சொட்டு மருந்தை மறந்திடாதீங்க! ஜனவரி 18

அருள் குமார், குழந்தைகள் நல மருத்துவர்

நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 22-ம் தேதிகளில் இலவச போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு வரும் கொடிய நோய்களில் ஒன்று, போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதம். போலியோ கிருமித் தொற்று ஏற்பட்ட 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்படாது. 10 சதவிகிதக் குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுபோக்கு எனத் தொடங்கி 2-3 வாரங்களில் சரியாகிவிடும். பிறகு, போலியோ வைரஸ் நரம்பு மண்டலத்தைத் தாக்கி இளம்பிள்ளை வாதத்தை உருவாக்கிவிடும். இந்த நோயை வரும் முன் தடுப்பதே, ஒரே வழி.

போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி என இரண்டு வகைகளில் இந்த மருந்து போடப்படுகிறது.  இரண்டையும் போட்டுக்கொள்வது 100 சதவிகிதப் பாதுகாப்பைத் தரும்.  பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை போலியோ சொட்டு மருந்து போடுவது அவசியம்.

போலியோ மருந்து எடுத்துக் கொண்ட பிறகு, எந்த பக்கவிளைவுகளும் வராது. குழந்தைக்கு தீவிரமான வயிற்றுப்போக்கோ, வாந்தியோ இருந்தால், அந்த சமயத்தில் போலியோ மருந்து கொடுப்பதை தவிர்த்துவிட்டு, குணமான பிறகு சொட்டு மருந்துகளைப் போட்டுக்கொள்ளலாம்.

சொட்டு மருந்து ஏன்?

1988-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில்,  உலக அளவில் ஆண்டுக்கு 3,50,000 பேருக்கு போலியோ தாக்கியிருந்தது. 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில்,  99 சதவிகித அளவில் இது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலகளவில் இன்றும் போலியோ நோயால் தாக்கப்பட்டிருக்கும் நாடுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா. இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. அண்டை நாடுகளில் இன்னமும் போலியோ பாதிப்பு உள்ளதால், இந்தியாவிலும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க தொடர்ந்து தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.

- ப்ரீத்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick