Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

தூக்கத்திலும் பாகுபாடு பார்க்கலாமா?

 காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே...

காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...

- இது தாலாட்டுப் பாடல் மட்டுமே அல்ல; வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் தூக்கம் தொலைத்து வாழும் பெண்களின் நிலையை அப்படியே வெளிப்படுத்தும் உண்மையும் இதுதான்.

சரி, பெண்களின் தூக்கம் குறித்து மருத்துவ உலகம் என்ன சொல்கிறது? பெண்கள் குறைவான நேரம் தூங்கினாலே போதுமா? தூக்கமின்மைப் பிரச்னை பெண்களிடம்தான் அதிகமாக இருக்கிறதா?

பொதுவாக, அனைவருக்குமே குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரம் வரையிலான தூக்கம் அவசியமானது. இதில் ஆண் - பெண் என்று எந்தப் பாகுபாடும் கிடையாது. ஆனால், நம்முடைய சமூகச் சூழலில் பெண்கள் இங்கும் அழுத்தப்படுவதுதான் துயரம்!

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி முடித்து, கடைசியாகத் தானும் சாப்பிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்துவிட்டப் பின்னரே தூங்கச் செல்வது நம் அம்மாக்களின் வழக்கம். காலையிலும்கூட சீக்கிரமாகவே எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து சமையல் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம். இன்றைய சூழலில், பெண்கள் வேலைக்கும் செல்ல வேண்டி இருப்பதால், இந்தப் பணிச் சுமைகள் இன்னமும் கூடுதலாகவே இருக்கின்றன. இப்படி, ஒரு நாளின் பெரும் பகுதியை வேலைகள் ஆக்கிரமித்துக்கொள்வதால் தானாகவே தூக்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளப் பழகிவிடுகிறார்கள் பெண்கள். ஒரு சில பெண்களால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், பெரும்பாலானோர், குறைவாகத் தூங்கியதால் ஏற்படும் சோர்வைச் சுமந்தவாறே காலத்தைக் கடக்கின்றனர்.

'இதுதான் நம் வாழ்க்கை முறை; எப்படியாவது இதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்’ என்ற மனநிலைதான் நிறையப் பெண்களுக்கு இருக்கிறது. பகல் முழுவதும் தொடர்கிற சோர்வு நிலைபற்றியோ, நாளடைவில் தூக்கமின்மையால் ஏற்படும் ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பக்க விளைவுகள் குறித்தோ பலரும் அக்கறைகொள்வது இல்லை; அதனால், மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவதும் இல்லை. ஆனால், சமீப காலமாக கர்ப்பக் காலகட்டத்திலும் மாதவிடாய்க் காலகட்டத்திலும் ஏற்படும் தூக்கப் பிரச்னைகளுக்காக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது மட்டும் இங்கே ஆறுதலான விஷயம்.

பொதுவாக கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரையிலும் தூங்குவதற்குப் பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஏனெனில், இந்தக் காலகட்டத்தில், கருப்பையின் அளவானது பெரிதாக வளர்ந்துகொண்டே போவதால், மல்லாந்த நிலையில் படுக்க முடியாது. கருப்பை ஏற்படுத்தும் அழுத்தத்தினால் சில பெண்களுக்கு ரத்த ஓட்டமே பாதிப்படையும் வாய்ப்பும் உண்டு. எனவே, இந்த நிலையில் இருக்கும் கர்ப்பிணிகள் வலது பக்கமாக ஒருக்களித்து படுத்து உறங்குவதே பாதுகாப்பானது. சாதாரணமாகத் தூக்கப் பிரச்னைக்காக எங்களிடம் வருபவர்களிடம் 'உங்களுக்கு வசதியான நிலையிலேயே படுத்து உறங்கலாம்’ என்றுதான் ஆலோசனை சொல்வோம். ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விதி பொருந்தாது. எனவே, அவர்கள் வலது பக்கமாக ஒருக்களித்து உறங்கப் பழகுவதே சரியான முறை. இதுதவிர கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ரத்த சோகை மற்றும் கால்கள் இழுத்துக்கொள்வது போன்ற உணர்வுகளாலும் (Restless Leg Syndrome) கர்ப்பிணிகளின் தூக்கம் கெடலாம்.

மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் ஒரு சில நாட்கள் தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். பொதுவாக, 'அந்த’ நாட்களில் உடல் - மன ரீதியாக ஏற்படும் பிரச்னைகளோடு தூக்கமின்மையும் ஒன்று எனச் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால்,   மெனோபாஸ் (Menopause)  எனப்படும் மாதவிடாய் நின்ற பிறகான காலகட்டத்தில் தூக்கமின்மைப் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். தொடர்ச்சியாகத் தூங்க முடியாமல், தூக்கத்தின் இடையிடையே விழிப்பு உண்டாகி (Fragmented Sleep) தூக்கம் கெடும். இதன் தொடர்ச்சியாக உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாகி சூடாகிவிட்டது போன்ற உணர்வும் ஏற்படும். நிம்மதி இல்லாமல், மனது அலைக்கழியும்.

குழந்தைப் பருவத்தில் மட்டுமே ஆண் - பெண் இருவரின் தூக்க நிலையும் ஒன்றாக இருக்கிறது. பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைப் பருவத்தினரின் தூக்க நிலை குறித்து வரும் இதழில் பார்ப்போம்.

- ஆராரோ ஆரிராரோ

மூட்டு வலி உள்ளிட்ட வலி தரக்கூடிய உடல் பிரச்னைகள், (நாள்பட்ட) நுரையீரல் தொடர்பான நோய்கள், நெஞ்சு எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற காரணங்களாலும் தூக்கம் பாதிப்புக்கு உள்ளாகும்.

 மன அழுத்தத்தைக் குறைப்பது, தசைகளைத் தளர்த்தி ஓய்வு அளிக்கக்கூடிய உத்திகளைக் கையாள்வது, இரவு நேர உணவைக் குறைவாக எடுத்துக்கொள்வது போன்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்துவந்தால், கர்ப்பிணிகளும் நிம்மதியாகத் தூங்க முடியும்.

அதிகாலையிலேயே எழுந்திருப்பது, மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்தால், மாதவிடாய் நின்ற பிறகான காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் தொடர்ச்சியான ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
இப்படிக்கு வயிறு!
மனமே மந்திரம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close