இறந்த பின்னும் உலகை ரசிக்க!

''இருக்கும் வரை ரத்த தானம்.

இறந்த பின் கண் தானம்!’ என்று ஆட்டோக்களில் கூட எழுதி வைக்கிறோம்.கண் தானம் மற்றும் உடல் உறுப்புதானத்துக்கு பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்குத்தான் முதல் இடம். ஆனாலும் தானம் கிடைப்பது  மிகவும் குறைவுதான். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும், நெருங்கிய உறவு இறந்த துக்கத்தில் உடன் இருப்பவர்கள் உடனே அதுபற்றி யோசிக்காததுமே இதற்குக் காரணங்கள். கூடவே, கண்தானம் பற்றி  பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளன' என்கிறார் கண் டாக்டர் அருள்மொழிவர்மன்.

''கண்ணின் மேல்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுதான், கருவிழி எனப்படும் கார்னியா. இதன் உதவியால்தான் நம்மால் பார்க்க முடிகிறது. விபத்து, வயது மற்றும் கூர்மையான பொருட்கள் தாக்குவது போன்ற காரணங்களால் கார்னியா பாதிக்கப்பட்டு பார்வையே சிலருக்குப் பறிபோகலாம். இதற்கு ஒரே தீர்வு, கண் தானம் மட்டும்தான். இறந்த ஒருவரின் கருவிழிகளை, பாதிக் கப்பட்டவருக்குப் பொருத்து வதன் மூலம், பலருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வழி செய்யலாம். 1905ஆம் ஆண்டு 'முதல் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை’ நடந்தது. உலக அளவில் இதுவரை 49 லட்சம் பேர் கருவிழிப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். தானம் செய்யப்படும் கண் மூலம் தங்களுக்கு பார்வை கிடைக்கும் என இவர்கள் காத்திருக்கிறார்கள்.  

கண் தானம்

இறந்தவரின் கண்களை எடுத்து, பார்வை வேண்டி காத்திருக்கும் இருவருக்குப் பொருத்தி உலகைப் பார்க்க வைப்பதே கண்தானம். கண்தானம் செய்ய விரும்புபவர்கள், உயிருடன் இருக்கும்போதே கண் வங்கியை அணுகி, தங்கள் கண்களை தானமாகத் தருவதற்கான, உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும். தன்னுடைய விருப்பத்தைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் கண் வங்கிக்கு தகவல் கொடுக்க முடியும்.

ஒருவரின் உயிர் பிரிந்த ஆறு மணி நேரத்துக்குள், அவரது கண்களை எடுத்துவிட வேண்டும். இதற்கான வழிமுறைகள்:

இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். மின்விசிறியை இயக்கக்கூடாது. இறந்தவரின்  தலையை, ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி, படுக்கவைக்க வேண்டும்.

அருகில் இருக்கும் கண் வங்கிக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒப்புதல் மற்றும் இரண்டு சாட்சிகள் இருந்தால் மட்டுமே, கண் தானம் செய்ய முடியும்.

கண்ணை தானமாகப் பெறும்போது, நோய்த்தொற்று உள்ளதா என்பதை அறிய இறந்தவரின் ரத்தம் சிறிதளவு சேகரிக்கப்படும்.

கண் தானம் அளிக்கும் அறுவை சிகிச்சையால் இறுதிச்சடங்கு பாதிக்கப்படுமா?

இறுதிச்சடங்கில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. கண்களை ஆபரேஷன் மூலம் எடுப்பதற்கு 20 நிமிடங்களாவது ஆகும்.  மேலும், கண் தானம் செய்தால் கண்ணில் குழி விழுவது போன்ற எந்தப் பாதிப்பும் இருக்காது.

    யாரெல்லாம் கண் தானம் செய்யக் கூடாது?

மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், ரத்தப் புற்றுநோய், ரேபீஸ், மூளையில் ட்யூமர் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற இயலாது. ஆனால் ஆஸ்துமா, காசநோய், உயர் ரத்த அழுத்தத்தால் இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற முடியும்.

கண் தானத்துக்குப் பிறகு ஒருவருடைய விழிகள் மற்றவருக்கு எப்படிப் பொருத்தப்படுகிறது?

கருவிழிகள்தான் கண் தானத்தின்போது அதிகமாக எடுக்கப்படும். கருவிழிகளை மற்றொரு நோயாளிக்குப் பொருத்த, குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். அதில் நோயாளியின் தேவைக்கு ஏற்ப கருவிழிகள் பொருத்துவது மாறுபடும்.

கண் தானத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்?

அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்க வேண்டும். கருவிழிகளை மட்டும் எடுப்பது, முழு கண்களையும் எடுப்பது என கண் தானத்தில் இரண்டு வகைகள் உண்டு.

கண் தானத்துக்குப் பிறகு, கண்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன?

முன்பெல்லாம் தானம் பெற்ற கண்களை, சில நாட்களுக்குள் மற்றவர்களுக்குப் பொருத்திட வேண்டும். ஆனால் தற்போது அதிகபட்சம் 28 நாட்கள் வரை கண் விழிகளைப் பாதுகாப்பாக வைக்க முடியும்.

ஒரு கண் விழியில் இருந்து இரண்டு லேயர்களைப் பிரித்து எடுக்கலாம். அது இரண்டு கண் நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது. இப்படி ஒரு கண் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு பார்வை கிடைக்கும். அதுவே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனை!

 

இ.லோகேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick