மூட்டுவலி நீக்கும் தான்றிக்காய் துவையல்

த்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில வகைகள் இங்கே...

 

 

 

வெற்றிலை நெல்லி ரசம்

தேவையானவை: முழு நெல்லிக்காய் - 10, வெற்றிலை - 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 6 பல், வால் மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை இடுக்கு ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

 

தான்றிக்காய் துவையல்

தேவையானவை: தான்றிக்காய் - 10, எலுமிச்சை, காய்ந்த மிளகாய் - தலா 6, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், மல்லி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா - தலா ஒரு கைப்பிடி, கருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: எலுமிச்சையைச் சாறு பிழிந்துகொள்ளவும். தான்றிக்காயை விதை நீக்கி, ஒன்றிரண்டாக உடைத்து முதல் நாள் இரவே எலுமிச்சைச் சாறில் ஊறவைக்கவும். மறு நாள், வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, ஒன்றிரண்டாக உடைத்த மிளகாய், மல்லி, பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா, மஞ்சள் தூள், கருஞ்சீரகம் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும் தனியாக எடுத்துவைக்கவும். தான்றிக்காயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். மறுபடியும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, ஏற்கெனவே வதக்கிவைத்துள்ள பொருட்களுடன், அரைத்துவைத்துள்ள தான்றிக்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும்.

மருத்துவப் பயன்: கை, கால், உடல், மூட்டு வலியைப் போக்கும். மூட்டுகளில் உண்டாகக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு கைகண்ட மருந்து. மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு சம்பந்தமான கோளாறுகளையும் குணப்படுத்தும்.

 

மூங்கில் அரிசிக் கஞ்சி

தேவையானவை: மூங்கில் அரிசி, நொய் அரிசி - தலா 150 கிராம், சீரகம், ஓமம் - தலா அரைத் தேக்கரண்டி, பூண்டு - 6 பல், சுக்கு - ஒரு துண்டு, நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.

செய்முறை: மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.

மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick