இனி எல்லாம் சுகமே!

ணக்கம். புதிய ஆண்டில்... புதிய விடியலில் விகடன் குழுமத்தில் இருந்து இன்னும் ஓர் இனிய கனவு இதோ உங்கள் கரங்களில் நிஜமாகித் தவழ்கிறது!  

ஒரு பச்சிளம் குழந்தையைக் கையாளும் பக்குவத்தோடு பலதரப்பட்ட மருத்துவ வல்லுநர்களின் பங்களிப்புடன், பயம் நீக்கி நலம் பயக்கும் சுகப் பெட்டகமாக டாக்டர் விகடன் உங்கள் கரங்களில் தவழ்கிறது.  

ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, கை வைத்தியம் என எல்லா விதமான கலவையாக டாக்டர் விகடன் உங்களைப் பரவசப்படுத்தும்; பாதுகாக்கும்!  

சில மாதங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உள்ளங்காலில் கடுமையான வலி. ஸ்கேன், எக்ஸ்ரே... இன்னும் என்னென்னவோ பரிசோதனைகள் செய்துபார்த்தும் வலிக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. வேறு ஒரு மருத்துவரைச் சந்தித்தித்தார். 'ஏற்கெனவே உங்களைத் தாக்கிய சிக்குன்குன்யா கிருமியின் மிச்சம்தான் இப்போது உங்கள் பாதத்தைப் பதம் பார்க்கிறது!’ எனச் சொல்லி, சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். அடுத்த சில நாட்களிலேயே நண்பருக்கு வலி பறந்து போனது. மருத்துவம் என்கிற விஷயத்தில் எல்லோருமே அப்பாவிகள்தான் என்பதை அப்பட்டமாக உணர்த்திய நிகழ்வு இது.

நண்பரைப் போல் நம்மில் எத்தனை பேர் தவித்திருக்கிறோம்; தவிக்கிறோம். எவ்வளவு புரிபடாத கேள்விகளோடு மருத்துவமனைகளில் காத்திருக்கிறோம்? கை மீறிய செலவு, பயம், வலி எனத் துயரம் சுமக்கிறோம்? இதற்கெல்லாம் ஒரு சின்ன தீர்வுதான் டாக்டர் விகடன். வரும் முன் காப்போம் என நோய்கள் நம்மையும் நம் குடும்பத்தினரையும் அண்டாமல் தடுக்கும் குடும்ப டாக்டராக டாக்டர் விகடன் நிச்சயம் விளங்கும்.

தலைசிறந்த மருத்துவர்கள், நிபுணர்களின் பங்களிப்புகளோடு எல்லோரும் இன்புற்றிருக்க விகடன் டாக்டர் இனி மாதம் இருமுறை உங்கள் இல்லம் வருவார். படியுங்கள். உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

தாயின் விரல் கோதல்களுக்குத் தவிக்கும் குழந்தையைப் போல காத்திருக்கிறேன்... உங்கள் கருத்துகளுக்கு.

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick