வேர்க்க... விறுவிறுக்க... வியர்வை சீக்ரெட்ஸ்

பு.விவேக் ஆனந்த், படங்கள்: கே.ராஜசேகரன்

உச்சி வெயிலில்கூட சிலருக்கு வேர்க்காது. ஏசி குளிரிலும் கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி இருப்பது சிலரது வழக்கம். பொதுவாக வியர்வை என்றாலே, நினைவுக்கு வருவது அருகில் இருப்போரை முகம்சுளிக்க வைக்கும் அதன் வாசனைதான். வியர்வை ஏன் வருகிறது? எல்லோருக்கும் அது ஏன் ஒரே மாதிரியாக இல்லை?  கேள்விகளை, நாளமில்லாச்சுரப்பி நிபுணர் (Endocrinologist) ராம் மகாதேவன் முன் வைத்தோம்.

“நமது உயிரைக் காப்பதில் வியர்வைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. வெப்பத்தால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உடலில் உள்ள உப்பு மற்றும் தண்ணீரின் அளவை சமநிலையில் வைக்கவும், உடலில் இருந்து வியர்வை வெளிப்படுகிறது. இது நம் உடலைக் காக்கும் ஒரு வழிமுறை. 

நாம் ஓடும்போதும், நடக்கும்போதும், வேலை செய்யும்போதும் சக்தி செலவாகும். இதனால், உடலுக்குள் திடீரென அதிகரிக்கும் வெப்பநிலையைச் சமாளிக்க தானியங்கி நரம்புகளின் வழியாக அசிட்டையில்கொலின் (acetylcholine) என்ற திரவம் சுரந்து மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் (hypothalamus) என்ற பகுதிக்கு சிக்னல் வரும். உடனே, மூளையானது வியர்வை சுரப்பிகளுக்கு சிக்னல் தர, வியர்வை சுரப்பிகள் மூலமாக நீரும் உப்பும் நம் உடலில் இருந்து வெளியேறும்.

“வியர்வை வெளியேறும்போது எதனால் நாற்றம் வருகிறது?”

வியர்வைக்கு வாசனை கிடையாது. நமது உடலில் எக்ரைன் (eccrine gland ), அப்போக்ரைன் (apocrine gland) என இரு வகையான வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. உடல் முழுவதும் பரவலாக இருக்கும் வியர்வைச்சுரப்பி எக்ரைன். அக்குள் மற்றும் மடிப்புகள் போன்ற இடங்களில் இருக்கும் சுரப்பிகள் அப்போக்ரைன். இந்த சுரப்பிகள் எண்ணெய் சுரப்பிகளின் அருகே அமைந்திருக்கின்றன. சீபம் (oil secreting glands) எனப்படும் எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வரும் எண்ணையுடன் வியர்வையும் கலந்து அதனுடன் பாக்டீரியாவும் சேர்வதால்தான் வியர்வை நாற்றம் வருகிறது. குழந்தைகளுக்கு வியர்க்கும் போது நாற்றம் வராது. ஆண், பெண் இருபாலாரும் பருவமடையும் காலகட்டத்தில் இருந்துதான் எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பது, முடி வளர்வது போன்ற ரசாயன மாற்றங்கள் நடக்கும். அப்போதுதான் வியர்வையுடன் நாற்றம் வர ஆரம்பிக்கிறது.

“பதற்றத்திற்கும் வியர்வைக்கும் என்ன சம்பந்தம்?

“சிலருக்கு பயம், பதற்றம் காரணமாக, அதிகமாக வியர்த்துக் கொட்டும். பெரும்பாலும் மாணவர்கள் பரீட்சை சமயங்களில் அதிகம் பயப்படுவார்கள். பேப்பரே நனைந்துவிடும் அளவுக்கு வியர்க்கும். இவர்களுக்கு கவுன்சிலிங் தந்து பயம் பதற்றத்தைக் குறைப்பதன் மூலம் வியர்ப்பதைக் குறைக்க முடியும்.

சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்கால்களில் எந்தவிதப் பதற்றமும் இல்லாதபோதும், அதிகளவில் வியர்க்கும். இதனால் அவர்களது அன்றாட வாழ்வே பாதிக்கப்படும். இதை ஹைபர் ஹைட்ரோசிஸ் (hyper hidrosis)அதாவது அதிகமாக வியர்வை சுரத்தல் நோய் என்போம். இதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மருந்துகள் மூலம் சரிப்படுத்தலாம். அப்படியும் சரியாகவில்லை என்றால், அறுவைசிகிச்சை மூலம் இந்தப் பிரச்னை சரி செய்யப்படும்.

மாதவிடாய் காலங்களில் தொடர்ந்து அதிகளவில் வியர்த்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். சிலருக்கு தைராய்டு சுரப்பி பிரச்னை காரணமாகவும், அட்ரினல் சுரப்பி பிரச்னைகளாலும் வியர்க்கும். இவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சை தேவை. பொதுவாக வியர்வை என்பது உடலுக்கு அத்தியாவசியத் தேவை. உப்பும் தண்ணீரும் உடலை விட்டு வியர்வை மூலமாக வெளியேறுவது உடலுக்கு மிகவும் நல்லது. நன்றாக வியர்க்கும் அளவுக்கு வேலை செய்து தினமும் நன்றாகத் தேய்த்துக் குளித்தாலே, உடல் சுத்தமாக இருக்கும். வியர்வை நாற்றம் வராது.

 வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த: தோல் மருத்துவர் எஸ்.சுகந்தன்:-

 தினமும் இரண்டு முறை நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும்.

 அக்குள் பகுதிகளில் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்க முடியாது. ஆனால், அடிக்கடி டிரைகுலோசான் உள்ள ஆன்ட்டிபாக்டீரியா சோப்களைப் பயன்படுத்திக் குளிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

 ஆன்ட்டி ஃபங்கல் (anti fungal), ஆன்ட்டி பாக்டீரியா உள்ள பவுடர்களைப் பயன்படுத்த வேண்டும் .

 சிலருக்கு அடிக்கடி குளித்தாலும் கூட வியர்வை நாற்றம் அதிகமாகவே இருக்கும் அவர்கள் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் (anti persipirent) டியோடிரன்ட் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். குளித்து முடித்தவுடன் நன்றாகத் துடைத்துவிட்டு வியர்வை வருவதற்கு முன்பு, உடல் முழுவதும் பரவாக நன்றாக ஸ்ப்ரே செய்ய வேண்டும். சிலர் அக்குள் பகுதிகளில் மட்டும் ஸ்ப்ரே செய்வார்கள். இது தவறு.

 ஐயன்ட்டோபோரோசிஸ் (Iontophorosis) என்ற கருவி மூலம் மின்சாரம் செலுத்தி வியர்வையைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் போட்டாக்ஸ் (botox) என்ற ஊசியை அதிகமாக வியர்க்கும் இடங்களில் போட்டுக்கொள்ளும்போது ஆறு மாதங்கள்் வரை அந்த இடத்தில் வியர்க்காது. ஆனால், இதனை தோல் மருத்துவரின் அறிவுரையின்றி  உபயோகப்படுத்தக் கூடாது.

கொஞ்சம் கவனிங்க பாஸ்!              

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick