Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

பொதுவாக இரவானால் ஏன் தூக்கம் வருகிறது? என்றைக்காவது இதை யோசித்தது உண்டா? 

இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க - விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் 'மெலட்டோனின்’  எனப்படும் ஹார்மோன் இருள் கவிழும் இரவு நேரத்தில்தான் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும், இந்த 'மெலட்டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதால், பகற்பொழுதில் நல்ல விழிப்பு நிலையுடன் கூடிய புத்துணர்வு தொடர்கிறது. ஆனால், இதைத் தவிர்த்தும் பகல் வேளையில் தூக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உடல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிறகோ, சுகமான தூக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வாகுகொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது.

செரிமானத்தின்போது உணவில் உள்ள கொழுப்புச் சத்தானது 'கைலோமைக்ரான்’ (Chylomicrons) என்ற நுண் கொழுப்பாக உருமாற்றம் அடைந்து ரத்தத்தில் கலக்கும். அப்போது ஒருவிதக் கிறக்க நிலை எல்லோருக்கும் உண்டாகும். இதைத்தான் 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான - இயல்பான இந்த நிலையைத்தான் 'குட்டித் தூக்கம்’ என்கிறார்கள்.

அதிகப்படியாக 30 நிமிடங்கள்தான் குட்டித் தூக்கத்தின் ஆயுட்காலம். இதனால், உங்களது அன்றாட வேலைகளில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்றால், இந்தக் குட்டித் தூக்கம் வரவேற்கத்தக்கதே.

''இரவுத் தூக்கத்தில்கூடக் கிடைக்காத புத்துணர்வும் உற்சாகமும் இந்தக் குட்டித் தூக்கத்தில் கிடைக்கிறது என்றெல்லாம்கூட சிலர் பரவசப்படுவார்கள். இன்னும் சிலரோ, 'பகலில் எந்நேரமும் தூக்கம் வருகிறது; தூங்கி எழுந்தாலோ இரவு நேரத்தில் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ எனக் குறைபட்டுக் கொள்வார்கள். இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாததே, இதுபோன்ற தொல்லைகளுக்கான முக்கியக் காரணம்.

அதிகாலையிலேயே எழுந்து பாடம் படிக்கும் மாணவர்கள் அல்லது வேலைக்குச் செல்லும் இளம் வயதினர் சிலர் 'கிளாஸ் ரூமிலேயே தூங்கி வழிகிறேன்; அலுவலக நேரத்தில் கம்ப்யூட்டரிலேயே தலையைச் சாய்த்துக்கூடத் தூங்கிவிடுகிறேன். என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ என்று அலுத்துக்கொள்வார்கள். இது 'நார்கோலெப்சி’ (Narcolepsy) என்னும் பாதிப்பாகக்கூட இருக்கலாம். மூளையில் சரிவர அமிலச் சுரப்பு இல்லாதபோது இந்தக் குறைபாடு ஏற்படும். நார்கோலிப்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீதத் தூக்கம் வருவதோடு, வேறு சில பிரச்னைகளும் இருக்கும். சந்தோஷம், துக்கம் போன்ற எந்த உணர்ச்சியையும் இவர்கள் மிக அதிகமாக அனுபவிக்கும் சூழ்நிலைகளில், திடீரெனக் கை கால்கள் துவண்டு கீழே விழுந்துவிடுவார்கள். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே பாதிப்பில் இருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பிவிட இவர்களால் முடியும். மனம்விட்டுச் சிரிப்பதற்கும் அழுவதற்கும்கூட முடியாமல் சிரமப்படுவார்கள். இந்த நிலையை 'கேட்டப்ளெக்ஸி’ (Cataplexy)  என்கிறோம்.

தூங்க ஆரம்பிப்பதற்கு முன்னால் திடீரெனக் கை, கால் உள்ளிட்ட உடல் தசைகளை அசைக்க முடியாத நிலைக்குப் பெயர்தான் 'ஸ்லீப் பெரலிசிஸ்’ (Sleep  Paralysis). . இந்த நிலையில் உடல் உறுப்புகள் அசைவற்று இருக்குமே தவிர, பார்க்கும் திறன், சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளுதல் போன்ற உணர்வு ரீதியான விழிப்பு நிலை தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் வாய் பேச முடியாது. எனவே, பாதிப்புக்கு உள்ளானவர் மிரண்டுவிடக்கூடும்.

அடுத்ததாக, 'ஹிப்னாகாஜிக் ஹாலுசினேஷன்’ (Hypnagogic hallucination) என்னும் நிலை. இதில், கண் முன்னே ஏதேதோ உருவங்கள் தோன்றி மறைவது போன்ற மாயத் தோற்றங்கள் உண்டாகும். இந்த அறிகுறிகள் எல்லாமே 'நார்கோலெப்ஸி’யைச் சார்ந்தவைதான். இன்னும் சிலருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் தோன்றாமல், வெறுமனே அதீதமான தூக்கப் பிரச்னை மட்டுமே தொடர்ந்து நீடிக்கலாம்.

இது 'நார்கோலெப்ஸி’ வகையைச் சேர்ந்த பாதிப்புதானா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க 'எம்.எஸ்.எல்.டி. டெஸ்ட்’ (Multiple Sleep Latency Test)  என்ற பரிசோதனை ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பார்க்கலாம்.

- ஆராரோ ஆரிராரோ

ஸ்பெயின் வழக்கம்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களில் தங்களது ஊழியர்கள் குட்டித் தூக்கம் தூங்கி எழுவதற்குத் தேவையான தனியறை வசதிகளையே செய்து கொடுத்து இருக்கிறார்கள். காரணம்... இப்படித் தூங்கி எழுந்தவர்கள் இரட்டிப்புப் புத்துணர்வுடன் அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பதால், உற்பத்தியும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறதாம். ஸ்பானிஷ் கலாசாரத்தில், இதனை 'சியஸ்டா’ (Siesta பிற்பகலில் எடுத்துக்கொள்ளும் சிறு துயில்) என்று அழைக்கிறார்கள். எனவே, மதிய சாப்பாட்டுக்குப் பின்னர் தூக்கம் வருகிறது என்று குறைப்பட்டுக்கொள்ளாதீர்கள். தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
குட் நைட்!
இப்படிக்கு வயிறு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close