Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

மன திடமே பெண்களுக்கு தேவை !

மகசேசே விருதுபெற்ற மருத்துவர். 61 வருடங்களாக மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். திருமணம், குடும்பம் என தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளாமல், மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்துக்கொண்டவர். 88 வயதிலும் தினமும் நோயாளிகளைச் சந்தித்து, அவர்கள் துயர்போக்கி வருகிறார். பெண்கள் தினத்துக்காக டாக்டர் சாந்தாவை சந்தித்தோம்.

“பெண்களின் வாழ்க்கைமுறையில், மருத்துவரீதியாகத் தற்போது எதாவது மாற்றங்களைப் பார்க்கிறீர்களா? பெண்களுக்குத் தங்கள் உடல் பற்றிய அக்கறை இருக்கிறதா?”

“கனிவும் அன்பும் நிறைந்தவள் பெண். கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, பயமற்ற நிலை எனப் பெண்கள் இன்றைக்கு, ஆண்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கிறார்கள். ஆனால், கணவன், குழந்தைகள் எனக் குடும்பத்தை அக்கறையாகக் கவனிக்கும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வது இல்லை. வலிகளைக்கூட வெளியே சொல்லாமல் தாங்கிக்கொண்டு, முடியாத நேரத்தில்தான் டாக்டரிடம் வருகிறார்கள். காலம் கடந்து வரும்போது, நோய் முற்றிவிடுகிறது. இதுதான் என்னை வருத்தப்படவைக்கிறது.

மேல்தட்டு மக்களிடம் கொஞ்சம் மருத்துவம் குறித்த விழிப்புஉணர்வு இருக்கிறது. நடுத்தர மற்றும் கிராமப் பெண்களின் நிலைதான் இன்னும் பரிதாபம். பெண்களுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்ய, ஒவ்வொரு கிராமமாகச் சென்றிருந்தோம். அங்குள்ள பெண்கள் யாருமே தங்களைப் பரிசோதித்துக்கொள்ள முன் வரவில்லை. ‘கணவருக்கும் பிள்ளைங்களுக்கும் பாருங்க’ எனச் சொல்லிவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்களிடம் பலமுறை பேசி, ஒப்புக்கொள்ளவைத்து, பரிசோதித்தால்  பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் இருந்தது தெரியவந்தது. சிறு வயதில் தாயாகி வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் பெண்கள், நம் தமிழக கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறார்கள். தங்களை கவனித்துக்கொள்வது பற்றிய விழிப்புஉணர்வு கொஞ்சம்கூட இல்லை.

இன்று இருக்கும் சூழலில், யாருக்கு என்ன நிகழும் எனச் சொல்லமுடியாது.  80 வயதைத் தாண்டியும் யார் உதவியும் இல்லாமல் நடந்திட்டு  இருந்த எனக்கு, 2013-ல் திடீர் என்று வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. முதுகு, இடுப்பில் ஆபரேஷன் நடந்தது. வாக்கிங் ஸ்டிக் உதவியுடன்தான் நடக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரும் பாதிப்புகள், நோய்களைத் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். மனது திடமாக இருந்தால், நோய்களை வரவிடாமல் செய்யலாம்.”

“இன்றைக்குக் காய்ச்சல் வருவது போல், புற்றுநோய் வருகிறது. இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?”

“மோசமான சூழல், தவறான உணவுப் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பயிற்சி இல்லாதது எனப் பல காரணங்களால் இன்றைக்கு நோய்கள் அதிகரித்துவிட்டன. நோய்கள் வந்த பின் கவனிப்பதைவிட, வரும் முன் காப்பதே தப்பிக்க வழி. இன்றைக்குச் சந்தோஷமாக இருந்தோமா என்பதுதான் முக்கியம், நாளையைப் பற்றி கவலை இல்லை என இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றனர். இது தவறு. இன்றைக்கு செய்கிற தவறுகள் தான், எதிர்காலத்தில் நோய்களாக வந்து தாக்கும். கொழுப்பு ஆகாரங்களைத் தவிர்ப்பது, காய்கறி, பழங்கள், சமச்சீரான உணவு முறைகளைப் பின்பற்றுவது,  உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெண்கள் மாதம் ஒருமுறை மார்பகத்தை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் கட்டிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.  மல்ட்டிபிள் பார்ட்னர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த நோய்களும் வருவதற்கு காரணமாகிவிடும். வாழ்க்கைமுறை பற்றிய புரிதல் இல்லாமல், எதை எதையோ நாகரிகம் எனக் கருதாமல், முறையான வாழ்க்கையை ஆண், பெண் இருவரும்  மேற்கொள்ள வேண்டும்.    

பெண்கள் உள்ளுறுப்புகளை சுத்தமாகவைத்திருப்பதன் மூலம், கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம். 40 வயதைத் தாண்டிய பெண்கள், வருடம் ஒருமுறை ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். எதிலும் ஒரு கட்டுப்பாடு அவசியம். ஒரு பெண் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்க முடியும். இதை, ஒவ்வொரு குடும்ப உறவுகளும் உணர்ந்து, வீட்டுப் பெண்களை வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினாலே, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்திவிட முடியும். “

“நோயாளிகளோடுதான் எப்போதும் இருக்கறீர்கள். வலி, அழுகை, மரணம் என நெகட்டிவான சூழ்நிலை உங்கள் மனநிலையைப் பாதிக்காதா?”

“எனக்கு உறவுகள், நண்பர்கள் எல்லாமே இந்த நோயாளிகள் தான். மருத்துவத் துறைக்கு வந்தபோது, நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நிலை குறித்துச் சராசரி பெண்ணாக நானும் வருந்தியிருக்கிறேன். ஆனால், மருத்துவப் பணியில், இறப்புகளைப் பார்த்து, நாங்கள் துவண்டுவிட முடியாது. ஏன் இந்த நிலை என்பதை அறிந்து, இவற்றைத் தடுக்க என்ன வழி என ஆராய்ந்து, அடுத்துவரும் நோயாளிகளை நலம் விசாரிக்கப்போக வேண்டும்.  யாருடைய இழப்புகளையும் வலிகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது. வேறு ஒருவருக்கு அது நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என யோசிப்பதுதான் ஒரு நல்ல மருத்துவரின் வேலை.

இத்தனை வருடங்களில் நெகிழ்ச்சியூட்டும் எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கின்றன. 25 வருடங்களுக்கு முன்னால், 10 வயதுப் பெண் சச்சுவுக்குக் கையின் சதைப் பகுதியில் கேன்சர் வந்தது. ஆபரேஷன் செய்து சரிசெய்தோம். இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவ கணவர், குழந்தையோட வந்து என்னைப் பார்த்துட்டுப் போனா. இதுதான் இந்த வேலையில் கிடைக்கிற சந்தோஷம்’’ - நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் சாந்தா.

- ரேவதி படங்கள்: பா.அருண்
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8
சாந்தா மருத்துவர்


டாக்டர் சாந்தாவின் ஒரு நாளைய உணவு!

வயதானவர்களுக்கு உணவு செரிமானத்தன்மை குறைந்துவிடும்.  அதற்கேற்ப உணவை மாற்றிக்கொள்வது நல்லது. காலையில், காபி, டீ குடிப்பது இல்லை. ஒரு டம்ளர் மோர், ஒரு வாழைப்பழம், இரண்டு பிஸ்கட்.

மதியம், சாதம், ரசம், காய் கறிகள், கீரை எனச் சாதாரண சாப்பாடுதான்.

மாலையில்,  ஒரு கப் வெரைட்டியான பழங்கள்.

இரவு தூங்கப்போகும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, இட்லி, சப்பாத்தி என ஏதாவது சாப்பிடுவேன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
இது டாக்டர் ஃபேமிலி
எளிதில் செரிமானமாகும் உணவுகள் !
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close