Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கழுத்து நிற்காத குழந்தை... கைகொடுத்த மருத்துவர்கள்!

களத்தில் விகடன்விகடன் 'தானே' துயர் துடைப்பு அணி

'தானே’ ஏற்படுத்திய தழும்புகளில் இருந்து இப்போதுதான் மெள்ள மீண்டு வருகிறது கடலூர் மாவட்டம். புயலின் பாதிப்புகளை மறந்து தன்னெழுச்சியாகப் புதுப் பாதைப் போடத் துடிக்கும் அந்த மாவட்ட மக்களுக்கு கைகொடுக்கும் சேவையைத் தொடர்ந்து செய்துவருகிறது விகடன் 'தானே துயர் துடைப்பு அணி.’ 

இன்னமும் மருத்துவ வசதி முழுமையாக எட்டாத கடலூர் மாவட்டக் கிராமங்கள்தோறும் தொடர் மருத்துவ முகாம்களை நடத்திவருகிறது டாக்டர் விகடன். இந்த எளிய மக்களின் உடல் நலத்தைப் பேணி காக்கும் முயற்சியாக பத்திரக்கோட்டையில் ஆரம்பித்த இந்தப் பயணம், அரசடிக்குப்பம் புதூர், செம்மங்குப்பம், சன்னியாசிப்பேட்டை கிராமங்களைத் தொடர்ந்து தற்போது தாழம்பட்டு கிராமத்தில்.

இந்தக் கிராமத்து மக்கள் மருத்துவச் சிகிச்சைக்காக 6 கி.மீ. தூரம் பயணித்து பண்ருட்டியை அடைய வேண்டிய அவல நிலை. வாழ்வாதாரத்தையே பிடுங்கி எறிந்த புயல் பாதிப்புக்குப் பிறகு, மன அழுத்தத்தினாலும் நோய்களாலும் இவர்கள் அனுபவித்துவரும் சோகங்கள் சொல்லி மாளாதவை.

''வருமானத்துக்கு வழி இல்லாமப்போன இந்த நேரத்துல நோய் நொடின்னு படுத்துட்டதால, என்ன ஏதுன்னு கேட்கக்கூட நாதியில்லாமக் கிடக்குறோம்... புயலு மழைக்கு அப்புறமா காய்ச்சல், சளின்னு தொடர்ந்து சிரமத்தோடதான் பொழச்சிக்கெடக்குறோம். இடுப்பு வலி தாங்க முடியாம டவுனு ஆஸ்பத்திரிக்குப் போனேன். போட்டோ (ஸ்கேன்) எடுத்துப் பாத்துட்டு ஊசி போட்டாங்க. ஆனாலும், அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய்வந்து கவனிச்சுக்க முடியலை... தெய்வாதீனமா நீங்களே எங்களைத் தேடி வந்துருக்கீங்க...'' என்று இடுங்கிய கண்களில் நீர் கசியக் கைகூப்பினார் 77 வயது ரஞ்சிதம் பாட்டி.

நோயாளிகளின் நோய் அறிகுறிகளை மட்டும் கேட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்காமல், அவர்களது சொந்தப் பிரச்னைகளையும் அக்கறையோடு காதுகொடுத்துக் கேட்டு சிகிச்சை அளித்த புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் சேவை தாழம்பட்டு மக்களை நெகிழவைத்தது.

தனது ஒரு வயதுக் குழந்தைக்குத் தலையைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு கழுத்து உறுதியாக நிற்காததால், படுக்கவைக்கப்பட்ட நிலையிலேயே குழந்தையை முகாமுக்கு கொண்டுவந்து இருந்தனர் முருகவேல் தம்பதியினர்.

''கழுத்து நிற்காததுனால இன்னமும் படுத்த படுக்கையாகவேத்தான் கிடக்கிறான். திடீர்னு வலிப்பு வேற வந்துடும். நான் கூலி வேலைக்குத்தான் போறேன். வர்ற வருமானத்துல மருத்துவச் செலவைத் தாக்குப்பிடிக்க முடியலை. முகாம்ல என் குழந்தையை நல்லவிதமாக் கவனிச்சுப் பாத்தாங்க. நாளைக்கே பிம்ஸ் மருத்துவமனைக்குக் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க. ரெண்டு நாள் தங்க வேண்டி இருக்குமாம். எப்படியும் எங்க குழந்தை தலை நிமிர்ந்துடுவான்கிற நம்பிக்கை இப்போதான் வந்திருக்கு...'' என உருகினார் முருகவேல்.

முகாமில் பங்கேற்ற மக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் ஈ.சி.ஜி. பரிசோதனைகளும் செய்யப்பட்டன. ''எங்க ஊர்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜனங்க இருக்கோம். எல்லாருமே கூலித் தொழிலாளிங்கதான். ஆஸ்பத்திரி, அத்தியாவசியப் பொருட்கள்னு என்ன ஒரு தேவைன்னாலும், நாங்க பண்ருட்டிக்குத்தான் போயாகணும். இங்கே உள்ள வயசானவங்க நிறையப் பேருக்கு கை, கால் மூட்டு வலி அதிகமா இருக்கு. குழந்தைங்களுக்கு சளி, காய்ச்சல் தொந்தரவும் அதிகம். இவங்களை எல்லாம் டவுனுக்குக் கூட்டிப்போய் ட்ரீட்மென்ட் கொடுக்குறது அவ்வளவு சுலபம் இல்லை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல...'' என்கிறார் தாழம்பட்டு ஊராட்சித் தலைவர் விஜி உக்கரவேல்.

கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தாழம்பட்டு அரசுப் பள்ளியில் நடைபெற்ற நம்முடைய மருத்துவ முகாமில், சுற்று வட்டாரக் கிராம மக்கள் சுமார் 550 பேர் சிகிச்சை பெற்றார்கள். பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை மருத்துவம், இதயம், எலும்பு, தோல், காது-மூக்கு-தொண்டை, கண் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 90-க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி சென்று மேல் சிகிச்சை பெற்றுள்ளனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கான உதவியை சென்னை மடிப்பாக்கம் பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும் என்.பிரபாகரன் ஆகியோர் நம்முடன் இணைந்து செய்திருந்தனர்.

பாதிப்புகளில் இருந்து மீளாமல் தவிக்கும் கிராமங்களை நோக்கி நிஜமான அக்கறையோடு அடியெடுத்துவைக்கிறது டாக்டர் விகடன். வாசகர்களின் ஆதரவுடன் அந்தக் கண்ணீர் பூமியில் நம் கைகொடுப்புகள் நீண்டுகொண்டே இருக்கும்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வெயில் கால வியாதிகள்.. எச்சரிக்கையாக இருக்க எளிய வழிகள்!
தியானம் பழகு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close