''வாரம் ஒரு நாள் மெளன விரதம்!''

''கல்லூரிக் காலத்தில் இருந்தே காந்தியம் தொடர்பாகப் படிக்க ஆரம்பித்தேன். காந்தியடிகள் எழுதிய 'உணவு’ மற்றும் 'புலனடக்கம்’ என்கிற இரு புத்தகங்கள்தான் என் ஆரோக்கியத்தின் ஆரம்ப வழிகாட்டி!'' - புத்தம் புது தேயிலை மணக்கும் தேநீர்க் கோப்பையுடன் உபசரித்தபடியே, தனது ஆரோக்கிய ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார் தமிழருவி மணியன். 40 வருடங்களில் 5,000 மேடைகள் கண்ட அருவித் தமிழர். 

''சர்க்கரையும் பாலும் கலக்காத வரை தேநீரும் ஒரு மூலிகைச் சாறுதான். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு குவளை தேநீர் குடிக்கிறேன். இதைத் தவிர வெற்றிலைப் பாக்கு, லாகிரி வஸ்துகள் என வேறு எதையும் இது வரை நான் தொட்டது இல்லை. அதனால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் என்னை நெருங்கியதும் இல்லை. கல்லூரிக் காலங்களில் இருந்த அதே குரல் வளம், இன்னமும் என்னிடம் அப்படியே இருப்பதற்கு இதுதான் காரணம்'' என்றவரிடம் அவருடைய ஆரோக்கியம்பற்றிப் பேச ஆரம்பித்தேன்.

''60 வயதிலும்கூட தொடர்ந்து பேசுகிறீர்களே... ஆயுள் பெருக்கத்தின் ரகசியம் மௌனத்தில்தானே இருக்கிறது..?''

''தொடர்ந்து பேசும்போது அதிக அளவில் மூச்சுவிட வேண்டும். இதனால் சக்தி குறையும். குரல்வளையைச் சுற்றி இருக்கிற ஈரத்தன்மை குறைந்து குரல்நாண் பாதிப்புக்கு உள்ளாகும். எமக்குத் தொழில் பேச்சு; அதுதான் என் மூச்சு. என்ன செய்யலாம்? பேசுவதற்கு முன்பு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துவிடுகிறேன். இதனால், குரல்வளையின் ஈரம் வற்றிப்போவதைத் தவிர்க்க முடிகிறது.

சக்தியைச் செலவழிப்பதற்கு முன்பு சேர்த்துவைப்பது முக்கியம். வாரத்தில் ஒரு நாள் - செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து புதன் கிழமை காலை 9.30 மணி வரை - யாரிடமும் எதுவும் பேசாமல் மௌன விரதம் இருப்பது என்னுடைய வழக்கம். இரண்டு மணி நேரம் மேடையில் பேசுவதற்கு முன்பு குறைந்தது 5 மணி நேரமாவது அமைதியாக இருந்து புத்தகங்களைப் படித்து குறிப்பு எடுக்கிறேன். ஆசனம், மூச்சுப் பயிற்சி, தியானம் மூன்றையும் கல்லூரிக் காலத்தில் இருந்து இன்று வரை 42 வருடங்களாகச் செய்துவருகிறேன். இவைதான் என் ஆரோக்கியத்தின் விலாசம்''.

''யோகாவால் முதுமையைத் தள்ளிப்போட முடியுமா?''

''முதுமை என்பது வந்தே தீரும். ஆனால், 100 வயது வரை சோர்வு இல்லாமல் துடிப்புடன் செயல்பட ஆசனங்கள் கைகொடுக்கும். உடலின் வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சிறப்பாகச் செயல்பட ஆசனங்கள் உதவும். ஒரு மனிதனின் ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமே கிடையாது. அதில், மனதுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. மனம் கெட்டுக்கிடந்தால் உடல் பட்டுப்போகும். உயிருக்குப் போராடுகிற ஒருவரை அலோபதி காப்பாற்றும். ஆனால், மனக் குழப்பத்தால் சிக்கித் தவிப்பவரை யோகாவும் தியானமும்தான் காப்பாற்றும். இதில், மிக முக்கியமானது அந்த ஆசனங்களை முறைப்படி செய்ய வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு ஆசனத்துக்கும் ஒரு மாற்று ஆசனம் உண்டு. உடலில் உள்ள சிக்கல்களைக் களையும் இந்த ஆசனங்களே தகுந்த பயிற்சி இல்லாமல் செய்யும்போது, கழுத்து வலி, முதுகு வலி, நரம்பு பிசகிக்கொள்ளுதல் போன்ற பிரச்னைகளை உருவாக்கிவிடும். அதனால், தகுந்த நிபுணர் இல்லாமல் புத்தகத்தை மட்டுமே பார்த்து ஆசனம் செய்வது தவறானது.

எனக்கு ஆரம்பத்தில் ஆசனம் கற்றுக்கொடுத்தது ஆசன ஆண்டியப்பன். எனது 25-வது திருமண நாளில் வேதாத்ரி மகரிஷியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் இருந்து வேதாத்ரியம் மற்றும் யோகாசனம் கற்று, ஆசனத்துக்கான 'அருள்நிதி’ பட்டமும் பெற்று இருக்கிறேன். இருள் முடிந்து பகல் தொடங்கும் காலை நேரத்திலும் பகல் முடிந்து இருள் தொடங்கும் மாலை நேரத்திலும் ஆசனம் செய்கிறேன். பூமியின் வெப்பம் சம நிலையில் இருப்பதால் உடலின் வெப்ப நிலையையும் சம நிலையில் பாதுகாக்க இந்த வேளைகள்தான் உகந்தவை. ஆசனத்துக்குப் பிறகு மூச்சுப் பயிற்சி, அதைத் தொடர்ந்து தியானம். என் நினைவாற்றல், படைப்பாற்றல், கற்பனை வளத்தைத் தூண்டும் மந்திரக்கோல் தியானம்தான்!''

''உடலைச் சீராகப் பராமரிக்க ஆசனமும் தியானமும் மட்டுமே போதுமா?''

''ஆயிரம் ஆசனங்கள் செய்தாலும் உடலைத் தாங்கிப் பிடிக்கும் உத்திரம் உணவுதான். எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவுச் சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறை தெரிந்து உண்ணாதபோதுதான் பிரச்னையே ஆரம்பம் ஆகிறது. எனக்கு 60 வயது ஆகிறது. சைவம், அசைவம் இரண்டையும் விரும்பிச் சாப்பிடுபவன் நான். ஆனால், அதிலும் ஒரு வரைமுறையை வைத்திருக்கிறேன். 30 வயது வரை வாரத்தில் மூன்று நாட்கள் அசைவம் எடுத்துக்கொண்டேன். 40 வயதுக்கு மேல் வாரத்தில் இரண்டு நாட்கள், இப்போது வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் அசைவம். 50 வயது வரை சாம்பார், ரசம், மோர் என்று சாப்பிட்டவன் இப்போது சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதம் அல்லது ரசம் சாதம் என இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே சாப்பிடுகிறேன்.

'நெய்யை உருக்கு, மோரைப் பெருக்கு, நீரைச் சுருக்கு’ என்பது உணவு குறித்த  பொன்மொழி. நெய்யை உருக்கிப் பயன்படுத்தும்போது, அளவு குறைவாக எடுத்துக்கொள்வோம். தயிர் அடர்த்தியாக இருக்கும்போது கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும்; அதுவே மோராகும்போது கொழுப்பு குறைந்து எளிதில் ஜீரணமாகும். அதுபோல தண்ணீரைக் காய்ச்சித்தான் குடிக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக்கொடுத்த முக்கியமான செய்திகள் இவை. வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் எண்ணெய் மற்றும் நெய் கலந்த உணவு வகைகளை வாங்கி உண்பது இல்லை.

உணவு முறைகளில் கவனமாக இருப்பதுபோலவே, உடலையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதிலும் அதிகக் கவனமாக இருப்பேன். ஏனெனில் சுகாதாரமின்மையால் தொற்றிக்கொள்ளும் வியாதிகளை வருங்காலச் சந்ததிகளுக்குப் பரம்பரைப் பரிசாக அளித்துவிடக் கூடாது. மழைக் காலங்களில்கூட பச்சைத் தண்ணீரில்தான் குளிக்கிறேன். நமது மாநிலம் வெப்பம் நிறைந்த பகுதி. வெப்பம் என்பது விரிவடையச் செய்வது. குளிர்ச்சி என்பது சுருக்குவது. காலையில் இருந்து மாலை வரை ஓடி ஆடி செய்யும் வேலைகளும், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து வேலை செய்வதும்கூட உடலுக்குச் சூடுதான். தினமும் குளிர்ந்த நீரில் குளித்துவிடுவது எலும்பு தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்!''

''மௌன விரதத்தைப் போல ஒரு நாள் உண்ணா நோன்பும் இருக்கிறீர்களாமே... என்ன காரணம்?''

''ஓய்வற்று இருக்கும் எந்த ஒரு பொருளும் விரைவில் பழுதாகிவிடும். உடலும் அப்படித்தான். உடலுக்குள் ஜீரண உறுப்புகள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றன. பசித்த பின் உணவு உண்பதும், மிதமான உணவு உண்பதும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாரத்தில் ஒரு நாளாவது பசித்திருப்பது. செவ்வாய் கிழமைக் காலை உணவு உண்ட பிறகு மறு நாள் புதன் கிழமை காலைதான் சிற்றுண்டி சாப்பிடுவேன். கல்லூரிக் காலத்தில் இருந்து 50 வயது வரை இதைக் கடைப்பிடித்தேன். இப்போது என் மொத்த உணவே ஒரு கைப்பிடி அளவுதான். அதனால் விரதம் இருப்பது இல்லை''.

''நம் முன்னோர்களைப் பார்த்து வியந்த ஆரோக்கியச் செய்தி ஒன்று..?''

''தோப்புக்கரணம் போடுவது. அதுவும் தவறு செய்யும்போது தண்டனையாகப் போடச் சொல்லுவது. உண்மையில் இதற்குள் மிகப் பெரிய ஆரோக்கியச் செய்தி உள்ளது. காதுகளை இழுத்துப் பிடித்து இரண்டு கைகளால் தலையில் கொட்டும்போது, மூளையில் இருக்கும் உணர்ச்சி நரம்புத் தூண்டப்படுகிறது. இதனால், கவனச் சிதறல் இல்லாமல் மூளைக்குள் ஒரு செய்தியைப் பதிவுசெய்ய முடியும். தவறு செய்யும்போது மீண்டும் அதே தவறை செய்யக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மிகச் சரியான இந்த பழக்கத்தைப் பார்த்து நான் வியப்பேன்!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick