கோடையின் கொடை நுங்கு - பதநிர்

"சக்கரவர்த்தி"
அரசு பொது மருத்துவர்

கோடை விடுமுறை விட்டாச்சு. சூரியன் ஸ்ட்ராவைத்து, உடலில் இருக்கும் நீரை, உறிஞ்சத் தொடங்கிவிட்டது. அதை, ஈடுசெய்யாவிட்டால், உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, பல்வேறு பிரச்னைகள் வந்துவிடும். வைட்டமின்கள், நீர்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த, நுங்கும் பதநீரும் உடலின் நீர் இழப்பைச் சரிசெய்யும். 

 

 பனங்குருத்தைத் லேசாகச் சீவிவிட்டு, அதில் வடியும் நீரை, மண்பாண்டத்தில் சேகரிப்பதே பதநீர்.  இனிப்புக் குறைந்த இந்த திரவம், ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்குள் காற்றில் உள்ள பூஞ்சையால் நொதித்து, ‘கள்’ ஆகிவிடும். அதைத் தடுக்கவே, பானையின் உட்புறத்தில், லேசாகச் சுண்ணாம்பு தடவப்படுகிறது.  நம் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது பதநீர்.  இதிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம், இருமலுக்கு உகந்தது.  கொதிக்கவைத்து ஆறவிட்டு, உடல் புண்களின் மேல் கட்டினால், காயம் சீக்கிரம் ஆறிவிடும்.

 250 மி.லி பதநீரில் 113 கி.கலோரியும் 26  சதவிகிதம் சர்க்கரையும் உள்ளன.  பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் உள்ளன. வைட்டமின் சி இதில் அதிகம். பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தையமின் நரம்பு வளர்ச்சிக்கும், இதயத்துக்கும் நல்லது. ரிபோஃப்ளேவின், வாய்ப்புண்ணுக்கு நல்லது. நிக்கோடினிக் ஆசிட் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். 

 பனை மரத்தின் பழத்தில், விதை உருவாகும் இடமே நுங்கு. பனம் பழம், இளம் காயாக இருப்பதையே நுங்கு என்று சொல்வோம். நீர்ச்சத்து நிறைந்த நுங்கு, வயிற்று உபாதைகளைப் போக்கும். நுங்கை, இளநீர் மற்றும் பதநீருடன் கலந்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

 100 கிராம் நுங்கில் மொத்தம், 43 கலோரிகளும், கால்சியம் 10 மி.லி.கிராமும், பாஸ்பரம் 20 மி.லி. கிராமும் இருக்கிறது. நுங்கில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, வயிற்றை நிரப்பி, பசிஎடுக்காமல் செய்துவிடும். உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் நுங்கு சாப்பிடலாம்.

 நுங்கு, கற்றாழை ஜெல் இரண்டையும் மசித்து, பயத்தமாவு கலந்து, முகத்தில் பூசிவர, முகம் பிரகாசிக்கும். உடலில் தேய்த்துக் குளிக்கலாம். வியர்க்குரு, வேனல் கட்டிகள், கொப்பளங்கள் போன்ற சரும நோய்கள் அண்டாது.
 
 நுங்கில் உள்ள ஆந்தோசைனின் என்ற ரசாயனம், மார்பகப் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் உள்ள பொட்டாசியம் கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.

 மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தைப் போக்கும் என்பதால்,  கர்ப்பிணிகள்  அதிக அளவு எடுத்துக்கொள்ளலாம். குளிர்ச்சியானது என்பதால், உஷ்ண தேகம்கொண்டவர்கள் சாப்பிடலாம். இதில் உள்ள தாது உப்புக்கள் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்.

 - சி.சந்திரசேகரன்
படங்கள்: நா.ராஜமுருகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick