கல்லீரல் காப்போம்!

 

 

னித உடலில் வெட்டினாலும் வளரக்கூடிய ஒரே உறுப்பு கல்லீரல்! அதே போல், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில், உச்சபட்ச சாதனையாக இருப்பது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை! காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், கல்லீரலின் பணிகள்பற்றி இரண்டு வரிகள் சொன்னாலே போதும். 

இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம்.... என ஒவ்வோர் அவயமும் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்கின்றன. ஆனால், கல்லீரல் மட்டும்தான் உணவை ஜீரணம் செய்வதில் ஆரம்பித்து... நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது வரை, 3,000-க்கும் அதிகமான பணிகளை ஒரு ரசாயனத் தொழிற்சாலை மாதிரி ஓய்வு  ஒழிச்சல் இன்றி செய்துகொண்டே இருக்கிறது. இத்தனை வேலைகளைச் செய்யும் கல்லீரலில் ஒரு பாதிப்பு என்றால், அதற்கு மாற்றாக இன்னொரு கல்லீரலை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துவது... எத்தனை சவாலான விஷயம் என்பது இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும்.

குடிப்பழக்கத்தாலும், வைரஸ் கிருமிகளாலும் பாதிக்கப்படும் கல்லீரல், 80 சதவிகிதம் கெட்டுப்போன பிறகுதான் 'கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது’ என்பதையே நம்மால் அறிய முடியும். இது நமக்குத் தெரியவரும்போது கல்லீரல் 'பிரேக் டவுன்’ ஆகும் நிலையில் இருக்கும்.

கல்லீரல் புற்றுநோய், வயிற்றில் நீர் கோத்து வயிற்றைப் பானைபோல் மாற்றிவிடுவதோடு, கால் வீக்கம், லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி, சுய நினைவு இழப்பு, நடக்கவே முடியாத நிலை எனப் படிப்படியாக மனிதனை முடக்கிவிடும். ஆகையால், கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 'கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை’ ஒன்றே நிரந்தரத் தீர்வு!  

ஒரு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 14 முதல் 18 மணி நேரம் வரை ஆகும். விலை உயர்ந்த நவீன உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் - செவிலியர்கள்- உதவியாளர்கள்..... என்று அனைத்தும் உயர்தரத்தில் இருந்தாகவேண்டும்.

உலகிலேயே நமது நாட்டில்தான் அதிகமான அளவில், அதாவது வருடத்துக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கல்லீரல் பாதிப்பு நோய்களால் மரணம்அடைகின்றனர். பெரும்பாலும் நடுத்தர வயதினருக்குத்தான் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில், இந்த அறுவைச் சிகிச்சையை செய்துகொள்ள 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.  ஏனெனில், நாடு முழுவதிலும் உள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் 'கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை’ செய்துகொள்ளும் வசதி இல்லை; ஒரே ஒரு விதிவிலக்கு -  சென்னையில் இருக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை. கடந்த இரண்டு வருடங்களாக ஸ்டான்லி மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் எல்லாமே இலவசமாகச் செய்யப்படுகின்றன.

கல்லீரல் பிரச்னை வராமல் இருக்க அதிகக் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரதம், மாவுச் சத்து, வைட்டமின் மற்றும் காய்கறி - பழ வகைகளைச் சாப்பிடுவது கல்லீரலைக் காக்கும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, குடிப்பழக்கத்துக்கு முழுக்கு போட்டாக வேண்டும்!

தொகுப்பு: த.கதிரவன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick