வண்ணங்களைக் கொண்டாடுவோம்!

''எண்ணம் போல் வாழ்வு என்பார்களே... அப்படி வண்ணம் போலவும்தான் வாழ்வு. ஆம்,  வண்ணங்கள் வாழ்வோடு நேரடித் தொடர்பு உடையவை'' என்கிறார் உள் அலங்கார நிபுணர் சரஸ்வதி ஸ்ரீனிவாசன். 

''ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. ஓர் இடத்தை எதற்காகப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ற வண்ணத்தைப் பூச வேண்டும்'' என்று சொல்பவர், எங்கெங்கு எந்தெந்த வண்ணங்களைப் பூச வேண்டும் என்று பட்டியலிட்டார்.

பொதுவாக வீடுகளின் உட்புறச் சுவர்களுக்கு வெண்மை அல்லது வெண்மை சார்ந்த வெளிர் நிற வண்ணங்களைப் பூசுவது நல்லது. அப்படிப் பூசினால், வீடு பிரகாசமாக இருக்கும். அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கும் எப்போதும் புத்துணர்வு இருக்கும்.

சூடான சமையல் அறையைக் குளுமையாக்க வெளிர் நிறங்களான வெள்ளை, க்ரீம் சாக்லேட் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

புனிதமான பூஜை அறையில் வெளிர் மஞ்சள், சந்தனம், வெளிர் பச்சை போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தலாம். மனதில் அமைதியையும் வாழ்க்கை மீதான நம்பிக்கையும் கொடுக்கும் நிறங்கள் இவை.

வயலட் நிறம், அமைதி, சம நிலை மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும். கவன சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே, படிக்கும் அறைகளுக்கு வயலட் வண்ணத்தைப் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு, பிரகாசமான தோற்றத்தைத் தரும். சந்தோஷமான சூழலை உருவாக்கும். வராந்தா மற்றும் சின்னக் குழந்தைகள் பயன்படுத்தும் அறைகளில் இந்த வண்ணத்தைப் பயன்படுத்தலாம்.

நல்ல வெளிச்சம் உள்ள குளியல் அறை எனில், மெரூன், நீலம் போன்ற அடர் வண்ணங்களையும், போதிய வெளிச்சம் இல்லாத அறை என்றால், வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள், வான் நீலம் போன்ற வண்ணங்களையும் பயன்படுத்தலாம்.

உஷ்ணத்தைப் பிரதிபலிப்பது சிவப்பு நிறம். சந்தோஷத்தையும் சுறுசுறுப்பையும் சிவப்பில் உணர முடியும். தைரியத்தைத் தரும். சூரிய வெளிச்சம் படாத இடங்களில் இதைப் பயன்படுத்தலாம்.

படுக்கை அறையில் வான் நீலம், இளம் சிவப்பு, வெளிர் பச்சை வண்ணங்களைப் பயன்படுத்தலாம். சூழலை அமைதியாக்கி, நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

இப்படி நம் கை வண்ணத்தின் மூலமே, வண்ணமயமான வாழ்வை உருவாக்கிக்கொள்ள முடியும்'' என்கிறார் சரஸ்வதி. அவருடைய வார்த்தைக்கு வலு சேர்க்கிறார் கலர் தெரபி நிபுணரான பாலகுமார். ''வண்ணங்கள் உங்கள் எண்ணங்களையே மாற்றும்'' என்கிறார் அவர்.  

''மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, மெரூன் இவை கதகதப்பான வண்ணங்கள். உடலின் வெப்பம் ஒரே சீராக இருக்க, குளிர் காலத்தில் இந்த நிறங்களில் உடை அணிய வேண்டும். குளிரால் வரும் நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள இவை உதவும்.

நீல வானம், பச்சை, பர்ப்பிள் போன்றவை குளிர் வண்ணங்கள். வெயில் காலத்தில் இந்த நிற உடைகளை அணியும்போது, உடலை உஷ்ணம் தாக்காமல் குளிர்ச்சியாக வைத்திருக்கும். அமைதியான மனநிலையை ஏற்படுத்தும்.

சிவப்பு, கறுப்பு, வெள்ளை, ஊதா, பிங்க், காப்பர், சில்வர் போன்ற நிறங்கள் வசந்த காலத்துக்கு உகந்தவை.

பிங்க், ரோஸ், கடல் ஊதா, வெளிர் ஊதா, பிரவுன், ரோஸ் இவை கோடைக் காலத்துக்கு உகந்த நிறங்கள்.

கோல்டு பிரவுன், ஆரஞ்சு போன்றவை இலையுதிர் காலத்துக்கு உகந்த நிறங்கள். வெளிர் ஆரஞ்சு, கோல்டன் மஞ்சள் போன்ற நிறங்கள் குளிர் காலத்துக்கு ஏற்றவை'' எனக் காலத்துக்கு ஏற்ற நிறங்களை விளக்கினார் பாலகுமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick