சூப்பர் ஹெல்த் ஆப்ஸ்!

ந்த டிஜிட்டல் யுகத்தில், ‘உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்காக எடுக்கும் முயற்சிகள்தான் ஓரிரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பது இல்லை. இப்போது, இதற்கு ஒரு  தீர்வு வந்துவிட்டது. நம்முடைய மொபைல்போனே தாயாக, நண்பனாக, மருத்துவராக இருந்து உதவ, வாழ்க்கையை மேம்படுத்தும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் நிறைய வந்துவிட்டன.

பீடோமீட்டர் (Pedo meter)

தினசரி நடைப்பயிற்சி ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கிறோம், எத்தனை அடி எடுத்துவைக்கிறோம் என்பதை நம்மால் கணக்கிட முடியாது. ஆனால், இதைக் கணக்கிடும் ஆப் இது.

தனியாக பேன்ட், வாட்ச் போன்றவற்றை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதைவிட எளிமையாக ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாகவே எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கிட இந்த ‘பீடோமீட்டர்’ ஆப் உதவும்.

நச்சுனு  அஞ்சு பாயின்ட்!

ஒருமுறை  இதைத் தரவிறக்கிக்கொண்டால் போதும் அதன் பின் இணைய வசதி இல்லாமலேயே இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும்.

நாம் நடக்கும்போது, எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும், நொடிப்பொழுதில் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கிறோம், என்ன வேகத்தில் நடக்கிறோம், எவ்வளவு நேரம் நடந்தோம், இதனால் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டுள்ளன என அனைத்தையும் ரிப்போர்ட்டாகத் தந்துவிடும்.

‘ஒரு நாளைக்கு 10,000 அடிகளாவது  எடுத்துவைக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள். சாதாரணமாக வீடு, அலுவலகம் என காலையில் இருந்து மாலை வரை சுமார் 4,000 அடிகள் எடுத்துவைக்கிறோம் என வைத்துக்கொள்வோம். மீதமுள்ள 6,000 அடிகளை நடைப்பயிற்சி மூலம் நடந்து சமன் செய்துகொள்ளலாம். இதற்கு, மொட்டை மாடியில்கூட நடக்கலாம்.

தினசரி தகவலைச் சேமித்து, வார, மாத ரிப்போர்ட்டையும் தரும். அதனால், நாம் தினசரி எவ்வளவு நடக்கிறோம் என சுய பரிசோதனை செய்துகொள்ள முடியும்.

பீரியட் ட்ராக்கர்

மாதவிலக்கு எத்தனை நாட்களுக்குள் வருகிறது. எத்தனை நாட்களுக்கு உதிரம்படுகிறது போன்ற தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது முக்கியம். சீரற்ற மாதவிலக்கு, பி.சி.ஒ.டி., குழந்தைக்குத் திட்டமிடுதல், ஹார்மோன் பிரச்னைகள் போன்ற பலவற்றுக்கும் இந்தத் தகவல்கள் தேவைப்படும்.

சிகிச்சைக்கு முன் டாக்டர் கேட்கும் கேள்வியும் இதுதான். இதை நினைவில் வைத்திருப்பது கடினம். இவற்றை எளிமையாக்கி நம்முடன் பயணிக்கிறது இந்த ‘பீரியட் ட்ராக்கர்’ ஆப்.

என்னென்ன பயன்கள்..?

இதில் உள்ள காலண்டரில் பீரியட் தொடங்கும் நாள் மற்றும் முடிகின்ற நாட்களைக் குறித்துவைத்துக்கொண்டால், அடுத்த மாதத்துக்கான பீரியட் தொடங்கும் மூன்று நாட்களுக்கு முன்னரே நமக்கு அலெர்ட் மெசேஜ் வரும். மாதச்சுழற்சியின் அளவு என்ன என்பதையும் நமக்கு லிஸ்ட் போட்டுக் காண்பித்துவிடும். 28 நாட்கள், 30 நாட்கள் என அவரவரின் மாதவிலக்குத் தேதியைப் பொறுத்து கணக்கிட்டுக் காண்பிக்கும்.

குழந்தைபேறுக்குத் தயாராக வழிகாட்டும் இந்த செயலியில், ஃபெர்ட்டிலிட்டி நாட்களைச் சிவப்பு மையிட்டுக் காண்பிக்கும். தேதியைத் தொட்டால் இன்றைக்குக் கர்ப்பமாகும் சதவிகிதம் குறைவு, அதிகம், இன்றைக்குக் கருத்தரிக்க ஏற்ற நாள் போன்ற தகவல்களைக் காட்டும்.

ஒவ்வொரு மாதமும் என்னென்ன அறிகுறிகள், பிரச்னைகள் மாதவிலக்கின்போது இருந்தன என, ஒரு பட்டியலைப் பார்க்க முடியும். அதில் பருக்கள், அடி வயிற்று வலி, முதுகு வலி, உடல் வலி, மார்பக வலி, வாந்தி, சோர்வு போன்ற என்னென்ன தொந்தரவுகள் இருந்தன என்பதையும் டிக் செய்துவைக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை கேட்க, இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.

மாதவிலக்கு வரும் முன்னரும், பின்னரும்​​ ஏற்படும் மனநிலையைக்கூட டிக் செய்துவைக்க முடியும். கோபம், சோர்வு, எரிச்சல், தூக்கமின்மை போன்ற ஸ்மைலிகளைக் காண்பிக்கும். இதையும் நாம் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகளும் இதைப் பயன்படுத்த முடியும். கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட நாளை குறித்துவிட்டால், டெவலிவரி தேதியைக் காட்டும். இதற்கான கவுன்ட்டவுண் தினசரி வரும்.

- பு.விவேக் ஆனந்த், ப்ரீத்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick