மருதாணி மகத்துவம்!

ச.இளங்கோ
அரசு சித்த மருத்துவர்

ருதாணி இலைகளைப் பறித்து, வீடே மணக்கும் அளவுக்கு அம்மியில் அரைத்து, இரவு சாப்பிட்டு முடித்தவுடன் கை, கால் விரல்களுக்குத் தொப்பி போட்டு, தூங்கி எழுந்ததும் கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாக சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்ந்த காலம், இன்றைய  குழந்தைகளுக்கு வாய்க்கவில்லை.

கைகள் நொடியில் சிவக்க, மெஹந்தி கோனும், நெடுநாள் நீடிக்க டாட்டூவும்தான் அழகு, ஸ்டைல் என்று நினைக்கின்றனர். இவை, இருக்கும் அழகையும் கெடுத்து, சரும நோய்க்கும் வித்திடும். ஆனால், இயற்கையின் கொடையான மருதாணியைப் பயன்படுத்திவந்தால், அழகும் ஆரோக்கியமும் நிரந்தரம்.

மருத்துவப் பலன்கள்:

 மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம்.

 மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம். கண் எரிச்சல், கை,கால் எரிச்சல் குணமடையும்.

 நகப்புண், நகச்சுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகும்.

 மருதாணியைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டவேண்டும். இதை, ‘இலை ஊறல் குடிநீர்’ என்பர். இந்த நீரைத் தொடர்ந்து 20 நாட்கள் குடித்துவந்தால், மேகச்சொறி, படை நீங்கும். பேதி, சீதபேதி கட்டுப்படும்.

 மிகச்சிறந்த கிருமிநாசினி. காயம்பட்ட இடத்தில், ‘இலை ஊறல் நீரை’ விட்டு, ஒத்தடம் கொடுத்தால், கிருமித்தொற்று ஏற்படாது. விரைவில் குணமாகும்.

 10 மி.லி மருதாணி இலைச்சாற்றுடன், பால் கலந்து குடித்துவந்தால், கை, கால் வலி நீங்கும்.

 மருதாணி விதையைத் தணலில் போட்டு, உடலில் புகை படும்படி இருந்தால், வெண்புள்ளிகள் மறையும்.

 மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்துவந்தால்,  விந்து எண்ணிக்கை பெருகும்.

 மருதாணி மிகவும் குளிர்ச்சியானது என்பதால், உடல்சூட்டைத் தணிக்கிறது. மருதாணியை உட்கொள்ளும்போது, சிலருக்கு அந்தக் குளிர்ச்சி, உடலுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.

சு.ராஜா
படம்: த. ஶ்ரீனிவாசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick