ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“டீன் ஏஜ் மற்றும் கருத்தரிக்க வாய்ப்பை எட்டிய வயதில் உள்ள பெரும்பாலான பெண்கள் அவதிப்படும் பிரச்னை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹார்மோன் சமநிலையின்மை. இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு முகப்பரு, முகத்திலும் மற்ற பாகங்களிலும் அதிகப்படியான முடி வளர்ச்சி, உடல் பருமன், சீரற்ற மாதவிலக்கு போன்ற பிரச்னைகள் இருக்கும். இவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பும் பெருமளவு குறைவு. கருத்தரித்தாலும் கருச்சிதைவு, கர்ப்பகால சர்க்கரை நோய், சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு என்று பல பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தகுந்த சிகிச்சையின் மூலம் சரிப்படுத்த முடியும். ஆனாலும், பல பெண்கள் மருத்துவரை அணுகாமல், தங்களுக்குள்ளேயே பிரச்னைகளைப் போட்டுக் குழப்பிக்கொள்கின்றனர்” என்கிறார் இனப்பெருக்கம் தொடர்பான நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் பிருந்தா கால்ரோ.

உடல் பருமன் எப்படி ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கிறது என்பதை விளக்கும்போது, “இந்தியாவில் உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடைகொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பொதுவாக, உடல்பருமன் காரணமாக சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பார்கள். இது குழந்தையின்மைக்கான வாய்ப்பையும் குறைத்துவிடும். உடல் பருமனாக உள்ள பெண்ணுக்கு, கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. இதனால், கருச்சிதைவு ஏற்படலாம். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பு குறைந்து, பெண்களுக்கான இனப்பெருக்க ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும். இதனால், விந்தணு உற்பத்தி குறைந்து, குழந்தையின்மைக்கான வாய்ப்பு  அதிகரித்துவிடுகிறது. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது எல்லா வகையிலும் நல்லது” என்கிறார்.

ஹார்மோன் சுரப்பின் அவசியம் என்ன?

தைராய்டு அதிகம் அல்லது குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் பாதிப்பு என்ன?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமை எப்படித் தவிர்ப்பது?

உடல் பருமன் ஹார்மோன் சுரப்பிகளை எப்படிப் பாதிக்கிறது?

அன்பு வாசகர்களே, ஜூலை 1 முதல் 7 வரை தினமும், 044-66802904« என்ற எண்ணுக்கு போன் செய்தால், ஹார்மோன்களின் அவசியம், குழந்தையின்மைக்கும் ஹார்மோன் சுரப்புக்கும் உள்ள தொடர்புகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இனப்பெருக்க - நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் பிருந்தா கால்ரோ.


“சரியாகத் தண்ணீர் அருந்தாமை, உணவுப் பழக்கம் எனப் பல்வேறு காரணங்களால் சிறுநீரகங்களில் கல் ஏற்படுகிறது. வலி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது போன்ற அறிகுறிகள் தெரிந்த பிறகுதான் மக்கள் மருத்துவமனைக்கே வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம். சிறுவர்களுக்கு கல் பிரச்னை இருந்தால், முதலில் அது ஏன் வந்தது என்று கண்டறிய வேண்டும். பொதுவாக, பாராதைராய்டு சுரப்பியில் பிரச்னை இருந்தால், கால்சியம் கிரகிக்கும்தன்மை பாதிக்கப்பட்டு கல் ஏற்படலாம். ஏராளமான அளவில் சிறுநீரகக் கற்கள் உருவாகியிருக்கும். இதனை அகற்ற வேண்டும்.  பாரா தைராய்டு பிரச்னையைச் சரிசெய்வதன் மூலம், மீண்டும் கல் வராமல் தடுக்கலாம். இளைஞர்கள் மத்தியில் பீர் குடித்தால் கல் பிரச்னை சரியாகிவிடும் அல்லது வராது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. அதில் இருக்கும் ஆல்கஹால் சிறுநீரகத்தில் கல்லை உருவாக்கும்தன்மை கொண்டது. வாரத்துக்கு ஒருமுறை அருந்தினால்கூட கல் உருவாகலாம். சிறுநீரகத்தில் கல் இருந்தால் வெளியேற்றவும் அதிக சிறுநீர் வெளியேறவும் பாதுகாப்பான மாத்திரை, ஊசி  ஆகியவை உள்ளன. மதுவுக்குப் பதில், இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது” என்கிறார் சிறுநீரகவியல் அறுவைசிகிச்சை நிபுணர் சேகர்.

“குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். முதலில், வயது, எவ்வளவு நாளாக ரத்தம் வெளியேறுகிறது, வலி இருக்கிறதா, வயிற்றுப் பகுதியில் அடிபட்டதா, சிறுநீர் கழிக்க அவஸ்தைப்பட்டு முக்கும்போது வெளியேறுகிறதா, ஏதேனும், மாத்திரை மருந்து எடுத்து இப்படி ஆகிறதா எனக் கண்டறிய வேண்டும். சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் ஏற்படும் தொற்று காரணமாகக்கூட சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்க் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தக் கசிவு ஏற்படலாம். இதற்கு ஆன்டிபயாட்டிக் மருந்து கொடுப்பதன் மூலமே சரி செய்துவிடலாம். பெரியவர்களுக்கு, சிறுநீரில் ரத்தம் வந்தால், உடனடியாக ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், அது சிறுநீரகப் புற்றுநோயாகக்கூட இருக்கலாம். சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், ரசாயனத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் சரிப்படுத்திவிடலாம்” என்கிறார்.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள் என்ன?

சிறுநீரகக் கல் உருவாக என்ன காரணம்?

சிறுநீரகக் கல்லை வெளியேற்ற முடியுமா?

சிறுநீரில் ரத்தம் வெளியேறினால், என்ன செய்ய வேண்டும்?

சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம்?

அன்பு வாசகர்களே ஜூலை 8 முதல் 15 வரை தினமும், 044-66802904« என்ற எண்ணுக்கு போன் செய்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு, பாதிக்கும் விஷயங்கள், தவிர்க்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரகவியல் அறுவைசிகிச்சை நிபுணர் எம்.ஜி.சேகர்

- பா.பிரவீன் குமார்

படங்கள்: பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick