரிட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக, பல் மற்றும் ஈறு சிகிச்சைக்காகத் தரப்படும் சில வலி நிவாரணி மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மிகவும் வீரியமானவை. மாத்திரை, மருந்துகளால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மனதில் கொண்டு, தாயாகப் போகும் பெண்கள், குடும்ப வாரிசுக்காகத் திட்டமிடும்போதே குழந்தைக்கான இடைவெளி, உடல் ஆரோக்கியம், குடும்பப் பொருளாதாரம் போன்ற அம்சங்களுடன் முன்னெச்சரிக்கையுடன் பல் சொத்தை பிரச்னையையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது'’ என்றவர் ஈறு பராமரிப்புக்காக பட்டியலிட்ட டிப்ஸ்கள் பெட்டி செய்தியில்!

- எஸ்.கே.நிலா

ஈறுகளை பராமரிப்பது எப்படி?

காலை, இரவு இருவேளையும் பல் துலக்க வேண்டும்.

 இரவில் வாய்மூடி தூங்கும்போது வாய்க்குழியில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்துவிடும். அந்த இடத்தில் அனரோபிக் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கும். பல் மற்றும் ஈறு இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகளில் செயல்படும் இந்த வகை பாக்டீரியாவினால், ஈறுகள் சீக்கிரத்திலேயே சீரழிந்துவிடும். ஒவ்வொரு முறை திடமான மற்றும் திரவமான உணவுகளை சாப்பிட்டவுடன், வாய்க் கொப்பளிப்பது அவசியம்.

உணவுத்துகள் சிக்கிக் கொண்டால், கையில் கிடைத்த குச்சியை வைத்து சிலர் பல், ஈறுகளை பாடாய்ப்படுத்திவிடுவார்கள். அவசியமெனில், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் நூல் போன்ற டென்டல் ஃபிளாஸ் (Dental Floss) கொண்டு எளிமையாக பல் இடுக்குகளை தூய்மைபடுத்தலாம்.

நாக்கை எப்போதும் சுத்தமாக வைத் திருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு நாக்கில் ஏதாவது படிமானம் தேங்கி இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்து மருந்துகள் இந்தப் படி மானத்தின் தடிமனை மேலும் அதிகரிக்க  செய்து, நாக்கின் மேல் பகுதியை கிருமிகளுக்குப் புகலிடமாக்கிவிடும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல், ஈறு, வாய் இவற்றை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்களில் சொத்தைப்பல் எடுப்பது கூடவே கூடாது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்!
பிரசவத்துக்கு பின் வரும் 'சைக்கோஸிஸ் பிரளயம்....
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close