நலம், நலம் அறிய ஆவல்!

“சமீபத்தில் கேரளாவிலிருந்து தமிழகத்தின் கூடலூருக்கு 70 பயணிகளுடன் பஸ் வந்தது. டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. குடியிருப்புக்கள், 40 அடி பள்ளம் என சுற்றிலும் ஆபத்துக்கள். பஸ்ஸை சாலையில் இருந்த மண் மேட்டில் மோதி நிறுத்தி, 70 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார் டிரைவர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பு அவர் உயிர் பிரிந்துவிட்டது. இதை சடன் கார்டியாக் அரெஸ்ட் (Sudden cadiac arrest) என்போம். சற்று விழிப்புடன் இருந்தால், இதுபோன்ற உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கார்டியாலஜி மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி மருத்துவர் ஜாய் எம்.தாமஸ்.

கார்டியாக் அரெஸ்ட் பற்றி மேலும் கூறுகையில், “இதயத்தில் ஓர் இயற்கை மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இதயம் துடிப்பதற்கு இந்த மின்ஆற்றல்தான் காரணமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படும் பிரச்னை காரணமாக, திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயத் துடிப்பு தடைப்பட்டு மூளை மற்றும் உடலுக்கு ரத்த ஓட்டம் பாய்வது தடைபடுகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிரிழப்பு ஏற்படலாம். இதுவும் மாரடைப்பும் ஒன்று அல்ல.

மாரடைப்பு என்பது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் நிகழ்கிறது. மாரடைப்பு காரணமாகக்கூட சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம். வேகமாக ஓடும்போது இதயம் வேகமாக படபடப்புடன் துடிக்கும். ஆனால், உட்கார்ந்திருக்கும்போதே அதுபோன்ற படபடப்பான துடிப்பு இருந்தால், டாக்டரிடம் பரிசோதித்து ஆலோசனை பெற வேண்டும். மாரத்தான், ஓட்டப்பந்தயம், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை ஈ.சி.ஜி, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு ஏ.ஐ.சிடி என்ற பிரத்யேகக் கருவியைப் பொருத்தவேண்டும். இது இதய பாதிப்பு ஏற்படும்போது மின்சாரத்தைச் செலுத்தி உயிரைக் காப்பாற்றும்.

மக்கள்தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம். கோல்டன் அவர் என்று சொல்லக்கூடிய ஒரு மணி நேரத்துக்குள் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு
வருவது மிகவும் அவசியம்.

இதய நோய்கள் ஏற்படுவதற்கு ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை அளவு அதிகரிப்பது, உயர் ரத்த அழுத்தம், மரபியல், உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறை என்று ஐந்து முக்கியக் காரணிகள் உள்ளன. இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மிகவும் மோசமானது. இவற்றை அவ்வப்போது பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும் ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம்” என்கிறார் டாக்டர் ஜாய் தாமஸ்.

அன்பு வாசகர்களே, நவம்பர் 16 முதல் 30-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், மாரடைப்பு, சடன் கார்டியாக் அரெஸ்ட், இதய செயல் இழப்பு உள்ளிட்ட இதய நோய்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள், சிகிச்சைமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இதயநோய் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி மருத்துவ நிபுணர் ஜாய் எம்.தாமஸ்

  இதயத்தின் செயல்பாடு என்ன?

  இதய நோய்கள் ஏற்பட என்ன காரணம்?

  இதய நோய்களைத் தவிர்க்க என்ன வழி?

  மாரடைப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?

  இதய மின்னோட்டத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

  பேஸ்மேக்கர் ஏன் பொருத்தப்படுகிறது?

  சடன் கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?

  சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏன் ஏற்படுகிறது?

  திடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன வழி?

  இதய செயல்இழப்பு ஏன் ஏற்படுகிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick