Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூட்டுவலிக்கு முடக்கத்தான்... ஆயுளை நீட்டிக்க ஆவாரம் பூ!

உணவுத் திருவிழா உணர்த்திய உண்மைகள்

பிரண்டைத் துவையல், பனங்கருப்பட்டி பால்கோவா, முடக்கத்தான் தோசை... 

காலத்துக்கு ஏற்ப மூலிகை உணவு வகைகளை மறு அறிமுகம் செய்திருக்கிறது சென்னை சித்த மருத்துவக் கல்லூரி!

சென்னை மெரினா கடற்கரையில், மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த 'மூலிகை உணவுத் திருவிழா’வில், சர்க்கரை நோய், உடல் பருமன், முடி உதிர்தல், முகப்பரு, மூட்டு வலி, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் மூலிகை உணவு வகைகளையும் இலவச ஆலோசனைகளையும் அள்ளி வழங்கினார்கள் சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள். விழாவுக்கு வந்த மக்கள் உணவுத் திருவிழாவில் சிற்றுண்டியை முடித்த கையோடு மூலிகை உணவு வகைகளை எப்படிச் செய்வது என்ற செய்முறை விளக்கத்தையும் கேட்டுச் சென்றனர்.

இந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்திய சித்த மருத்துவர் வீரபாபு, சித்த மருத்துவ உணவின் மகத்துவம்குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார்.

''மனிதர்களைத் தாக்குகிற நோய்களுக்கு மூலிகைகள்தான் அருமருந்து. தினமும் சாப்பிடும் உணவிலேயே மூலிகைகளைச் சேர்த்துக்கொண்டால், நோயே இல்லாத பெருவாழ்வு வாழலாம்.

மாலை நேரத்தில், வல்லாரை, முடக்கத்தான் தோசை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வாரத்தில் இரண்டு நாட்கள் முடக்கத்தான் தோசையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், பின்னாட்களில் அவர்களுக்கு மூட்டு வலி வரும் வாய்ப்பே இருக்காது. தூதுவளை இலை சேர்த்துக்கொண்டால், குளிர் காலத்தில் வருகிற சளித் தொல்லை, இருமல், கபம், நரம்பு தளர்ச்சித் தொல்லைகள் எதுவும் நம் அருகில் நெருங்காது.

ஒரு கட்டுத் தூதுவளையை ஆய்ந்து, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு லேசாக வதக்கி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையைத் தோசை மாவுடன் கலந்து தோசையாகச் சுடலாம். இதேபோல், முடக்கத்தான், வல்லாரை கீரை தோசையும் செய்யலாம். தூதுவளை முள் முள்ளாக இருப்பதால், ஆய்வதில் சிரமம் இருக்கும். வல்லாரை, முடக்கத்தான் கீரைகளை ஒவ்வோர் இலையாக ஆய்ந்து, நன்றாக அலசி வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி, சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க, மூலிகைக் கஷாயம்தான் சிறந்தது. அருகம்புல்லை நன்றாகக் கழுவி, மிளகு, மஞ்சள் தூள், தோல் சீவிய இஞ்சி சேர்த்து அரைக்க வேண்டும். இதோடு நான்கு மடங்கு தண்ணீரை ஊற்றிக் காய்ச்சி ஒரு மடங்காகச் சுண்டவைக்க வேண்டும். இந்தக் கஷாயத்தைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மி.லி. குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு குறையும்.

ஆவாரம் பூ, உடலுக்கு ரொம்பவும் நல்லது. ஆயுளை நீட்டிக்கும். சருமத்தை இளமையாக வைத்திருக்கும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் குறைக்கவும் ஆவாரம் பூ உதவுகிறது. தினமும் ஒரு பிடி ஆவாரம் பூவை, பருப்போடு வேகவைத்து சாம்பாராக்கிச் சாப்பிடலாம்.

கருப்பட்டி, கம்பு, கேழ்வரகு, சோளம்... இவற்றில் செய்த இட்லி வகைகளுக்கு, ஆவாரம் பூ பொடி, பிரண்டைப் பொடி, கொள்ளுப் பொடி என்று மூலிகை வகைகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. இது உடலுக்கு வலு சேர்க்கும். தினமும் சென்னைக் கடற்கரையில், காலை ஐந்து மணியில் இருந்து எட்டு மணி வரையிலும் பிரண்டை, முடக்கத்தான், கற்றாழை, தூதுவளை போன்ற அரிய மூலிகைகளை விற்பனை செய்கிறோம். எல்லாரும் மூலிகைச் சமையலை வீட்டிலேயே செய்து சாப்பிட செய்முறைகளையும் சொல்லித் தருகிறோம்!'' என்றும் டிப்ஸ் கொடுக்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.

வல்லாரைக் கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். முடக்கத்தான் மூட்டு வலியைப் போக்கும் என்பதால், குடும்பத்துடன் வந்திருந்த பலரும் தங்களின் குழந்தைகளுக்கு வல்லாரைக் கீரை தோசையும் வயதானவர்களுக்கு முடக்கத்தான் கீரை தோசையும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர். தோசைக்குத் தொட்டுக்கொள்ள பருப்புடன் ஒரு பிடி ஆவாரம் பூ சேர்த்து வேகவைத்த சாம்பாரும் கறிவேப்பிலைச் சட்னி, பிரண்டைத் துவையல் என மொத்தமும் 20 ரூபாய்தான் என்பது வியப்பு!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சர்க்கரையைக் கரைக்கும் ஓமக்களி
அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close