அளவானால் பலம்.. அதிகமானால் பருமன்!

''பருப்பு வகைகளில் புரதச் சத்து, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு அவை வலிமை சேர்க்கின்றன. எண்ணெய் வித்துக்களும் பருப்பு வகைகளைப்  போலவேதான். ஆனால், இவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. மாடுகள் சாப்பிடும் புண்ணாக்கில் இருந்து எந்த அளவுக்கு அதற்கு சக்தி கிடைக்கிறதோ... அதேபோல் நாம் சாப்பிடும் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் இருந்தும் நம் உடலுக்குத் தேவையான சக்தி அளப்பரிய அளவுக்குக் கிடைக்கிறது. 

சிகிச்சை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு உடல் மெலிந்து, கொழுப்புச் சத்துக்களும் கரைந்துவிடும். இவர்களுக்குப் பருப்பு வகைகள், நல்ல பலன் அளிக்கும். சருமம் வறண்டு, தொய்வடைந்து இருக்கும் வயோதிகர்கள் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. துறுதுறுவென ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் உடலை உறுதியாகவைத்திருக்க இவை உதவுகின்றன. தினமும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சாப்பிடுகின்றனர் சிலர். இதனால், உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து எடை கூடிவிடும். எனவே, தொடர்ந்து ஒரேவிதமானப் பருப்பைச் சாப்பிடாமல், எல்லாவற்றையும் கலந்து தினமும் 1 முதல் 2 தேக்கரண்டி அளவில் மட்டுமே சாப்பிடுவது நல்லது. இதனால், உடல் எடை கூடும். சருமத்தில் பொலிவு உண்டாகும்.  

அதே நேரம், அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிற பழமொழியையும் நாம் மனதுக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும். பருப்பு வகைகளை அதிக அளவில் சாப்பிட்டால், கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவை அதிகரித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், சாப்பிடும் அளவில் சரியான கணக்கோடும் கவனத்துடனும் இருக்க வேண்டும்!'' என்கிறார் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி. 

பாதாம்

கெட்ட கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை இதற்கு அதிகம். சருமத்தைப் பொலிவாக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச் சத்து, ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வளரும் குழந்தைகள், பெரியவர்கள், எடை குறைந்தவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பாலுடன் கலந்து நாள் ஒன்றுக்கு ஐந்து பாதாம் பருப்புகள் சாப்பிடலாம். அதிகக் கொழுப்பு இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள் இதை ஒன்று இரண்டு சாப்பிடலாம்.  

 எள்

எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கால்சியம், புரதம், கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. எள்ளை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச் சத்தை உடல் எளிதாகக் கிரகித்துக்கொள்ளும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் பிள்ளைகள் ஆகியோர் தினமும் இரண்டு எள் உருண்டைகள் சாப்பிடலாம். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 முந்திரிப் பருப்பு

உடல் வளர்ச்சிக்குக் கை கொடுக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, மெக்னீஷியம், தாமிரம், மேங்கனீஷ், துத்தநாகம், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. நார்ச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் போன்றவை குறைந்த அளவே இருக்கின்றன. முந்திரிப் பருப்பை அதிக அளவில் சாப்பிடக் கூடாது. வளரும் பிள்ளைகள் உடல் எடை குறைந்தவர்கள், உடலுக்குப் புரதச் சத்து தேவைப்படுபவர்கள் தினமும் மூன்று முந்திரிப் பருப்புகள் சாப்பிடலாம். எண்ணெயில் வறுத்து காரம் சேர்த்துச் சாப்பிடும்போது உடலில் கொழுப்பு அதிகரித்து இதயப் பிரச்னை வரும். எனவே, இதய நோயாளிகள் கண்டிப்பாக முந்திரிப் பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

 வேர்க்கடலை

மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கோலின், புரதம், கொழுப்பு, கலோரி, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் சிறிதளவே இருக்கிறது. எடை குறைந்த குழந்தைகள், வளரும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். ஈரமான வேர்க்கடலையில் ஒரு வகையான பூஞ்சை வளரும். இதைக் கவனிக்காமல் சாப்பிட்டால், கல்லீரல் பாதிக்கப்படும். அதிக உடல் எடை மற்றும் கொழுப்புச் சத்து உள்ளவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சாரைப் பருப்பு

மலச்சிக்கலைத் தடுக்கும். அல்வா, பாயசம், மைசூர் பாக் போன்ற இனிப்பு வகைகளில் சாரைப் பருப்பு சேர்க்கப்படும். புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மிதமான அளவு மாவுச் சத்தும் குறைந்த அளவு ஆக்சாலிக் அமிலமும் இருக்கிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 முதல் 15 கிராம் பருப்பு சாப்பிடலாம். அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள் எப்போதாவது சாப்பிடலாம்.

அக்ரூட்

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அக்ரூட்டிலும் அதிகமாக இருக்கிறது; இது ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் ஆகியவையும் அதிக அளவில் இருக்கின்றன. கால்சியம், இரும்பு, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது. சைவ உணவு சாப்பிடுபவர்கள், இதய நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பருப்புகள் சாப்பிடலாம். வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஃப்ளெக்ஸ் சீட்ஸ்

உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்து, திடகாத்திரமாக வைத்திருக்கும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஒமேகா 3 ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு, மாவுச் சத்து, கால்சியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவே இருக்கின்றன. இரும்பு, பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. வாரம் 30 முதல் 35 கிராம் அளவில் சாப்பிடலாம். எல்லோருக்கும்,  குறிப்பாக இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

பிஸ்தா

உடல் வளர்ச்சியைக் கொடுப்பதால், வளரும் பிள்ளைகளுக்கு மிகவும் நல்லது. புரதம், கொழுப்பு, கலோரி, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம், துத்தநாகம், குளோரைடு ஆகியவை மிகவும் அதிக அளவில் இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோமின், நார்ச் சத்து ஆகியவை ஓரளவே இருக்கின்றன. குறைந்த அளவு மாவுச் சத்து இருக்கிறது. கொழுப்பு அதிகம் இருப்பதால், அதிக எடை இருப்பவர்கள் எப்போதாவது ஒன்று இரண்டு சாப்பிடலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் பிள்ளைகள் தினமும் மூன்று முதல் நான்கு பருப்புகள் சாப்பிடலாம். இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சூரியகாந்தி விதை

ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. வறண்ட சருமத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கார்போ ஹைட்ரேட், தைமின், ரிபோஃப்ளோமின், நியாசின் ஆகியவை ஓரளவே இருக்கின்றன. ஃபோலிக் ஆசிட் குறைந்த அளவு இருக்கிறது. இதய நோயாளிகள், அதிகக் கொழுப்பு இருப்பவர்கள் குறைவாகச் சாப்பிட வேண்டும். வளரும் பிள்ளைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஐந்து முதல் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick