40 வயதைக் கடந்த பெண்களுக்கு...

மெனோபாஸ்

கார்த்திக் குணசேகரன்
மகளிர் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவர்

பெண்களின் உடல், பிறப்பு முதல் எண்ணற்ற பருவங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. பருவமடைதல், குழந்தைப்பேறு என ஒவ்வொரு நிலையிலும் உடல் அளவிலும் மனதளவிலும் பெண்கள் பல மாற்றங்களைச் சந்திக்கின்றனர். இந்தத் தருணங்களில், நிறையக் கேள்விகளும் பல குழப்பங்களும் சந்தேகங்களும் வந்து செல்லும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தை, சிரமப்பட்டே பெண்கள் கடந்து செல்கிறார்கள். தன் உடல் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, இந்தப் பருவத்தை அமைதியாகவும் பயமின்றியும் கடந்து செல்ல முடியும்.

மெனோபாஸ்

45-50 வயதைக் கடந்த பெண்களுக்கு, 12 மாதங்களுக்கு மேல் மாதவிலக்கு சுழற்சி ஏற்படாமல் இருந்தால், அவர்கள் மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம். அதாவது, சினைப்பையில் இருந்து கருமுட்டைஉற்பத்தியாவது நின்றுவிட்டது என்று அர்த்தம். பொதுவாக, மெனோபாஸ் 45-50 வயதில் நிகழலாம். இந்தச் செயல்பாடு ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவது இல்லை. 40 வயதுக்குப் பிறகு, மாதவிலக்கு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இது, அவரவர்களின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். இந்தியப் பெண்களுக்கு, மெனோபாஸ் சராசரியாக 45 வயதில் ஏற்படுகிறது. மெனோபாஸ் கட்டத்தை அடையும் காலகட்டத்தில் சீரற்ற மாதவிலக்கு, பிறப்புறுப்பு உலர்ந்துபோதல், தூக்கமின்மை, மூட் ஸ்விங், உடல் எடை அதிகரிப்பு, சருமம் உலர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஈஸ்ட்ரோஜன் குறைபாடு 

மன உணர்வுகளில் தொடங்கி, சிறுநீர்க் கசிவு வரை அனைத்துக்கும் காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். எலும்பு, இதயம், கர்ப்பப்பை, குடல் தொடர்பான செயல்பாடுகள், வைட்டமின் மற்றும் தாதுக்களை கிரகித்தல் போன்ற அனைத்துக்கும் உதவுவது ஈஸ்ட்ரோஜன். நாற்பதைத் தாண்டிய பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது, உடலில் பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

மூட் ஸ்விங்

அடிக்கடி எரிச்சலும், திடீரென்று நார்மலாகவும் மாறி மாறித் தோன்றி, உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவது மூட் ஸ்விங். ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஏற்படும் மாற்றங்களே இவை. சோகம், கவனமின்மை, பயம், அதீத இயக்கம், சோர்வு, பதற்றம், டென்ஷன், மகிழ்ச்சி போன்ற அனைத்து உணர்வுகளும் மாறி மாறி வரலாம். மனம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதால், தூக்கமின்மைப் பிரச்னையும் சேர்ந்தே வரும். மனதை அமைதிப்படுத்தும் கலைகளில் ஈடுபடலாம். சீரான உணவுப் பழக்கத்தையும் வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிக்கலாம். அவசியம் புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். 

எலும்புகள் தொடர்பான பிரச்னை

ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு வயது ஏற ஏற எலும்புகளின் வலிமை குறையத் தொடங்கும். மெனோபாஸுக்குப் பிறகு, பெண்களுக்கு எலும்பு மெலிதல் பிரச்னை அதிகம் தாக்குகிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களில் செயல்பாடுகள் குறைவது, எலும்பின் தரம் குறைதல், வைட்டமின் டி மற்றும் கால்சியம் பற்றாக்குறை, உடல் பருமன், உடலுழைப்பு இல்லாதது, கோலா குளிர்பானங்கள் அருந்துவது, புகை மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றால், எலும்பு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன.  சிறு வயதிலிருந்தே கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை வெயிலில் உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

பிறப்புறுப்பில் வறட்சி

ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், பிறப்புறுப்பு வறண்டுபோகும். உயவுத்தன்மை (Lubricant) இருக்காது. இதனால், செக்ஸில் ஈடுபடும் ஆர்வம் குறையும்.  மார்பகம், முடி, இடை என உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்த உடல் மாற்றங்கள் இயல்பானதுதான் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை எனில், மனரீதியானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

சிறுநீர்க் கசிவு

பல பெண்களுக்குக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்த இடத்திலேயே சிறுநீர் கசியும் பிரச்னை இருக்கிறது. பயணத்தின்போது, வேலை செய்யும் இடங்களில் இந்த சிறுநீர்க் கசிவால் பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். பலருக்கும் இதை வெளியில் சொல்வதிலும் தயக்கம் இருக்கிறது. எலாஸ்டிசிட்டி போய்விடுதல், இளம் வயதிலே கர்ப்பப்பை அகற்றுதல், தசைகள் தளர்வடைதல், மெனோபாஸ், உடல்பருமன், தொடர் இருமல், மலச்சிக்கல், நரம்பு தொடர்பான பிரச்னைகள், மூன்று முறைக்கும் மேல் சுகப்பிரசவம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் உடலில் அழுத்தம் அதிகமாகி, சிறுநீர் கசிவுப் பிரச்னை ஏற்படுகிறது.  அடிக்கடி, காபி, டீ குடிப்பது, எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது, கேக், கிரீம்ஸ், சாக்லெட் சாப்பிடுவது, அதிக அளவில் நீர் அருந்துவது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிகமான எடையைத் தூக்குவது, குழந்தையிலிருந்தே அதிக நேரம் சிறுநீரை அடக்கிப் பழகுவது போன்ற பழக்கங்களாலும் சிறுநீர்க் கசிவு பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.

- ப்ரீத்தி


எது சரியான  மெனோபாஸ்?

ஶ்ரீகலா பிரசாத், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்

மெனோபாஸ் நிலையை அடையும் சரியான வயது 45-50.

1. மாதந்தோறும் மாதவிலக்கு வந்துகொண்டே இருக்கும், அடுத்த மாதத்திலிருந்து வரவே வராது.

2. மாதந்தோறும் ஐந்து நாட்கள் வரக்கூடிய மாதவிலக்கு, ஒவ்வொரு மாதமும் நான்கு நாள், மூன்று நாள், இரண்டு நாள் எனப் படிப்படியாகக் குறைந்து, பிறகு நின்றுவிடும்.
 
3.  30, 40, 50, 60  நாட்களுக்கு ஒருமுறை எனத் தள்ளி மாதவிலக்கு வருவது. ரத்தப்போக்கும் குறைவாக இருப்பது.

இந்த மூன்றும்தான் நார்மல் மெனோபாஸ் நிலைக்கான அறிகுறிகள்.

இதைத் தவிர, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கும், அதிகப்படியான ரத்தப்போக்கும் இருப்பது, மாதந்தோறும் அதிக ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்கு வராமல் நின்றுவிட்டு, திடீரென ஒருநாள் குறைவாக வந்து, பிறகு அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, அதிக ரத்தப்போக்கு இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என்பதால், உடனடியாகப் பரிசோதித்துக்கொள்வது அவசியம்.


வெள்ளைப்படுதல்

மெனோபாஸ் நிலையில் இருப்பவர்களுக்கு, வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்து அதில் துர்நாற்றமோ, தொற்றோ, தாங்க முடியாத அரிப்புப் பிரச்னையோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இந்த அறிகுறிகள் கர்ப்பப்பை புற்றுநோய்க்கானவையாகவும் இருக்கலாம். இவர்கள், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகுவது அவசியம்.


நாற்பது வயதைக் கடந்த பெண்கள்

பாப் ஸ்மியர் (Pap Smear) சோதனையை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்யலாம். 10 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் புற்றுநோயைக்கூட, இந்த சோதனையின் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். வியா விலி  (Via Vili) என்ற சோதனை மூலமும் கருப்பைப் பிரச்னைகளைக் கண்டறிந்துகொள்ளலாம். இந்த சோதனை  அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.


மெனோபாஸ் சமயத்தில் கால்சியம் சத்து மிகவும் அவசியம். பால், கொய்யா, மீன், கேழ்வரகு போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். பால் சாப்பிடும்போது, அதனால் எடை அதிகரிக்கும் என்பதால், எளிதான உடற்பயிற்சிகள் அவசியம். தினமும், அரை மணி நேரமாவது நடப்பது உடலுக்கும் மனதுக்கும் நன்மையைத் தரும்.


சந்தியா, போலூர்.

“நான் வீட்டைவிட்டுக் கிளம்பினால், வீட்டின் கதவைத் தாழ் போட்டோமா, போடவில்லையா என்ற சந்தேகம் வலுக்கிறது. அதுபோல, நான் கேஸ் ஆஃப் செய்தேன் என்று, தெளிவாக ஞாபகம் இருந்தாலும், மீண்டும் மீண்டும் செக் செய்து, உறுதி படுத்திக்கொள்வேன். இந்த பயங்கள் ஏதாவது மன நோயா?”

 

 

 

ஆனந்த்,
மனநல மருத்துவர், கோவை.

“கைகளை நீண்ட நேரம் கழுவுதல், வீட்டை சரியாகப் பூட்டி இருக்கிறோமா எனப் பல தடவை இழுத்துப்பார்ப்பது, செய்த வேலையைச் சரியாக செய்தோமா எனச் சந்தேகப்பட்டு, பலமுறை செய்வது போன்றதற்கான காரணம், பயம் இல்லை. இது ஒரு வகையான மனநோய். இதை, மருத்துவ மொழியில் அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் (Obsessive compulsive disorder) என்கிறோம். இது, பெரும்பாலும் மனச்சிதைவு நோய் உடையவர்களுக்கே அதிகமாக வரும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் கோபம், பதற்றம், தற்கொலை எண்ணம் போன்ற பிரச்னைகளுடனே இருப்பர்.

இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், மூளையில் உள்ள செரடோனின் (Serotonin) ஹார்மோன் சுரப்பதில் உள்ள குறைபாடு. முதல் நிலையில் இருப்பவர்கள், தொடர்ந்து ஆறு மாதங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி முறையான மருந்துகளை எடுத்துக்கொண்டால், இரண்டு வாரங்களிலேயே நல்ல மாற்றங்கள் தெரியும். அன்றாட வேலையைக்கூட செய்ய முடியாமல், இறுதி நிலையில் இருப்பவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick