Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படிக்கு வயிறு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டாக்டர் செல்வராஜன், உடலில் வயிறே பிரதானம் என 'வயிறு’ என்ற தலைப்பில் ஆயிரம் பக்கங்கள்கொண்ட புத்தகத்தை எழுதியவர். லேப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை படிப்பை மேலைநாடுகளில் பயின்றவர். கும்பகோணத்தில் பணியாற்றும் செல்வராஜன், வயிற்றின் சார்பாகப் பேசுகிறார்...

 'ஒரு சாண் வயிறு இல்லாட்டா... இந்த உலகத்துல ஏது கலாட்டா’னு ஒரு பழைய சினிமா பாட்டு உண்டு. அது நூற்றுக்கு நூறு உண்மை! உலகத்திலும் உடலுக்குள்ளும் பல கலவரங்கள் உருவாகக் காரணமா இருக்கிறது வயிறாகிய நான்தான். நெஞ்சுக் குழி தொடங்கி ஆசன வாய் வரை நீண்டுகிடக்கும் என்னைப் பற்றி எல்லாரும் தெரிஞ்சுக்கவேண்டிய விஷயங்கள் எக்கச்சக்கமா இருக்கு. இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, கணையம், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல்னு பல ஜீரண உறுப்புகளை உள்ளடக்கிய மந்திரப் பை நான்!

செரிமானம்னு சொன்ன உடனேயே எல்லோருக்கும் என்னைத்தான் ஞாபகம் வரும். தொண்டையில் இருந்து ஆசன வாய் வரை உடம்புக்குள் உணவு பயணிக்கிற பாதையைச் செரிமான மண்டலம்னு சொல்வாங்க. மனிதனின் உயரம் வெறும் ஆறு அடி. ஆனா, செரிமான மண்டலத்தோட நீளம் 30 அடி. பெயர்தான் சிறு குடலே தவிர, சுருண்டு சுருண்டு போகும் அதனோட நீளம் 20 அடி. ஆனா, உணவுக் குழாயைத் தாண்டி வயிறாகிய என்னையும் கடந்து பெருங்குடல், ஆசன வாய் வரை உணவு செல்லக் கூடிய உறுப்புகளின் மொத்த நீளமே வெறும் 10 அடிதான்.

ரொம்பப் பெருமை பேசுறேன்னு நினைச்சுக்காதீங்க... உண்மையிலேயே நான் ரொம்ப சிரமப்படுற ஒரு தொழிலாளி. பல்லால் கடிக்க முடியாத பல பொருட்களைக்கூட நீங்க வாய்ல போட்டு உள்ளே அனுப்பிடுறீங்க. அதைச் செரிக்கவைக்க நான் படுற சிரமம் எப்படிப்பட்டதுன்னு உங்களுக்குத் தெரியாது.

என்னோட கஷ்டத்தைச் சொல்லிக் காட்டுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. முதலாளி கிட்ட தன்னோட கஷ்டத்தையும் சில நேரங்களில் சொல்லி அழுவானே தொழிலாளி... அந்த மாதிரிதான் என் முதலாளியான உங்ககிட்ட என் சிரமத்தைச் சொல்றேன்.

வந்து விழுந்த உணவை உடைச்சுக் குழைச்சு உடலுக்குத் தேவையான 'சக்தி’யை மட்டும் உறிஞ்சி எடுத்துக்கிட்டு, சக்கையான கழிவுப் பொருட்களை மட்டுமே உடம்பில் இருந்து வெளியேத்துவேன்.

அவசர அவசரமா நீங்க வெளுத்துக்கட்டும் சூடான இட்லி, பொங்கல், உப்புமா வகையறாக்கள் எல்லாமுமே தொண்டையைத் தாண்டிய ஒரு சில விநாடிகள் வரைதான் சுடும். ஆனால், எனக்குள் வந்து விழுந்த பிறகு சூடு பறக்க வந்த உணவு இருக்கிற இடம் தெரியாமல் 'கப்சிப்’னு அடங்கிடும். என்னதான் சூடா இருந்தாலும், அதைத் தாங்கிக்கிற சக்தி இரைப்பையோட சுவருக்கு இருக்கு. உணவுக் குழாய் மூலமாக இரைப்பைக்குள் உணவு விழுந்ததும், நான் அரவை நிலையமாக மாறி எனது இயந்திரங்களை முடுக்கிவிடுவேன். இதனால் உணவு, துண்டுகளாகி மாவு மாதிரிக் குழைந்துவிடும்.

கிராமத்தில் பானை செய்ய மண் குழைக்கிறதைப் பார்த்து இருக்கீங்களா? முதல்ல கட்டிகளை உடைச்சு, தூள் தூளாக்கி, தண்ணி சேர்த்து நல்லாப் பிசைஞ்சு அப்புறம்தான் சக்கரத்தில் கொட்டுவாங்க. அதே மாதிரிதான் பிசையிறது, குழைக்கிறதுன்னு எனக்குள்ளேயும் வேலை நடக்கும். உணவில் இருக்கிற புரதங்களை ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சின் (Pepsin) என்ற நொதிப் பொருளும் தாக்க ஆரம்பிக்கும். நீங்க சாப்பிடும் உணவுக்கு எனக்குள்ளேயே நடக்கும் முக்கியமான சிகிச்சை இது.

உங்க கையில் பட்டாலே பொத்தல் ஆகிடுற அளவுக்குத் திடமான ஆற்றல் கொண்டது ஹைட்ரோ குளோரிக் அமிலம். ஆனா, இந்த அமிலத்தால்கூட இரைப்பையில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அந்த அளவுக்கு இரைப்பை ரொம்ப ஸ்ட்ராங். உணவு செரிமானம் ஆக பெப்சின் உள்பட பல்வேறு நொதிப் பொருட்கள் சுரக்கப்படுதுன்னு சொன்னேன் இல்லையா... இந்த நொதிப் பொருட்கள் இல்லைன்னா, செரிமான வேலை என்பது நாள் கணக்கில் நடக்கக் கூடிய மெகா தொடராகிவிடும்!

ஒரு சேமிப்புக் கிடங்கு போலவும் நான் செயல்படுறேன். வயிற்றில் இருக்கிற உணவைப் பதப்படுத்துவது, அதில் இருந்து சக்தியைப் பிரிச்சு எடுத்து ரத்தக் குழாய்களுக்கும், உடம்பு முழுக்க உள்ள செல்களுக்கும் அனுப்பும் வேலையை சிறுகுடலும் பெருங்குடலும் செய்யுது.

சாதாரணமா நீங்க சாப்பிடுற சாப்பாடு எனக்குள் எப்படி எல்லாம் மாற்றப்படுதுன்னு இன்னும் தெரிஞ்சுக்கணுமா? விளக்கமா சொல்றேன். அப்போதான் ஒவ்வொரு வாய் உணவைச் சாப்பிடும்போதும் என்னைப் பத்தி நினைப்பீங்க. உங்களுக்காக நான் எப்படி எல்லாம் ஓடாத் தேயுறேங்கிறதை சொல்லச் சொல்ல... உயிரை நேசிக்கிற அளவுக்கு இந்த வயிறையும் நீங்க நேசிப்பீங்க!

- மெல்வேன்... சொல்வேன்...

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
உதிரப்போக்கை நிறுத்தும் உதிரம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close