மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்!

''நேத்துகூட நல்லாப் பேசிட்டு இருந்தார். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு வலின்னு கத்தியவர்தான்...''; ''இரண்டு தடவை அட்டாக் வந்துச்சு... அப்பவே கவனிச்சிருந்தால் பிழைச்சிருக்கலாம்!'' - மாரடைப்பால் உயிரிழப்பவர்களைப் பற்றிய கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் தொடங்கும். முன்கூட்டிய அறிகுறி எதுவும் இல்லாமல், சட்டென வந்து உயிரை உலுக்கி விளையாடும் மாரடைப்புக்கு இளம் வயதினரும் தப்புவது இல்லை. மாரடைப்புபற்றிய விழிப்பு உணர்வோ, முதலுதவி விவரங்களோ தெரியாததால்தான் இத்தகைய இழப்புகளுக்கு ஆளாக வேண்டிய  துயரம். 

''யாரோ ஒருவர் நம்முடைய மார்புப் பகுதியில் அழுத்துவது போன்று அதிகமான வலி இருக்கும். இதனுடன் அதீத வியர்வை மற்றும் மயக்கம் வரும் அறிகுறிகளும் இருக்கும். அது ஒருவேளை மாரடைப்பாக இருக்கலாம். 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது 'மைனர் ஹார்ட் அட்டாக்’. 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தால் அது 'சிவியர் ஹார்ட் அட்டாக்’. இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது அவசியம்' என்று வலியுறுத்துகிறார் ஃபிரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையின் இதய நோய்ச் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாராயணசுவாமி.

''பொதுவாக நான்கு வகையினருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக சர்க்கரை, ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு உள்ளவர்கள் மற்றும் பாதிப்புகள் இருந்தும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஒரு நாளைக்கு 10 சிகரெட்டுகளுக்கு மேல் புகைப்பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடனடியாகப் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம்.

நெஞ்சில் வலி, வியர்வை, மயக்கம் என மாரடைப்புக்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அப்படி மருத்துவமனைக்குச் செல்லும்போதே,           'ஆஸ்ப்ரின்’ மாத்திரையை அவருக்குக் கொடுக்க வேண்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்) உள்ளன. இவை ஒன்று சேர்ந்து ரத்த உறைதலை ஏற்படுத்தும். ஆஸ்ப்ரின் மாத்திரையானது ரத்தத் தட்டுகள் ஒன்று சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும். ஏற்கெனவே ஏற்பட்ட அடைப்பையும் சரிசெய்ய முயற்சிக்கும். அதனால்தான் அந்த மாத்திரையை மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறோம்.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு காற்று செல்ல வழிவிடாமல் கூட்டமாக சுற்றி நிற்கக் கூடாது. மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவருக்கு மருந்து மாத்திரை மூலம் ரத்தம் உறைதலை சரி செய்யலாமா அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாமா என்பதை டாக்டர் முடிவு செய்து சிகிச்சை அளிப்பார்.

ஒருவேளை மருத்துவமனை மிக தொலைவில் உள்ளது. கொண்டுசெல்வதற்குள் மாரடைப்பு வந்தவர் மயங்கிவிட்டார் என்றால், அவருக்கு சில முதல் உதவிகளைச் செய்யலாம். முதலில் அவரைப் படுக்கவைத்து, அவரது நெஞ்சு கூடு ஏறி இறங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அவரது கை அல்லது காலில் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். நெஞ்சில் காதை வைத்து இதயத் துடிப்பு உள்ளதா என்பதைப் பார்த்து, அவரது வாயோடு வாய் வைத்து காற்றை உள்ளே செலுத்த வேண்டும். பின்னர், நோயாளியின் அருகில் அமர்ந்து, இடது மார்புப் பகுதியில் நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்றுசேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும். இந்த வகையில், மூன்று முறை நெஞ்சில் அழுத்த வேண்டும். பிறகு ஒருமுறை வாயோடு வாய் வைத்துக் காற்றை ஊத வேண்டும். இந்த இரண்டையும் மாறி மாறித் தொடர்ந்து செய்ய வேண்டும். நெஞ்சில் அழுத்தும்போது வேகமாக அழுத்தக் கூடாது. அப்படிச் செய்வதால், விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவருக்கான இந்த முதல் உதவிச் சிகிச்சைகளைச் செய்வதோடு, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவும் முயற்சிக்க வேண்டும்.

நோயாளிக்குச் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், அவருக்கு சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கொடுத்து, சாப்பிடச் சொல்ல வேண்டும். மாரடைப்பின்போது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது. இதனால், ரத்தம் இன்றி இதயத் தசைகள் செயல் இழக்க ஆரம்பிக்கும். எனவே, எவ்வளவு சீக்கிரம் மாரடைப்பு வந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்கிறோமோ... அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்!'' என்றார்.

சமயோஜிதமாகச் செயல்பட்டால் சங்கடம் இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick