மூளைக்கு பலம் தரும் உணவுகள் | Good Foods for a Strong Brain | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2015)

மூளைக்கு பலம் தரும் உணவுகள்

சுமதி
ஊட்டச்சத்து ஆலோசகர்

மூளையின் பலமே உடலின் பலம். உடலின் ஒவ்வோர் உறுப்பையும் இயக்குவது மூளை. மூளை ஆரோக்கியமாகச் செயல்பட, சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் அவசியம். அவை, உடலில் சரிவிகித அளவில் இருக்க வேண்டும். அந்த வகையில், மூளையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவும் உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்.

முந்திரி, பாதாம், வால்நட்

வைட்டமின் இ, ஃபோலேட், மக்னீசியம், செலினியம், ஃபோலிக் அமிலம், மெலட்டோனின், கோலின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, மூளையின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களின் பாதுகாப்புக்கும் உதவுகின்றன. வளர் இளம் பருவத்தினர், தினமும் ஒன்றிரண்டு சாப்பிடலாம். மனஅழுத்தத்தைக் குறைக்கும் வல்லமை வால்நட்டுக்கு உண்டு. அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின், வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோயைச் சரியாக்கும். தினமும், சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மனம் தொடர்பான மாற்றங்கள் ஏதேனும் வந்தால்கூட சரிசெய்யும். மூளையில் உள்ள வளர்ச்சி ஹார்மோனின் (BDNF- Brain Derived Neurotrophic Factor) செயல்பாட்டை ஊக்குவிக்கும். புதிதாக நியூரான்கள் வளர்வதற்கு உதவும். அதிகமாகச் சாப்பிட்டால், பித்தப்பை பிரச்னைகள் வரலாம்.

முட்டை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள்

கோலின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. தொடர்ந்து சாப்பிட்டுவர, அறிவாற்றல், நினைவாற்றல் அதிகரிக்கும். அல்சைமர், டிமென்ஷியா, ஞாபகமறதி போன்றவை வராமல் தடுக்கும். அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய தோரின் என்ற சத்து இவற்றில் உள்ளது. அதிகமாகச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். வாயுப் பிரச்னை வரலாம்.

கீரை

இதில் உள்ள சத்துக்கள் செரடோனின் உற்பத்தியைத் தூண்டி, மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கும். சீரில்லாத ரத்த ஓட்டப் பிரச்னையால் ஏற்படும், மூளை பாதிப்பைச் சரிசெய்யும். மூளையின் பாதிப்புகளைப் பெருமளவு  குறைக்கும். பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும் ஆற்றல், கீரைக்கு உண்டு.  வயதானவர்களுக்கு வரும் மறதி நோய், மன நோய்் பிரச்னைகளையும் சரிசெய்யக்கூடியது. வாரம் நான்கு முறை கீரை சாப்பிட வேண்டியது அவசியம். குழந்தைகளுக்குத் தொடர்ந்து கீரை கொடுத்துவந்தால், கற்கும் திறன் மேம்படும். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள், பொட்டாசியத்தின் அளவைக் குறைத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டவர்கள், கீரைகளை அளவோடு சாப்பிடலாம்.

ஈஸ்ட்

பிரெட், இட்லி, தோசை போன்ற உணவுகளில் ஈஸ்ட் இருக்கும். மூளை சிறப்பாகச் செயல்படுவதற்கான வைட்டமின்களை ஈஸ்ட்டிலிருந்து பெற முடியும். வைட்டமின் பி மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், மனநிலை தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். மூளையின் ஆயுட்காலத்தை அதிகப்படுத்தும். இயற்கையாகவே கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்கும். கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகம், கவுட், அல்சர் பிரச்னை உள்ளவர்கள் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

காலிஃப்ளவர், புரோகோலி

கோலின், வைட்டமின் பி, பி6 சத்துக்கள் நிறைந்துள்ளன. கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகமாகும் என்பதால், குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.  மூளை வளர்ச்சியை மேம்படுத்தும். மனம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். சிறுநீரகக் கற்கள், யூரிக் ஆசிட், அலர்ஜி மற்றும் சுவாசப் பிரச்னை இருப்பவர்கள், அளவாகச் சாப்பிடலாம். அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை அதிகமாகலாம்.

மூளைக்குத் தேவையான சத்துக்கள்

வைட்டமின் பி, தையமின்,   மூளை நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

ரிபோஃபிளேவின், வைட்டமின் பி2, - நரம்புகளில் புண்கள் வராமல் பாதுகாக்கும்.

நியாசின், பி காம்ப்ளெக்ஸ்,  நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும். சிறப்பாகச் செயல்படவைக்கும்.

பாந்தோதினிக் அமிலம்,  நினைவாற்றலை அதிகப்படுத்தும்.

ஃபோலிக் அமிலம், கருவின் முதுகெலும்பு, நரம்புகள், மூளைப் பகுதி வளர உதவும்.

வைட்டமின் பி12, செலினியம் - மூளை சிறப்பாகச் செயல்பட உதவும்.

வைட்டமின் இ,சி, மூளை வளர்ச்சிக்கு முக்கியம்.

எலும்பில் இருக்கும் கால்சியம், மூளையில் படியும். அவை, ரத்தத்தில் கலக்காமல் இருக்க மக்னீசியம் உதவும்.

தாமிரம், தோரின், கோலின், பயோடின் நரம்புகளின் குறைபாடுகளைப் போக்கும்.

 - மினு

நீங்க எப்படி பீல் பண்றீங்க