Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

அந்தப்புரம் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஸ்யாம்

ஸ்வினும் அனிதாவும் வீடு வந்து சேர்ந்தனர். அதற்குள் அனிதா அனுப்பிய வாட்ஸ்அப் தகவலால் அனிதாவின் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வந்துவிட்டனர். மகள், மருமகனை வாழ்த்தினர். காலில் விழச்சென்ற  அனிதாவை, அவரது அம்மா தனியாக அழைத்துச் சென்று பேசினார். “ரொம்ப நாள் கழிச்சு கன்ஸீவ் ஆகியிருக்கே... ஜாக்கிரதை. அடிக்கடி டாக்டர்கிட்ட செக்அப் போயிடு. ஆபீஸ்ல எத்தனை நாள் லீவ் கிடைக்கும்?” என்று கேட்டவர், ``ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். மேடு பள்ளங்கள்ல ஸ்கூட்டியில வேகமாகப் போறது, பஸ் பிடிக்க ஓடுறது... இதெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தலாம். வேலைக்குப் போக வேண்டாம்... பேசாம வீட்லயே இருந்துடு” என்று அட்வைஸ் செய்தார்.

மருத்துவமனைக்குச் செல்வதாகச் சொல்லி விடுப்பு எடுத்திருந்ததால், அஸ்வினின் நண்பன் ரமேஷ் போன் செய்து விசாரித்தான். “எனக்கு ஒண்ணுமில்லை. அனிதா கன்ஸீவ் ஆகியிருக்கா. கன்ஃபார்ம் செய்யறதுக்காக ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிருந்தேன்” என்றான். ரமேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. கர்ப்ப காலம் பற்றிய பல்வேறு விஷயங்களில் அஸ்வினுக்கு டிப்ஸ் கொடுத்தான். இருவரது பேச்சும் கர்ப்ப காலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்வதில் வந்து நின்றது. ``நாங்கல்லாம் ஒன்பதாம் மாசம் வரைக்கும் செக்ஸ் வெச்சுக்கிட்டோம்’’ என்றான் ரமேஷ்.

ஷாக் ஆன அஸ்வின், ``செக்ஸ் வச்சுக்கிட்டா அபார்ஷன் ஆகிடாதா... குழந்தைக்கு ஏதாவது பிரச்னை வந்துடாதா?’’ என்று கேட்டான். ``அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. என் மனைவிக்கு நடந்தது நார்மல் டெலிவரி. ரெண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாத்தான் இருக்காங்க’’ என்றான் ரமேஷ். அவனிடம் பேசிய பிறகு அஸ்வினுக்குக் குழப்பம் அதிகரித்தது. `ரொம்ப எதிர்பார்ப்புக்குப் பிறகு அனிதா கன்சீவ் ஆகியிருக்கா. இந்த நிலைமையில தாம்பத்திய உறவு வெச்சுக்கிட்டு, அதனால ஏதாவது ஆகிடுச்சுன்னா ரெண்டு பேராலயுமே தாங்க முடியாது. ஆனா, செக்ஸ் வச்சுக்கறது நல்லதுன்னு ரமேஷ் சொல்றான். என்ன செய்றது?’ எனக் குழம்பினான். யாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. நெட்டில் அலசினான். அதில், இரண்டு தரப்பிலும் பதில் இருந்ததால், மேலும் குழம்பினான். அவனைப் போலவே அனிதாவும் குழப்பத்தில் இருந்தாள்.

டவுட் கார்னர்

“கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

``தாராளமாக. கர்ப்ப காலத்தின் ஒன்பதாவது மாதம் வரை உடலுறவுவைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு கர்ப்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மகப்பேறு மருத்துவர் தெரிவிக்க வேண்டும். ‘மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள், குழந்தையும் மிக ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது, கருச்சிதைவு, கருக்கலைவு போன்றவற்றுக்கு வாய்ப்பு இல்லை’ என டாக்டர் உறுதியாகத் தெரிவித்திருந்தால், தாராளமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே, கருத்தரித்தபோது, குழந்தை முன்கூட்டியே பிறந்திருந்தால், கர்ப்பப்பைவாய் சற்றுத் தளர்வுற்று இருந்திருந்தால், எடை குறைவாகக் குழந்தை பிறந்திருந்தால், ஏற்கெனவே கருச்சிதைவு அல்லது கருக்கலைத்தல் செய்திருந்தால், ஸ்பாட்டிங் எனப்படும் துளித்துளியான ரத்தக்கசிவு, பிளீடிங் இருந்தாலோ, உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பிளசன்டா ப்ரேவியா (Placenta praevia) எனப்படும் கருப்பையின் முகத்துவாரத்தை பிளசன்டா அடைத்திருக்கும் நிலையிலும் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலுறவு வைத்துக்கொள்ளும்போது, ஆணின் எடை பெண்ணின் வயிற்றின் மீது அழுத்தக் கூடாது. வேகமாக ஈடுபடுவதையும், ஓரல் செக்ஸையும் தவிர்க்க வேண்டும். இருவரும் ஜனன உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.”

“நான் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். தினமும் அலுவலக பஸ்ஸில் அலுவலகம் சென்று வருகிறேன். கர்ப்ப காலத்தில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானதுதானா?”

மாலினி, தாம்பரம்.

“பயணம் மேற்கொண்டதால் கர்ப்பம் கலைந்தது என எந்தத் தகவலும் இல்லை. ஆனால், பயணம் மேற்கொள்வது சரியா என்பதை கர்ப்பிணிதான் முடிவுசெய்ய வேண்டும். அவரைத் தவிர வேறு யாராலும் சரியானதைத் தேர்வுசெய்ய முடியாது. இருப்பினும், இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவற்றில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாகனங்களில் அதிர்வைத் தாங்கக்கூடிய அமைப்புச் சரியாக இல்லை. மேலும், நம்முடைய சாலைகளும் அந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானதுதான். இருப்பினும், பஸ்ஸில் சக்கரங்களுக்கு நேர் மேலே அமர்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள், ரயில் மற்றும் விமானத்தைத் தேர்வு செய்யலாம். அதுவும் எட்டாம் மாதம் வரை மட்டும்தான். ஒன்பதாம் மாதம் முதல் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்துக்குச் செல்வதில் தவறு இல்லை. ஆனால், அலுவலகப் பணியால் அதிகச் சோர்வு, களைப்பு போன்ற பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுவாசித்தலில் சிரமம், காலில் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பம் கலைய வாய்ப்பு உள்ளவர்கள், கட்டாயம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும். மற்றவர்கள் பிரசவம் வரையில் அலுவலகம் செல்வதில் பிரச்னை ஏதும் இல்லை.”

“கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யலாமா டாக்டர்?”

எஸ்.விமலா, சென்னை.

‘‘நடைப்பயிற்சி செய்வதே மிகப் பெரிய பயிற்சி. உடற்பயிற்சி நல்லதுதான். ஆனால், தீவிரமான பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், உங்களுக்கு எந்த மாதிரியான பயிற்சி சரியாக இருக்கும், பயிற்சி செய்யலாமா, வேண்டாமா என்பதை எல்லாம் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டு, அதன்படி நடப்பது நல்லது.”

“கர்ப்ப காலத்தில் டாக்டர் பரிந்துரை இன்றி எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரியும். அதற்காகக் காய்ச்சல் வந்தால்கூட டாக்டரிடம் கேட்டுத்தான் மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டுமா?”

மா.கனகா, சேவூர்.

``கண்டிப்பாக. எதற்காகவும் சுய மருத்துவம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரை இன்றி எந்த ஒரு மருந்து, டானிக்கையும் எடுக்க வேண்டாம். இந்த மருந்துகள் கருவின் வளர்ச்சி யில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”

- ரகசியம் பகிர்வோம்


தாம்பத்யம்... ஏன்... எதற்கு... எப்படி?

கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ள காலத்திலும் கர்ப்ப காலத்திலும் குறிப்பாக, முதல் மூன்று மாதங்களில் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கக்கூடிய மருந்து மாத்திரைகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். கர்ப்பம் தரித்ததில் இருந்து மூன்று மாதங்களுக்கு வளர்ந்துகொண்டிருக்கும் கருவுக்கு ‘எம்ப்ரியோ’ என்று பெயர். இந்த முதல் மூன்று மாதங்கள்தான் எம்ப்ரியோ வளர்ச்சிக்கு மிகமிக முக்கியம். இந்தக் காலகட்டத்தில்தான் முக்கிய உறுப்புகளான இதயம், மூளை உள்ளிட்டவை உருவாகின்றன. எனவே, இந்தக் காலக்கட்டத்தில் எக்ஸ்-ரே எடுப்பது, விபத்து, ரசாயனப் பாதிப்பு என எந்த ஒரு பிரச்னையும் தாய்க்கு ஏற்படக் கூடாது. இவை வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கக்கூடும். இந்தக் காலகட்டத்தில் அதிகப்படியான குமட்டல், வாந்தி போன்ற மார்னிங் சிக்னஸ் இருக்கும். மார்பகம் பெரிதாகத் தொடங்கும். இதனால், மார்பகம் எடை கூடிய உணர்வு இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வேகமாக கலோரி எரிக்கும் 5 பயிற்சிகள்
உணவின்றி அமையாது உலகு - 6
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close