Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்!

'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை. 

விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக் கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெரும் அளவு கடுக்காய் மரங்கள் உள்ளன. இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது.

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் 'டெர்மினேலியா செபுலா’   (Terminalia chebula). 60 முதல் 75 அடி உயரம் வரை வளரக்கூடியது.

''மருத்துவக் குணங்கள் ஏராளமாக இருப்பதால், 'வைத்தியரின் காதலி’ (பிஷக் ப்ரியா) என்று கொண்டாடப்படுகிறது'' என்கிறார் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவி விரிவுரையாளர் ஜெயா எபனேசர்.

கடுக்காய்க் கொட்டையை நீக்கிவிட்டு மீதி உள்ள மேல் தோலை இடித்துச் சலித்து உண்ணலாம். கெட்டிப்படாமல் இருக்க, பசுநெய் சேர்த்துப் பிசைந்துவைக்க வேண்டும். இது ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது, மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும். நினைவாற்றலைப் பெருக்கும்.

கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும்.

கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.

கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.

கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.

கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.

25 கிராம் கடுக்காய்ப் பொடியில் ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.

கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.

கடுக்காயும் காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும்.

பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும் சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.

கடுக்காய்த் தூளையும் பசு நெய்யையும் சம எடை எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு மெல்லிய துணியால் மூடி 40 நாள் வெயிலில் வைத்து வடிகட்டி 5 முதல் 10 மி.லி. அளவு காலை - மாலை உண்டுவந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண், மூல முளை, பவுத்திரம் போன்ற நோய்கள் தீரும்.

கடுக்காயைத் தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சூரிய ஒளியில்வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால், மேக நோயில் வரும் கண் நோய், கண் பீளை வடிதல், கண் சிவப்பு நீங்கும். கடுக்காயை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மி.லி. கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால், இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச் சிக்கலும் தீரும்.

கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு, ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும்.

கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால், ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரப்பட்டை: தோல் நோய்களைப் போக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
விபத்து காப்பீட்டு பாலிசி!
பாதுகாக்க 10 வழிகள்: கண்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close