இரைப்பை என்கிற மிக்ஸி!

குடலின் அலை இயக்கத்தைப்பற்றி தொடர்ந்து பேசுவதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. குடல் அடைப்பு ஏற்படும்போது, குடலின் முன்பகுதி வீங்கிவிடும். அப்போது அங்குள்ள அலை இயக்கம் அதிகமாகி தாங்க முடியாத வயிற்று வலியாக மாறும். குடல் இயக்கம் ஒரு வழிப் பாதை என ஏற்கெனவே சொல்லி இருந்தேன். அடைப்பு ஏற்படும்போது இந்த அலை இயக்கம் கீழிருந்து மேலாக அல்லது தலைகீழாக அடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து நடக்கிறது. இதைத் தலைகீழான அலை இயக்கம் Reverse Peristalsis என்கிறோம். 

உணவுக் குழாயின் தசை அலை இயக்கம் 8 முதல் 10 நொடிகள் நேரமே எடுத்துக்கொள்கிறது. சாப்பிட்ட சில நொடிகளில் உணவு இரைப்பையை அடைகிறது. இரைப்பையை உணவு அடைந்த உடன் வட்டத் தசைகள் சுருங்கி உணவை உள்ளே தள்ளுகிறது. உணவு உள்ளே செல்லச் செல்ல வேகஸ் நரம்பு தூண்டப்பட்டு என்னுடைய பரப்பு விரியத் தொடங்குகிறது. ஒன்றரை லிட்டர் கொள்ளளவுக்குத் தக்கபடி என் பரப்பு விரிகிறது. இரைப்பையின் இரு பக்க வாசல்களும் மூடப்பட்டு மிக்ஸிபோல் ஆகிறது. 20 நொடிகளுக்கு ஒரு முறை சுருங்கி விரியும் வேலை நடக்கிறது. இரைப்பையின் செயல்பாட்டை மிக்ஸிபோல் என வெறும் வார்த்தை ஒப்பீட்டுக்காக நான் சொல்லவில்லை. உணவை மேலும் கீழுமாக திரும்பத் திரும்ப அனுப்பி இரைப்பைக்குள் நடக்கும் அரைத்தல் வேலையைப் பார்த்தால், நீங்களே அசந்துபோவீர்கள். நாம் சாப்பிட்ட உணவு கூழாக மாறும் வரை இந்த அரைத்தல் வேலை நடக்கும். கொஞ்சமும் ஜீரணமாகாத ஃபாஸ்ட் புட் அயிட்டங்களை எல்லாம் உள்ளே தள்ளுவதற்கு முன்னால் ஒரு நிமிடம் இரைப்பையின் சிரமத்தை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். பற்களால் கூழாக்க முடியாத உணவைக்கூட இரைப்பை அரைத்துக் கூழாக்குகிறது.

நாம் உணவு சாப்பிடும்போது இப்படித் தீவிரமாக வேலை பார்க்கும் இரைப்பை நாம் சாப்பிடாதபோது என்ன செய்யும் என உங்களுக்கு சந்தேகம் வரலாம். சாப்பிடும்போது 20 நொடிகளுக்கு ஒரு முறை சுருங்கி விரியும் இரைப்பை பட்டினிக் கிடக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை சுருங்கி விரியும். வெறுமனே இப்படி சுருங்கி விரிவதால் வலி ஏற்படுகிறது. பட்டினிகிடப்பவர்களுக்கு பசி மயக்கத்தோடு வலியும் வருவதற்கு இதுதான் காரணம். இரைப்பை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் சுருங்கி விரிவதால் பட்டினியால் உண்டாகும் வலி (Hunger Contractions) நான்கு நாட்கள் வரை விட்டு விட்டு நீடிக்கும்.

சிறுகுடலில் செரிமானமான உணவுக் கூழை பெருங்குடலுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி ரொம்பவே வியப்பூட்டக்கூடியது. ஒரு தொழிற்சாலையில் சகலவிதமான ஆட்கள் வேலை செய்தாலும், ஒவ்வொருவருக்குமான பணியை எப்படித் தனித்தனியே பிரித்து சங்கிலித் தொடர்போல் செய்கிறார்களோ... அதைப்போல்தான் சாப்பிட்ட உணவு சக்தியாக மாறும் வேலைகளும் நடக்கின்றன. சிறுகுடலில் செரிமானம் அடைந்த உணவை பெருங்குடலுக்கு அனுப்பிவைக்க குடலின் சுருங்கி விரியும் தன்மையினால், பல இணைப்புகளாக அமைந்த சிறுகுடலின் ஒவ்வொரு பாகத்தில் இருந்தும் உணவு கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே தள்ளப்படுகிறது. குடல் சுருங்கி விரிதலில் 50 நிமிடம் சலனம் இல்லாமல் அமைதியாக இருக்கும். பிறகு 30 நிமிடம் ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரியும். பிறகு ஐந்து நிமிடங்கள் வரை முறையாகச் சுருங்கி விரியும். ஒரேவிதமான இயக்கம்தான் என்றாலும், குடலின் செயல்பாடு நேரத்துக்குத் தக்கபடி எப்படி எல்லாம் மாறுகிறது என்பதையும் விளக்குவதற்காகத்தான் இவ்வளவு விளக்கமாக நான் சொல்கிறேன். இப்படிச் சுருங்கி விரிவதால் ஏற்படும் அழுத்தத்தினால் செரிமானம் அடைந்த உணவு கீழே இறங்கும். பெருங்குடலிலும் இதேபோல் பல இணைப்புகளைத் தாண்டித்தான் உணவு போகவேண்டி இருக்கிறது. இதுவரைப் பார்த்த இயக்கங்கள் சுறுசுறுப்பானவை. பெருங்குடலின் இயக்கம் சற்று மந்தமாக இருக்கும். இது தொடர்ச்சியாக 8 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை நடக்கும். அசைவு அலை 30 விநாடிகளும், தளர்வு அலை இரண்டு முதல் மூன்று நிமிடங்களும் நீடிக்கின்றன. உணவு மலக் குடலை அடையும்போது மலக் குடல் விரிந்து நரம்புகள் தூண்டப்படும்போது, ஆசன வாய் விரிந்து மலம் வெளியேற்றப்படுகிறது. காலையில் காபி சாப்பிட்ட உடன் லேசாக வயிற்றைக் கலக்குவதுபோல் இருக்கிறதே... அது ஏன் தெரியுமா? இரைப்பைக்கு செல்லும் காபியால் அங்கே இருக்கும் நரம்புகள் தூண்டப்பட்டு பெருங்குடல் சுருங்கி விரிவதால் மலம் வெளியேறுகிறது. இதனை நிணீstக்ஷீஷீநீஷீறீவீநீ க்ஷீமீயீறீமீஜ் என்பார்கள். இதனை அனிச்சை செயலாகவே மருத்துவ உலகம் சொல்கிறது. அப்படி என்றால், மூளையின் நரம்பு மண்டலத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அடுத்த இதழில் சொல்கிறேன்...

- மெல்வேன்... சொல்வேன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick