நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன்

ப்பேர்ப்பட்ட மனிதரையும் தன் கலகல பேச்சால், குபீரென சிரிக்கவைப்பதில் வல்லவர் கு.ஞானசம்பந்தன். இலக்கியவாதி, பேராசிரியர், நடிகர் என இந்த பல கலை வித்தகர் கடைப்பிடிக்கும் ஆரோக்கிய வாழ்வுக்கான ரகசியங்கள் இங்கே...

வரும் முன் காப்போம்

‘கடன் இல்லாதவன் லட்சாதிபதி! நோய் இல்லாதவன் கோடீஸ்வரன்னு!’ ஒரு சொலவடை உண்டு. பொதுவாக, ஐம்பது வயது வரைதான், உடல் நாம் சொல்வதைக் கேட்கும்.  அதன்பிறகு, உடல் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும்.

உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால், எந்த நோயும் அண்டாது. “உடல் எடையைக் குறைக்க நான் என்ன செய்யணும்”னு டாக்டர்கிட்ட  கேட்டேன். “தலையை மட்டும் வலது பக்கமாவும் இடது பக்கமாவும் ஆட்டுங்க, எடை குறைஞ்சுரும்”னு சிம்பிளா சொன்னார். “ஐ! ரொம்ப ஈஸியா இருக்கே”னு ஆச்சர்யப்பட்டேன். உடனே டாக்டர், “கண் முன்னே, சுவையான சாப்பாடு இருக்கும்போது, நாக்குல எச்சில் ஊறிட்டு இருக்கறப்போ, இந்தப் பயிற்சியை செய்”னு சொன்னாரு. சாப்பாடு எவ்வளவு ருசியாக இருந்தாலும்,  வயிற்றுக்குத் தேவையான அளவுதான் சாப்பிடுகிறேன். நம்மையும், நாம் இருக்கும் இடத்தையும் சுத்தமாகவும், மனதை அமைதியாகவும் வைத்திருந்தால்,  நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

நேர மேலாண்மை மற்றும் உணவுக் கட்டுப்பாடு

நேரம்... யாருக்காகவும், எதற்காகவும் வளைந்துகொடுக்காது. நேரத்தைச் சரியாக பயன்படுத்தினால், நிறைய சாதிக்கலாம். குறைந்தபட்சம், ஆறு மணி நேர இடைவிடாத தூக்கம் அவசியம். நேரத்துக்குத் தூங்கி எழுந்தாலே, உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். வேலையைப் பொறுத்து, தூங்கும் நேரம் மாறிக்கொண்டே இருந்தாலும், காலை ஆறு மணிக்கு எழுந்துவிடுவேன். எழுந்ததும், திரிபலா சூரணப் பொடி, தேன் இரண்டையும் வெந்நீ்ரில் கலந்து குடிப்பேன். அடுத்து, 20 நிமிடங்கள் வாக்கிங். நடக்கும்போதே தேவாரம், திருவாசகம் சொல்லுவேன். தினமும் காலையில் சோளம், குதிரைவாலி, தினை மாதிரி சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுவேன். கொஞ்சம் நட்ஸ், பச்சை வெங்காயம், சீரகம் கலந்த மோர் குடிப்பேன். மதியம் சாப்பிடுகிற இலையில், வழக்கமாக சோறுவைக்கிற இடத்தில், காய்கறிகளும் காய்கறிவைக்கிற இடத்தில், சோறும் வைத்துச் சாப்பிடுவேன். மாலை நேரத்தில், நாட்டு வெல்லம் சேர்த்த பொரிகடலை, சுண்டல் சாப்பிடுவேன். இரவு, கோதுமை தோசை, சப்பாத்தி ஏதாவது இரண்டு சாப்பிடுவேன்.

மனம்விட்டுப் பேசலாமே!

‘அழுதால் துக்கம் பாதியாகக் குறையும். சிரித்தால் மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்’னு பெரியவங்க சொல்வாங்க. முன்பு எல்லாம், ரயிலில் சகபயணிகளிடம் பேசியபடி
தான் பயணமே. ஹெட்போன் எல்லா பேச்சையும் குறைத்துவிட்டது. ஒரு தடவை ரயிலில் போகும்போது, சகபயணியிடம், “என்னங்க வெயில் இப்படி அடிக்குதுன்னு” சொன்னேன். அதற்கு அவர், “இப்பிடி அடிக்காம வேற எப்படி அடிக்கும்”னு சொல்லி, முகத்தைத் திருப்பிக்கொண்டார். மனம்விட்டுப் பேசுவது அவசியம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதால்தான், ஸ்ட்ரெஸ் அதிகமாகிறது. வெட்டிப்பேச்சு, வம்பு இழுக்கும் பேச்சுதான் இருக்கக் கூடாதே தவிர, ஆரோக்கியமான சிநேகம் அனைவருக்குமே அவசியம்.

ஞானசம்பந்தன் தரும் டிப்ஸ்

யோகா உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், டி.வியில் யோகா செய்யும் ஆசிரியரைப் பார்த்து,  செய்யக் கூடாது. சரியான யோகா பயிற்சியாளரிடம் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்.

உடலில் சின்ன பிரச்னை வந்தாலும் டாக்டரிடம் ஓடக் கூடாது. ஓரிரண்டு நாள் காய்ச்சல் வந்தால், அப்படியே விட்டுவிடலாம். ஒருவேளை காய்ச்சல் தொடர்ந்து இருந்தால், மருந்தகம் போய், தானே மாத்திரை வாங்கி சாப்பிடாமல், டாக்டரைப் பார்க்க வேண்டும்.  ஒரு நோய்க்கு மூன்று நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று சொன்னால், மூன்று நாட்களும் மருந்து சாப்பிட வேண்டும்.  இடையில் நிறுத்தக் கூடாது.

பொழுதுபோக்கு சீரியஸாக இருக்கக் கூடாது. ஜாலியாக இருக்க வேண்டும். கண்ணாமூச்சி விளையாடினால், மனசு சந்தோஷமாக இருக்கும் என்றால், எந்த வயதிலும் கண்ணாமூச்சி விளையாடலாம். தவறு இல்லை.

அருகில் இருக்கும் இடங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, நடந்து போகலாம். தினமும் 20-30 நிமிடங்கள் ஜாலியாக நடைப்பயிற்சி செய்தாலே, ஆரோக்கியமாக வாழ முடியும்.

பிடித்ததைச் செய்யுங்கள்

அதிகமாக வேலை செய்தாலும் பிடிக்காத வேலையைச் செய்தாலும், உடல் சோர்ந்துபோகும். பிடித்த வேலையைச் செய்யும்போது, மனம் குதூகலமாக இருக்கும். உதாரணமாக, ஒரு கல்லூரிப் பையன் தன்னோட காதலியை பஸ்டாப்பில் பார்க்க, காலையிலேயே எழுந்து, குளித்து, எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து, குறித்த நேரத்துக்கு பஸ் ஸ்டாப் போய்விடுவான். அதே திட்டமிடலோடு, இளைஞர்கள் தங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன, தனக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து,  விருப்பமுள்ள துறையில் ஈடுபட்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “நாட்டுக்கு ஐந்தாண்டுத் திட்டம் மாதிரி, ஒவ்வொரு மனுஷனும் தனக்கு ஐந்தாண்டுத் திட்டம் போடணும். அடுத்த ஐந்து வருடங்களில், நாம என்ன சாதிக்கணும், என்ன வேலைகளை முடிக்கணும் என்பதை எல்லாம், திட்டம் போட்டு செயல்படுத்தணும்”னு சொன்னார். சின்ன வயசுல இருந்தே, நாமே நமக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

- பு.விவேக் ஆனந்த், படங்கள்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick