சிறுநீரகம் காக்க எளிய வழிகள்

வி.சந்திரசேகர்
சிறுநீரகவியல் மருத்துவர்

நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு, உடலுக்குத் தேவையான விதத்தில் அவை மாற்றப்பட்டு, ரத்தத்தின் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இப்படி, ஊட்டச்சத்துக்கள் உடைக்கப்படும்போது, நச்சுப்பொருட்களும் உருவாகின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியை சிறுநீரகங்கள் செய்வதுடன், உடலில் நீர்ச்சத்து சமநிலையில் இருக்கவும் உதவுகின்றன. சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில விஷயங்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தைத் கட்டுக்குள் வைத்திருத்தல்

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது சிறுநீரகத்தின் நுண்ணிய வடிகட்டி அமைப்பைப் பாதிக்கும். இதனால், ‘அல்புமின்’ என்ற புரதம் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். முதலில், இது மைக்ரோ அளவில் வெளியேறும். மேலும் மேலும் பாதிக்கப்படும்போது, மேக்ரோ அளவில் வெளியேற ஆரம்பித்துவிடும். மேலும் உடலில் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் தங்க ஆரம்பித்துவிடும். ரத்தத்தில் உள்ள நச்சு மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்றும் திறனை சிறுநீரகம் இழந்துவிடும். பல்வேறு உடல்நலக் குறைபாட்டையும் ஏற்படுத்தும்.

உயர்ரத்த அழுத்தத்தின்போது, இதயம் அதிகமாகத் துடிக்கும். இதனால், இதயம் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, கண் நோய்கள், சிறுநீரகப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, ரத்த அழுத்தம் 120/80-க்குக் கீழ் என்ற அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் இருந்தால் வாழ்க்கைமுறை மாற்றத்துடன், மருத்துவரின் ஆலோசனையின்படி தேவை எனில் மாத்திரை மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உப்பு அளவைக் குறைக்க வேண்டும்

ஒருநாள் தேவையைக் காட்டிலும் அதிக அளவில் சோடியம் உப்பை உணவில் சேர்க்கிறோம். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, சிறுநீரகத்தில் கல் உருவாக வழிவகுக்கும். ஒரு நாளைக்கு ஆறு கிராமுக்்கும் குறைந்த அளவு உப்பு (ஒரு தேக்கரண்டி)எடுத்துக்கொண்டாலே போதும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், அதைவிடக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

போதுமான அளவு தண்ணீர்

உடல் நீர்ப்பதத்துடன் இருக்கவும், நச்சுக்களை சிறுநீரகம் வெளியேற்றவும் தண்ணீர் உதவுகிறது. மேலும், உடலின் வெப்பநிலை சீராகவும், ரத்தம் கட்டித்தன்மை அடைந்து விடாமலும் காக்கிறது. மேலும் போதுமான அளவு நீர் குடித்து, சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பாக்டீரியாத் தொற்றையும் தடுக்கிறது. நமக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை, நம்முடைய உடலே கேட்கும். பொதுவாக ஒன்றரை முதல் இரண்டரை லிட்டர் அதாவது, நாள் ஒன்றுக்கு 8 - 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். நான்கைந்து லிட்டர் என்று அருந்தினால் அது, ரத்தத்தில் சோடியம் அளவையும் சிறுநீரகத்துக்கு அதிகப்படியான வேலைப்பளுவையும் கெடுத்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சிறுநீர் கழிக்காமை...

சிறுநீரகத்தின் முக்கிய வேலையே, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துவதுதான். இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், நச்சுடன் சேர்த்து பிரிக்கப்பட்டு சிறுநீர்ப்பைக்கு அனுப்பப்படும். 150 மி.லி அளவு சேர்ந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். அப்போது, உடனடியாக ரெஸ்ட் ரூம் சென்றுவிடவேண்டும். இல்லையெனில், சிறுநீர்ப்பை தன் கொள்ளளவைத் தாண்டி சேமித்துவைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகும். இதனால் சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். மேலும், பாக்டீரியா வளர்வதற்கும் வழிவகுக்கும்.

சரியான உணவு

ஜங்க்ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவு உட்கொள்ளும்போது, அது சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. சிறுநீரகத்துக்குப் பலம் தரும் மீன், கீரை, பூண்டு போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை எடுத்துக்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்டவை, பாக்கெட் உணவுகள் மற்றும் அப்பளம், ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.  

ஆரோக்கியமான பானங்கள்

காபி மற்றும் குளிர் பானங்களில் உள்ள காஃபின் என்ற ரசாயனம் உடலில் உள்ள நீர்ச்சத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதனால், சிறுநீரகம் அதிகப்படியான வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகும். காபி, டீ மற்றும் கார்பனேட்டட் குளிர் பானங்கள், சோடா போன்றவற்றைத் தவிர்த்து, தினமும் பழச்சாறுகள், இளநீர் அருந்தலாம். இதனால், உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் கிடைக்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் ஆக்சலேட் அமிலம் அதிகம் உள்ள கீரை மற்றும் பீட்ரூட்டைத் தவிர்க்க வேண்டும்.

மது மற்றும் சிகரெட்

மது அருந்துவதால் உடலில் உள்ள எலக்ட்ரோலெட் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதை சரிப்படுத்த ஹார்மோன் சுரப்பு நிகழ்கிறது. சிகரெட் புகைக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகின்றன. மேலும், சிறுநீரகப் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

தினசரி உடற்பயிற்சி

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தேவையான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்ளுதல் போன்றவை உடலைப் புத்துணர்வாக வைத்திருப்பதுடன் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்.

சுய மருத்துவம்

டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரைகள் அல்லது மருந்து டோஸ் அளவு அதிகரித்தாலும், சிறுநீரகத்தின் வேலைப் பளுவும் அதிகரித்துவிடும். எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் டாக்டர் பரிந்துரையின்றி எடுக்கக் கூடாது. பொதுவாக வலி நிவாரணிகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்கின்றனர். ஒருநாள் எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், அதையே தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். சில மாற்று மருத்துவ மருந்துகளில் உலோகம் அதிக அளவில் இருக்கும். இதுவும் சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்கலாம். அதேபோல வைட்டமின், தாது உப்புக்கள் மாத்திரையாக இருந்தாலும் சரி, இயற்கை மூலிகை மருந்தாக இருந்தாலும் சரி டாக்டர் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகத்தைப் பாதுகாக்கலாம்.

நோய்த்தொற்று

நோய் பரப்பும் கிருமி சிறுநீர்ப்பாதை வழியாக சிறுநீர்ப்பையை அடைந்து, வளர்ச்சி அடைவதால் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று ஏற்படுகிறது. இது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. சுகாதாரமற்ற அல்லது பொதுக் கழிப்பறைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிறுநீர் கழித்த பிறகு, நன்றாக நீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்தத் தொற்றைத் தவிர்க்கலாம்.

சிறுநீரகப் பாதிப்புக்கான வாய்ப்பு உள்ளவர்கள்

சர்க்கரை நோயாளிகள்

உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள்

நெருங்கிய ரத்த வழி உறவில், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள்

உடல் பருமனானவர்கள்

உடல் உழைப்பு இன்றி இருப்பவர்கள்

- பா.பிரவீன் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick