நலம், நலம் அறிய ஆவல்!

வலியா? பதற்றம் வேண்டாம்!எஸ்.விஜயஷாலினி, படம்: கு.கார்முகில்வண்ணன்

“உடலில் எங்காவது வலி வந்தாலே, துடித்துப்போகிறோம். அதை உடனே சரிசெய்தால்தான் மனசு அடுத்த வேலையைப் பற்றிச் சிந்திக்கிறது. வலி என்பது தொடுதல், அழுகை போன்ற ஓர் உணர்வுதான். நம் உடலைப் பாதுகாக்க, தற்காப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் வலி ஏற்படுகிறது” என்கிறார் டாக்டர். ராகவேந்திரன்.

‘‘வலி என்பது  ஓர் அறிகுறிதான். எப்போதெல்லாம் வலி அதிகமாகிக் கஷ்டப்படுகிறோமோ, அப்போது வலி நோயாக மாறிவிட்டது என்று அர்த்தம். உடலில் ஏற்படும் சின்ன பிரச்னைகள், வலி மூலம் தெரியவில்லை என்றால், நாம் கண்டுகொள்ளாமல் இருந்து அது நோயாக மாறிவிடும். ‘‘என்னைக் கவனி’’ என்கிற அறிகுறிதான் வலி. உதாரணமாக, காலில் முள் குத்தினால் வலி ஏற்பட்டால் மட்டுமே, அது நமக்குத் தெரியவரும். அதேபோல் நம் உடலில் எந்தப் பகுதியிலாவது வலி ஏற்பட்டால், அங்கே ஏதோ ஒரு பாதிப்பு உள்ளது என்பதை உணர்த்தவே வலி ஏற்படுகிறது.

 திடீர் என்று ஏற்படும் வலி, நாள் பட்ட வலி என வலியில் இரண்டு வகை உண்டு. அடிபடுதல், விபத்தால் ஏற்படக்கூடிய எலும்பு முறிவு போன்றவற்றால் ஏற்படுவது முதல் வகை. இதற்கு உடனடிச் சிகிச்சைகள் மேற்கொண்டால் வலியைக் கட்டுப்படுத்தலாம். நாள்பட்ட வலிக்கு பிசியோதெரப்பி உள்ளிட்ட முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன சிகிச்சை செய்தும் வலி கட்டுப்படவில்லை என்றால், வலியை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பில் ஊசி போடுவது அல்லது ரேடியோ சிகிச்சை  தருவது போன்றவற்்றின் மூலம் வலியைக் கட்டுப்படுத்தும் வகையில் நவீன சிகிச்சை முறைகள் நிறைய வந்துவிட்டன” என்கிறார் டாக்டர் ராகவேந்திரன்.

‘‘இப்போது பரவலாக முதுகுவலிதான் பலருக்கும் பெரிய பிரச்னை. அடிபடுதல், எலும்பு தேய்மானம், டிஸ்க் பிரச்னை போன்ற பல பிரச்னைகளால் முதுகுவலி வரும். பிசியோதெரப்பி, இன்டர்வென்ஷன் சிகிச்சை முறை, வலியை உணர்த்தும் நரம்பைச் செயல் இழக்கச் செய்வது போன்று ஒவ்வொரு நிலைக்கும் பிரத்யேகமானச் சிகிச்சைமுறைகள் இருக்கிறன.

நவீன சிகிச்சைமுறைகளால் பிரசவவலிகூட மிகவும் சுலபமாகிவிட்டது. பொதுவாக சிசேரியன் என்றால், மயக்க மருந்து செலுத்தப்படும்.  சுகப்பிரசவத்தில் மருந்து செலுத்தப்படுவது இல்லை. இதனால் பிரசவத்தை நினைத்து  பல பெண்கள் கவலைப்படு வார்கள். இப்போது இதற்கும் தீர்வு வந்துவிட்டது. சுகப்பிரசவம் என்றாலும்கூட அவர்களும் வலிநீக்க ஊசியை எடுத்துக்கொள்ளலாம். இதனால் குழந்தையை வெளியே தள்ளுவது போன்ற உணர்வுகள் இருக்கும். வலியே இருக்காது” என்கிறார் டாக்டர். இனி வலியைக் கண்டு பயப்படத் தேவை இல்லை, அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டால் மட்டும் போதும்.

அன்பு வாசகர்களே, நவம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், வலி ஏன் ஏற்படுகிறது, வலியைத் தவிர்க்க என்ன வழிகள், மூட்டு- முதுகு வலிக்கு நவீன சிகிச்சை முறைகள் என்ன உள்ளன என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார்  டாக்டர் ராகவேந்திரன்

  வலி என்றால் என்ன?

  எதனால் வலி ஏற்படுகிறது?

  வலியில் எத்தனை வகை உண்டு?

  நாள்பட்ட வலிக்கு என்ன தீர்வு?

  எப்போதெல்லாம் வலி ஏற்படும்?

  முதுகுவலி ஏன் ஏற்படுகிறது?

  முதுகுவலியை எப்படி கட்டுப்படுத்துவது?

  மூட்டுவலி யாருக்கெல்லாம் வரும்? தடுக்க என்ன வழி?

  வலி இல்லாத பிரசவம் சாத்தியமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick