நினைத்தால் புரையேறுமா?

நமக்குப் புரையேறிவிட்டால், உடனே அருகே இருப்பவர், வேகமாக நம் தலையில் நாலு தட்டுத் தட்டி, ‘‘யாரோ நினைச்சுக்குறாங்க... தண்ணி குடிங்க” என்று சொல்வது, காலங்காலமாக வரும் வழக்கம். கண்ணீர் வழிய, மூச்சுத் திணற வைத்துத்தான், யாரோ நம்மை நினைக்க வேண்டுமா? ஏன் புரையேறுகிறது? புரையேறினால் என்ன செய்ய வேண்டும்?

“உணவை மெதுவாக மென்று தின்பதுதான் சரியான உண்ணும் முறை. நேரம் இன்மையால் நாம் உணவைச் சரியாக மெல்வதும் கிடையாது, பொறுமையாக விழுங்குவதும் கிடையாது. இதனால்தான் புரையேறுகிறது.

நாம் உண்ணும் உணவை நேரடியாக வயிற்றுக்குள் செலுத்துவதற்கும், தவறுதலாக நுரையீரலுக்குச் செல்லாமல் தடுப்பதற்கும், த்ரீ டயர் மெக்கானிசம் (3 Tier mechanism) என்ற தடுப்புகள் உள்ளன.  உண்ணும்போது இந்தத் தடுப்புகள் சரியாக மூடாமல்போனால், விழுங்கும் உணவு, உணவு குழாய்க்குச் செல்லாமல், நேராக மூச்சுக் குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு உண்டு. அப்போது,  மூச்சுக் குழாய்க்குச் சென்ற உணவை வெளியேற்ற, நுரையீரல் அதிகமான அழுத்தத்துடன் காற்றை அனுப்புகிறது, இதனால், மூச்சுக்குழாய்க்குள் சென்ற உணவு, வாய் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறுகிறது. இதையே புரையேறுதல் என்கிறோம். 

இப்படிப் புரையேறும்போது, மூச்சுக் குழாய்க்குச் சென்ற உணவு வெளியேறும் என்ற நம்பிக்கையில், தலையில் தட்டுகின்றனர்,  இதனால் பயன் இல்லை. உடனடியாகத் தண்ணீர் அருந்தவும் தேவை இல்லை. எந்த உணவாக இருந்தாலும், அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்த்து, மெதுவாக, கவனத்துடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதே பாதுகாப்பானது. சாப்பிடும்போதும் நீர் அருந்தும்போதும் பேசுவதை, சிரிப்பதைத் தவிர்ப்பது நல்லது.”

 - ப்ரீத்தி, படம்: சி.தினேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick