Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்ணீர் மண்ணில் ஸ்டெதஸ்கோப்!

டலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்ட 'தானே’ புயல் வீசி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அதன் பாதிப்பில் இருந்து அந்த மாவட்டத்து மக்கள் இன்னமும் மீளவில்லை. வாழ்வாதாரத்தை இழந்தும் மனமொடிந்தும் வாடிய கடலூர் மாவட்ட மக்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவருகிறோம். 'தொடர் மருத்துவ முகாம்கள் நடத்துவது’ என்று எடுக்கப்பட்ட முடிவின்படி, முதலில் பத்திரக்கோட்டை என்ற கிராமத்தில் கடந்த ஜனவரி 21-ம் தேதி மருத்துவ முகாம் நடத்தினோம். 

அடுத்த முகாம் இது... கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் அருகே உள்ள அரசடிக்குப்பம் புதூரில் பிப்ரவரி 23-ம் தேதி இரண்டாவது மருத்துவ முகாம் நடத்துவது என்று முடிவானது. சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்து மக்கள் சிறு தலைவலி வந்தால்கூட, பண்ருட்டி அல்லது நெய்வேலிக்குத்தான் செல்ல வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்கூட அரசடிக்குப்பம்புதூரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. ஆகையால், அரசடிக்குப்பம்புதூர் நம்முடைய அடுத்த களமானது. பாண்டிச்சேரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (PIMS) நிறுவனத்தின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு இதில் நம்மோடு இணைந்துகொண்டது.

கிராமத்துக்குச் செல்லும் முக்கிய வழித்தடங்களையும் மறித்துக்கொண்டு விழுந்த பல மரங்கள் இன்னமும் அகற்றப்படவில்லை. அதனால், பெருத்த சிரமத்துக்கு நடுவேதான் மருத்துவர்கள் குழுவோடு அந்தக் கிராமத்துக்குச் சென்றோம். அரசடிக்குப்பம்புதூரில் முகாம் நடத்த வசதியான கட்டடங்கள் இல்லை. அதனால், ஊர்ப் பிரமுகரான ராஜா உள்ளிட்ட கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வீடுகளில் மருத்துவ உபகரணங்களை வைத்துக்கொள்ளவும் முந்திரிக் களத்தில் முகாம் நடத்த பந்தல் அமைத்துக்கொள்ளவும் உதவினர்.

இதயம், கண், எலும்பு, குழந்தைகள் நலம், பெண்கள் நலம் எனச் சிறப்பு மருத்துவர்கள் குழு களம் இறங்கியது. கூடவே இ.சி.ஜி., எக்கோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் பரிசோதனை, ரத்த அழுத்தம் கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டன. சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும் என்.பிரபாகரன் ஆகியோர் வழங்கியிருந்த மருந்துகளைத் தேவையானவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கினார்கள்.

29 வயதான இளம்பெண் ருக்மணி தன்னுடைய கணவருடன் முகாமுக்கு வந்திருந்தார். ''சில மாசத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல கால் மூட்டில் பலத்த அடி. ஆபரேஷன் செஞ்சாதான் கால் சரியாகும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. ஆனா, ஆபரேஷன் பண்ணிக்க நிறைய செலவாகுங்கிறதால,  கால் வலியைப் பொறுத்துக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். உங்க மூலமாத்தான் இப்போ என் கால் பிரச்னை சரியாகப்போகுது சாமி'' என்கிறபோதே ருக்மணிக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

அவரை எலும்புச் சிகிச்சை சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அக்கறையோடு பரிசோதித்த டாக்டர், ''இவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு காப்பீடு உள்ளதால் செலவுபற்றிக் கவலை வேண்டாம். மருத்துவச் சிகிச்சையுடன், உணவும் அங்கேயே வழங்கப்படும். உடனடியாக புதுச்சேரி வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று ஆலோசனை கூறினார்.

அரசடிகுப்பம்புதூர் மட்டும் இல்லாமல் சுற்றி இருந்த கிராமத்து மக்களும் முகாமுக்கு வந்திருந்ததால் அன்று முகாம் நிறைவு பெறுவதற்குள்ளாகவே 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை நடந்தது. இதில், பார்வைக் குறைபாடு உடைய 50 பேரும் எலும்பு சம்பந்தமான உபாதைகளைக் கொண்ட 20 பேரும் அடக்கம்.  இவர்களில்  98 பேர் தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டத்தைப் பயன்படுத்தி இலவச சிகிச்சை செய்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதும் தெரிவிக்கப்பட்டது. முகாமுக்கு அடுத்த நாள் இவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கான சிறப்பு வாகன வசதியும் செய்யப்பட்டது. இதில் 17 பேர் தீவிரச் சிகிச்சைக்காக   பிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

டாக்டர் விகடனின் அடுத்த மருத்துவ முகாம் அமைப்பது குறித்து, நமது 'தானே புயல் துயர் துடைப்புக் குழுவினர்’ தேர்வு செய்துவருகின்றனர். மரங்களும் மனங்களும் ஒருசேர ஒடிந்துகிடக்கும் அந்த புயல் பூமிக்கு நம் அன்பும் ஆத்மார்த்த ஆதரவும் மட்டுமே நிவாரணிகள். வாருங்கள் வாசகர்களே... கை கொடுப்போம், 'தானே’ துயர் துடைப்போம்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி
சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close