சூப்பர் ஹெல்த் ஆப்ஸ்!

உங்கள் எடையைக் கண்காணியுங்கள் (Monitor Your Weight)

நோய் நொடியற்ற வாழ்வைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மையான விஷயம் என்ன தெரியுமா? உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது, அதைப் பராமரிப்பது. உடல்பருமனாக இருப்பவர்களிடம் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால், நிச்சயம்  ‘மானிட்டர் யுவர் வெயிட் - ஆப்’பை தரவிறக்கிக்கொள்ளலாம்.

எப்படிச் செயல்படுகிறது?

இந்த ‘ஆப்’பைப் பயன்படுத்த எடை மற்றும் உயரம் தெரிந்திருக்க வேண்டும். எடை மற்றும் உயரத்தை உள்ளிட்டவுடன் பி.எம்.ஐ தானாகவே கணக்கிடப்படும்.  பி.எம்.ஐ நார்மலாக இல்லை எனில், அடுத்த ஒரு வருடத்துக்குள் எந்த பி.எம்.ஐ-க்குள் வந்துவிட வேண்டும், அதற்கு எவ்வளவு கலோரி உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற  தகவல்களை இந்த ஆப் கணக்கிட்டுக் காட்டும்.

நாம் தேவையற்ற எத்தனையோ பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால், சில நூறு ரூபாய் மட்டுமே செலவாகும் எடை பார்க்கும் கருவியை வாங்க மறந்திருப்போம். முதலில், எடை பார்க்கும் கருவியை வாங்கிவைத்துக்கொள்ள வேண்டும். தினமும் எடையைப் பரிசோதனை செய்து, நீங்கள் எவ்வளவு எடை என இந்த ஆப்-ல் பதிவுசெய்ய வேண்டும்.  இதன் மூலம், ஒவ்வொரு நாளும் எடை எவ்வளவு உள்ளது என்பதை ஆய்வுசெய்ய முடியும். மேலும், ஒவ்வொரு முறை எடையைப் பதிவுசெய்யும்போதும், அதற்கேற்ப பி.எம்.ஐ, உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவு, நீங்கள் எவ்வளவு கலோரிகள் எடுத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு எடை இழக்க வேண்டும் அல்லது கூட வேண்டும் போன்ற தகவல்கள் உடனடியாகக் கணக்கிடப்பட்டு, புதுப்பிக்கப்படும். இதனால் பாசிட்டிவ் மனநிலை உண்டாகும். உடல் எடையைக் குறைக்கும் உத்வேகம் பிறக்கும்.

புகை தவிர் (Smoke Free)

புகைப்பதைவிட வேண்டுமா? சிகரெட்டைவிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா? உங்களுக்கு இந்த ஆப் மிகவும் உதவிகரமாக இருக்கும். புகைத்தலின் தீமைகளை மட்டுமே சொல்லிப் பயமுறுத்தாமல், புகைப்பதை விடுவதால் என்னென்ன நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கின்றன என்பதை பாசிட்டிவ்வாகச் சொல்கிறது இந்த ஆப்.

 ஒருமுறை டவுண்லோடு செய்தால் போதும். அதன் பின்னர் இணைய வசதி அவசியம் இல்லை. உங்கள் பெயர், ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறீர்கள், ஒரு சிகரெட்டின் விலை எவ்வளவு... உள்ளிட்ட விவரங்களை முதலில் பதிவுசெய்ய வேண்டும்.

நீங்கள் எப்போதிலிருந்து சிகரெட்டைவிட ஆரம்பிக்கிறீர்களோ, அன்றைய தினம் இந்த ஆப்பில் ‘சிகரெட்டை நிறுத்திவிட்டேன்’ என பதிவு செய்துவிட வேண்டும். நீங்கள் பதிவுசெய்த நொடியில் இருந்து, உங்களது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என  நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து காட்டும்.

 11 ரூபாய் மதிப்புள்ள ஐந்து சிகரெட்டை  தினமும் புகைப்பீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்தத் தகவல்களைப் பதிவுசெய்ததும், ஒரு வருடத்துக்கு எவ்வளவு பணம் மிச்சமாகிறது. சிகரெட்டை விட்ட நாளில் இருந்து இதுவரை எவ்வளவு மிச்சமாகி உள்ளது எனக் காட்டும். மேலும், சிகரெட் நிறுத்தியதில் இருந்து, இத்தனை நாள், இத்தனை மணி, இத்தனை நிமிடங்கள் ஆகியிருக்கிறது. இதனால், உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைத்துள்ளன என்றும் பட்டியலிடும்.

மேலும், சிகரெட்டை விட்ட பின்னர் உங்களது  பல்ஸ் ரேட் எவ்வளவு சதவிகிதம் நார்மலுக்குத் திரும்புகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது, கார்பன் மோனாக்ஸைடு எவ்வளவு தூரம் வெளியேறி உள்ளது, நிக்கோட்டின் எவ்வளவு குறைந்து உள்ளது, மூக்கின் நுகரும் திறன், நாவின் சுவை அறியும்  திறன் ஆகியவை எவ்வாறு மேம்பட்டுள்ளன, ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது, உடலின் சக்தி எவ்வளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, இருமல், வீசிங் பிரச்னை எவ்வளவு குறைந்துள்ளது, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு எவ்வளவு சதவிகிதம் குறைந்துள்ளது,  நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு எவ்வளவு தூரம் குறைந்துள்ளது ஆகியவை புராக்ரஸ் கார்டு பகுதியில் காட்டப்படுகின்றன.

வீடியோ கேம்களில் சாதனைகள் வென்றால் பரிசு கிடைப்பதுபோல, சிகரெட்டை விட்ட தினத்தில் இருந்து முதல் நாள், நூறாவது நாள் எனப் பல கோப்பைகள் வழங்கப்படும். இப்படி, கோப்பைகள் பெற முயற்சிப்பது, சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட மனதளவில் உறுதுணையாக இருக்கும். ஐந்து வருடங்கள் சிகரெட்டை விடும் வரையில் நீங்கள் ஒவ்வொன்றாகப் பல கோப்பைகள் வெல்லலாம். இவ்வாறு, உத்வேகம் அளிப்பதன் காரணமாக ‘சிகரெட்டை முற்றிலுமாக விட்டுவிட வேண்டும்’ என்ற ஆர்வம் மேலோங்கும். சிகரெட்டை விடத் துணிபவர்களுக்கு சிறந்த நண்பன் ஸ்மோக் ஃப்ரீ.

- பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick