Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாட்டு மருந்துக்கடை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கு.சிவராமன் சித்த மருத்துவர்

காலிப் பெருங்காய டப்பா” என தோற்றுப்போனவர்களைச் சமூகம் ஏளனப்படுத்தும் சொல் நமக்கு நினைவிருக்கும். பெருங்காயம் அப்படியான சமாச்சாரம் அல்ல. அதன் மணத்தைக் கண்டு முகம் சுளித்த அமெரிக்கர், ஒருகாலத்தில் அதைப் பிசாசு மலம் என ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. இப்போது, நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப் போல, ஸ்பானிஷ் ஃப்ளூ பல்லாயிரம் பேரை 1910-களில் கொன்று குவித்தது.  பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராக செயலுற்றதைக் கண்டறிந்து, பெருங்காயத்தைக் கழுத்தில் தாயத்து மாதிரி அவர்கள் கட்டித் திரிந்ததும், அதன் பின், அதற்கு ‘கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டதும் வரலாறு சொல்லும் செய்திகள்.

பன்றிக் காய்ச்சல் தடுக்கும் பெருங்காயம் தைவானில் உள்ள ஆய்வாளர்கள் இந்த பெருங்காயம் பன்றிக்காய்ச்சலுக்குப் பயனாகும் அமாட்டடின்/சைமடின் வைரஸ் மருந்துகளைப் போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக்கொண்டது எனக் கண்டறிந்தனர். அதன் பின், ஏன் இந்தப் பெருங்காயம் நல்ல மாத்திரைகளாக வரவில்லை என்ற செய்தி தெரியவில்லை. மருந்து அரசியல், காப்புரிமை மருத்துவ வணிகத்தில் சிக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். நாம், இப்போது கொளுத்தும் வெயிலில், தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடலும் குளிரும், கால்சியமும் பெருகும், லாக்டோபாசில்லஸ் எனும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும்.  கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச் சுருட்டக்கூடும்.

கலப்படப் பெருங்காயம்?

நல்ல தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதுவே, கருத்திருந்தால் வாங்க வேண்டாம். பெருங்காயத்தில் நடக்கும் கலப்படங்கள் ஏராளம். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்த்துப் பெருங்காயம் சந்தையில் உலாவுவதால், மூக்கைத் துளைக்கும் வாசம் தந்தாலும், கண்ணை விரித்துப்பார்த்துதான் காயம் வாங்க வேண்டும். அதே போல், அதன் மணம் எளிதில் போய்விடுமாதலால், நல்ல காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருப்பது, அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கும்.

பெண்களைக் காக்கும் பெருங்காயம்

பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல்,  வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும்.

குழந்தை  பிறந்த பின் கர்ப்பப்

பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம், லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற, காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்கள்  காலையில் கொடுப்பது நல்லது. இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம்.

அஜீரணம் போக்கும்

அஜீரணத்துக்குப் பெருங்காயம் மிக முக்கியமான மருந்து. புலால் சமைத்தாலும் சரி, வாயு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போது,  துளிப் பெருங்காயம் அந்த உணவில் போட மறக்கக் கூடாது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, பெருங்காயம் இரண்டரை கிராம் (பிற பொருள் அளவின் கால் பங்கு மட்டும்) எடுத்துப் பொடித்துவைத்து, சோற்றில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையைச் சாப்பிட்டுப் பின் சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண், (Gastric oesophagal Reflex Disease-GERD), முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

நெஞ்சு எலும்பின் மையப்பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத் தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு, எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொண்டு, காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்கள் சாப்பிட, வாயுக்குத்து முழுமையாய் நீங்கும். அதற்கு முன்னர் வந்திருப்பது, ஜீரணம் தொடர்பான வலியா, அல்லது ஒரு வகையான நெஞ்சு வலியா (Unstable angina) என உறுதிப்படுத்துவது மிக அவசியம். இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்
சல், அடிக்கடி, நீர் மலமாய்ப் போகும் குடல் அழற்சி நோய்களிலும் பயனளிக்கக்கூடியது. குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓம நீரில், துளிக் காயப் பொடி கலந்துகொடுக்க, மாந்தக் கழிச்சலை நீக்கி, சரியான பசியைக் கொடுக்கும்.

ஜீரணம் மட்டுமல்ல. புற்றுநோயிலும்கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

- தொடரும்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சிலம்பப் பெண் !
ஹார்மோன் கெமிஸ்ட்ரி - 3
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close