ஸ்டார் ஃபிட்னெஸ்

டி வில்லியர்ஸ்

கிரிக்கெட்டின் இன்றைய ஹாட், டாப், கிளாஸ், மாஸ் பேட்ஸ்மேன்... தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டி வில்லியர்ஸ. டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்திலும் “அதுக்கும் மேல” என ரன்களைக் குவித்துவருகிறார். வருடம் முழுதும் விளையாடிக்கொண்டே இருப்பவர் எப்படி தனது ஃபிட்னெஸைப் பராமரிக்கிறார்?

போட்டிக்கு முந்தைய நாள் அதிகமாக நெட் பிராக்டீஸ் செய்வது என்பது, பரீட்சைக்கு முந்தைய நாள் விழுந்து விழுந்து படிப்பது போன்றதுதான் என்பது டி வில்லியர்ஸ் கருத்து. “அதிகமான பிராக்டீஸ் நம்மைச் சோர்வுறச் செய்யும். அடுத்த நாள் போட்டிக்குப் போகும்போது பாதி ஸ்டாமினாவை இழந்திருப்போம். எனவே, உடற்பயிற்சி உட்பட எந்தப் பயிற்சிகளானாலும், தினமும் செய்ய வேண்டும்” என்கிறார்.

“தொடர்ந்து மூன்று நான்கு மணி நேரம் பயிற்சி செய்வதைவிட, 20 நிமிடங்கள் தீவிரமான பயிற்சியும் அதன் பின், சிறிது ஓய்வு மீண்டும் பயிற்சி எனத் தொடர்வது நல்ல பலனைத் தரும்” என்கிறார் இந்த ரன் மிஷின்.

டி வில்லியர்ஸ்க்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட் அல்ல... டென்னிஸ். ஆனால், எந்த விளையாட்டு விளையாடினாலும் ரன்னிங் தேவைப்படும். எனவே, ஓட்டப்பயிற்சிதான் உடற்பயிற்சிக்கெல்லாம் தாத்தா!” என்கிறார்.

மைதானத்தின் எந்த மூலைக்கும் டி வில்லியர்ஸால் பந்தை அடிக்க முடியும். அதற்கு முக்கியக் காரணம், அவர் உடல் அத்தனை ஃப்ளெக்ஸிபிள். இதற்கான சிறப்பான உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம். ‘நம் தேவை என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றார் போல நம் உடலை தயார்ப்படுத்துவது முக்கியம்’ என்பது இந்த சிக்ஸ் மேனின் சின்சியர் அட்வைஸ்.

உடற்பயிற்சிக்கும் அன்றைய காலநிலைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் டி வில்லியர்ஸ். உலகம் முழுவதும் சுற்றுபவர் என்பதால், அந்தந்த நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தனது உடற்பயிற்சிகள் மாறும் என்கிறார். வெயில் நாட்களில் வெளியில் ஓடாமல் இண்டோர் பயிற்சிகள் நல்லது என்பது இவரது டிப்ஸ்.

மார்ட்டினா ஹிங்கிஸ்

மார்ட்டினா ஹிங்கிஸ்க்கு வயது 35. ஆனால் இந்த வருடம் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கிறார். எப்படி இது சாத்தியமானது என்றால் “மனதையும் உடலையும் நான் சொல்வதைக் கேட்கும்படி வைத்திருக்கிறேன்” என்கிறார், இந்த சுவிஸ் தேவதை.

“ஃபிட்னெஸ் என்பது ஒரு பயணம். எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைதான் என் வெற்றி ரகசியம். உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல் என்ன என்பதைச் சொல்லிக்கொடுங்கள்” என்கிறார் மார்ட்டினா.

ஹிங்கிஸின் பெற்றோர் இருவரும் டென்னிஸ் வீரர்கள். பிரபல வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவின் நினைவாகத்தான் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற பெயரை வைத்தார்களாம். நவரத்திலோவாவிடம் உங்களுக்கும் என்ன பிடிக்கும் என்றால், அவரது ஃபிட்னெஸ் என்கிறார் ஹிங்கிஸ். ஃபிட்னெஸ் என்பதற்கும் ஒரு ரோல்மாடல் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது ஹிங்கிஸ் சொல்லும் முக்கியமான பாயின்ட்.

“எனது டென்னிஸ் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்றாலும், எனது உடற்பயிற்சிகளும் டயட்டும் தொடர்ந்திருக்கும். ஏனெனில், அது என் வாழ்க்கைக்கானது, வி்ளையாட்டுக்கானது மட்டும் அல்ல” என்பது ஹிங்கிஸின் மந்திரச் சொல்.

“மதியம் இரண்டு மணிக்கு மேல் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட மாட்டேன் என்பது மட்டும் என் டயட் ரூல். மற்றபடி, சாக்லேட் கேக்கூட சாப்பிடுவேன். டயட் என்பது நமக்குத் தேவையான உணவைச் சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது அல்ல” என்கிறார் ஹிங்கிஸ்.

கடற்கரையோர நகரங்களில் இருப்பவர்களை, அங்கே ஜாகிங் செல்லச் சொல்கிறார் ஹிங்கிஸ். அது மனதுக்கும் உடலுக்கும் எக்ஸ்ட்ரா புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது அவரது அனுபவப் பாடம்.

- கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick