சர்க்கரையைக் கரைக்கும் ஓமக்களி

ர்க்கரை விலை எகிறும் வேகத்தில்... சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் எகிறுவதுதான் வேதனை. சர்க்கரை நோயாளிகளின் பட்டியலில் உலக அளவில் சீனாவுக்கு முதல் இடம். இந்தியாவுக்கு இரண்டாவது இடம். நினைத்துப் பாருங்கள்... நம் முன்னோர்களில் இவ்வளவு பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது கிடையாது. காரணம், அவர்களின் உணவுப் பழக்கம். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே...

 

மாம்பருப்புத் துவையல்

தேவையானவை: மாம்பருப்பு - 200 கிராம், மிளகு, சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை தேக்கரண்டி, பூண்டு - 6 பல், கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து - 4 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2, தேங்காய் - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: மாம்பருப்பைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடலைப் பருப்பையும் கறுப்பு உளுந்தையும் போட்டு லேசாக வதக்கவும். பின்னர், மிளகு, சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இறுதியாக மாம்பருப்பையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

மருத்துவப் பயன்: குடல், வாய், நாக்கு, தொண்டை போன்ற இடங்களில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது. இளைத்த உடலைத் தேற்றும். வயிற்று வலிக்கு மிகச் சிறந்த நிவாரணி. மூலநோய் வராமல் தடுக்கும்.

அரசந்துளிர் ரசம்

தேவையானவை: அரசந்துளிர் இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தலா ஒரு கைப்பிடி, கருஞ்சீரகம், கறுப்பு உளுந்து - தலா ஒரு தேக்கரண்டி, பூண்டு - 6 பல், தக்காளி - 2, காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவைக்கு.  

செய்முறை: அரசந்துளிர், கறிவேப்பிலை, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி, வெறும் வாணலியில் மஞ்சள் தூள் சேர்த்து சுட்டு எடுத்துக்கொள்ளவும். இதை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். பின்னர், கருஞ்சீரகம், பூண்டு, கறுப்பு உளுந்து, பொடியாக அரிந்த தக்காளி ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதையும் சேர்க்க வேண்டும். இதை மிதமான வெப்ப நிலையில் அடுப்பில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். ஓரளவு கொதிக்கும் பக்குவம் வந்ததும், கொதிக்கவிடாமல் விரைவாகக் கீழே இறக்கிவிடவும்.

மருத்துவப் பயன்: சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. மேலும், சர்க்கரை நோயால் உண்டாகும் இதய நோய், எலும்பு பலகீனம் போன்றவற்றைத் தடுக்கும். சிறுநீரகத்தைப் பலப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளுக்கு கைகண்ட மருந்து இது.

 

ஓமக்களி

தேவையானவை: ஓமம், கறுப்பு உளுந்து - தலா 50 கிராம், கறுப்பு எள் - 25 கிராம், கேழ்வரகு, கைக்குத்தல் அவல், சுண்டைக்காய் வற்றல் - தலா 100 கிராம், வெந்தயம், சீரகம், நல்லெண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி, கசகசா - அரை தேக்கரண்டி.

செய்முறை: அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவில் தேவையான அளவு எடுத்துக் கரைக்கவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் கரைத்துவைத்துள்ள மாவைக் கொட்டிக் கிளறிக்கொண்டே இருக்கவும். களி பதத்துக்கு வந்ததும் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றிக் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குறைந்த அளவே மாவுச் சத்து இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை நோயின் காரணமாக உடல் மெலிந்தவர்களைத் தேற்றும்; அதேபோல, சர்க்கரை நோயால் உடல் ஊதிப்போய் இருப்பவர்களின் எடையைக் குறைத்து, சராசரி எடைக்குக் கொண்டுவரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை நிறுத்த வல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick