ஜீரண சக்திக்கு சிறுகீரை

மிழ்நாட்டில் அதிக அளவில் தோட்டங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுவது சிறுகீரை. தண்டு வகையைச் சேர்ந்த சிறுகீரைக்கு, ‘சில்லி’, ‘சிறிய கீரைத்தண்டு’ என வேறு பெயர்களும் இருக்கின்றன. நீளமான தண்டுகளைக் கொண்ட இந்தக் கீரையின் தண்டு, இலை இரண்டுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை.

சிறுகீரையைச் சாப்பிட்டுவந்தால், கண் பார்வைத்திறன் மேம்படும். கண் புகைச்சல், கண் காசம், கண்ணில் ஏற்படும் படலம், புண்கள் மற்றும் உடலில் வரக்கூடிய பித்தநோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், செரிமானக் கோளாறுகள் உண்டாகும். மேலும், மூலம் உள்ளிட்ட பலவேறு பிரச்னைகளும் வரும். சிறு கீரையைச் சீராக உணவில் சேர்த்து வந்தால், அது மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். ஜீரண சக்தி மேம்படும்.

சிறுகீரையை உண்பதால், சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், நீர் எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும். குரல் வளம் பெறும்.

சிறுகீரையை வேர் முதல் இலை வரை எடுத்து, மிளகுத் தூள், உப்பு, நெய் சேர்த்து அம்மியில் அரைத்துவைத்து, 5-10 கிராம் அளவுக்கு ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால்,  நினைவுத்திறன் பெருகும்.

சிறுகீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதனைச் சீரான இடைவெளியில் சாப்பிட்டுவந்தால், எலும்புகள் பலமடையும். உடல் தளர்ச்சி நீங்கும்.

சிறுகீரையுடன் மஞ்சளை சிறிதளவு சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு உள்ள  இடங்களில் தடவிவர, நிவாரணம் கிடைக்கும்.

சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களுக்கு மிகவும் ஏற்றது.

சிறுகீரையுடன் மிளகைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டுவர, சரும நோய்கள் உண்டாகாது.

சிறுகீரையுடன் மஞ்சள், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, பருக்கள் மீது பூசினால், பருக்கள் மறையும்

- பு.விவேக் ஆனந்த்

படம்: தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick