ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இன்றைக்கு, பலருக்கும் முடி உதிர்தல், பொடுகுப் பிரச்னை உள்ளது. ஒரு நாளைக்கு 50 முடி உதிர்வது என்பது இயற்கைதான். இதற்காகப் பயப்பட வேண்டியது இல்லை. அதையும் தாண்டி உதிர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். முடி உதிர்வதற்கு மரபியல், ஹார்மோன் குறைபாடு என்று பல காரணங்கள் உள்ளன.  உரிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், முடி உதிர்வைத் தடுக்கலாம்.

ஹெல்மெட் அணிந்து செல்வதால் முடி உதிர்கிறது என்று, பலரும் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்கின்றனர்.  தலைக் காயங்களைத் தடுக்க மட்டும் அல்ல... மோசனமான சுற்றுச்சூழலால், காற்றில் கலந்துள்ள மாசு, தூசுக்களில் இருந்து தப்பிக்கவும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தலைக்கு, பருத்தியினால் ஆன துணியைக் கட்டிக்கொண்டு, அதன் மேல் ஹெல்மெட்  அணிந்தால்,  தலையில் சேரும் வியர்வையை அது உறிஞ்சிவிடும். தினமும் குளிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தலையில் எண்ணெய் தேய்த்து, பிறகு மைல்டு ஷாம்புவினால் தலையை அலசி, பொடுகுப் பிரச்னையைத் தவிர்க்கலாம். அதேபோல தினமும் நீண்ட தூரம் அலுவலகத்துக்குச் சென்று வருபவர்கள், வீட்டுக்கு வந்ததும் மைல்டு ஷாம்பு போட்டுக் குளிக்கலாம். ” என்கிறார் சருமநோய் சிகிச்சை நிபுணர் எல்.ஆர்த்தி.

“வயதாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே உண்டுதான். ஆனால், 20 வயது டீன் ஏஜ் பெண்கள்கூட, ஆன்டிஏஜிங் கிரீம்களைப் பூசிக்கொள்கின்றனர்.  இது மிகவும் தவறானது. நம்மால் வயதாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், வயதுக்கு ஏற்ற வசீகரம் கிடைக்க, சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.  30 வயதுக்குப் பிறகு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை (எலாஸ்டிசிட்டி) குறைய ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் டாக்டர் பரிந்துரையின்படி, சில கிரீம்களைப் பயன்படுத்தலாம். கிரீம்களைத் தேர்ந்தெடுக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிராண்ட், விலை, அதில் கலந்துள்ள ரசாயனங்களைக் கவனித்து வாங்க வேண்டும். இதனால், பெரும்பாலான சருமப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். 40 வயதில், சருமத்தில் உள்ள கொலாஜன் இழப்புக் காரணமாக சுருக்கம் ஏற்படலாம். இதையும் சரிசெய்ய முடியும்” என்கிறார் டாக்டர்.

கோடை கால சருமப் பராமரிப்பு வழிகள் என்னென்ன?

முகப்பரு தோன்றக் காரணம் என்ன? தவிர்க்கும் வழிகள் என்னென்ன?

பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வதைத் தவிர்க்க முடியுமா?

சருமப் பராமரிப்பு கிரீம்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை?

பொடுகுப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

முடி உதிர்வைத் தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன?

அன்பு வாசகர்களே, ஜூன் 1 முதல் 7 வரை தினமும், 044-66802904, என்ற எண்ணுக்கு போன் செய்தால், முகப்பரு, பொடுகு, முடி உதிர்தல் உள்ளிட்ட சருமநோய் சந்தேகங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சருமநோய் சிகிச்சை நிபுணர்  எல்.ஆர்த்தி


“விதவிதமான தலைவலியுடன் இன்றைக்கு நிறையப் பேர் மருத்துவமனைக்கு வருகின்றனர். தலைவலியில் ஏராளமான வகைகள் உள்ளன. எதனால் தலைவலி என்பதைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். என்றாவது ஒருநாள் வருகிறது. மாத்திரை போட்டாலும், போடவில்லை என்றாலும், அடுத்த நாள் தலைவலி இல்லை என்றால், பிரச்னை இல்லை. ஆனால், தொடர் தலைவலி, வாந்தி என அதனுடன் பாதிப்பு இருந்தால், வேறு ஏதேனும் பிரச்னை இருக்கலாம். மன அழுத்தத்தால் வரக்கூடிய தலைவலிக்கு, சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனையோ மாத்திரை, மருந்தோ தேவை இல்லை. ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் இருந்தாலே போதும். ஆனால், அதிகாலை தலைவலி, வாந்தி என்று இருந்தால், மூளையில் கட்டி ஏதேனும் உள்ளதா என்று கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் கே.ஆர்.சுரேஷ் பாபு.

தலைக் காயங்கள் பற்றி பேசுகையில், “சாலை விதிகளை மதிக்காதது, அதிவேகப் பயணம், மதுப் பழக்கம் காரணமாக, இன்றைக்கு அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன.  இதனால், முதலில் பாதிக்கப்படுவது தலைப்பகுதியும் மூளையும்தான். ஹெல்மெட் அணியாததாலும் அதிக அளவில் தலைக் காயங்கள் ஏற்படுகின்றன.

மது அருந்துவதால் ஏற்படும் விபத்துக்களில், இவர்களாகவே மற்றொரு வாகனத்தை இடிப்பதுதான் அதிகம். எதிர்பாராத சூழலில், உடனடியாக முடிவெடுக்கும் திறனை மூளை இழந்துவிடுவதால்தான் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், தலையில் பலமாக அடிபட்டு, உயரிழப்பு வரைகூடச் செல்லலாம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்” என்கிறார் டாக்டர்.

தலைவலியில் என்னென்ன வகைகள் உள்ளன?

ஒற்றைத் தலைவலி ஏன் ஏற்படுகிறது?

ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை உள்ளதா?

மூளைக்கட்டிகளால் ஏற்படக்கூடிய தலைவலிகளுக்கு அறிகுறிகள் என்ன?

மூளைக் கட்டி அறுவைசிகிச்சை சிக்கலானதா?

தலைக்காயங்களைத் தவிர்க்கும் வழிகள் என்னென்ன?

அன்பு வாசகர்களே, ஜூன் 8 முதல் 15 வரை தினமும், 044-66802904, என்ற எண்ணுக்கு போன் செய்தால், தலைவலியின் வகைகள், கண்டறியும் வழிகள், தவிர்க்கும் முறைகள், தலைக் காயங்களைத் தவிர்ப்பது எப்படி என்பன பற்றி விரிவாகப் பேசுகிறார் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் கே.ஆர்.சுரேஷ் பாபு.

- பா.பிரவீன் குமார், படம்: எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick