Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொழுப்பைக் கரைக்கும் கிரீன் டீ!

டல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது ‘கிரீன் டீ’. காபி, டீ-க்கு நல்ல மாற்றாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த சீனாவின் தேசிய பானம். மொக்குகளைப் பறித்து, கைகளால் கசக்கி, நிழலில் உலர்த்தி, பதப்படுத்தப்பட்டு் பயோகெமிக்கல் முறையில் தயாரிக்கப்படுகிறது. ‘சூப்பர் டிரிங்க்’ என்று சொல்லும் அளவுக்கு கிரீன் டீயில் பலன்கள் அத்தனையும் பலே!

கிரீன் டீ தயாரிப்பது எப்படி?

ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, இறக்க வேண்டும். அதில், ஒரு தேக்கரண்டி அளவுக்கு கிரீன் டீ இலைகளைப் போட்டு, இரண்டு நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, கிரீன் டீயின் சாறு வெந்நீரில் இறங்கியிருக்கும். அதை வடிகட்டி, ஓரிரு சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும். சர்க்கரை, தேன் முதலானவற்றைத் தவிர்த்தால்தான், கிரீன் டீயின் முழுப் பலனும் கிடைக்கும். கசப்பாக இருக்கிறது, குடிக்க முடியவில்லை என்பவர்கள் தொடக்கத்தில் மிகச் சிறிய அளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்

கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால், பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.

உண்ட உணவை ஜீரணிக்கவைப்பதில், கிரீன் டீக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. கிரீன் டீ செரிமான சக்தியைத் தூண்டி, செரிமான உறுப்புகளுக்கு நன்மை அளிக்கிறது. எனவே, உணவு உண்டு 15 - 20 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ பருகுவது நல்ல பலனைத் தரும்.

சிலருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால், உடலில் ஒருவித நடுக்கம் ஏற்படும். உடலில் நல்ல செல்களை உருவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம், உடல் நடுக்கத்தில் இருந்து, கிரீன் டீ விடுதலை அளிக்கும்.

உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால்   உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.

கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டும் தன்மை படைத்தது.

சர்க்கரை நோயாளிகள், நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை ஆகியவற்றோடு, கிரீன் டீ பருகி வருவதும், சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். ஏனெனில், நாம் எந்த  உணவை எடுத்துக் கொண்டாலும், அது குளுக்கோஸாக மாறி, ரத்தத்தில் கலக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.

கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது.

தொடர்ந்து கிரீன் டீ அருந்தும்போது, இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

கிரீன் டீயைத் தினமும் அதிக அளவில் அருந்துவது தவறு. இதனால், ரத்தத்தின் உறையாத்தன்மை அதிகரிக்கும்.

கவனிக்க...

கிரீன் டீயின் இலைகளை அதிக நேரம், அடுப்பில் கொதிக்கவிடக் கூடாது; கசக்கும்.

வெந்நீரை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டுத்தான் கிரீன் டீ இலைகளைப் போட வேண்டும்.

அதிக நேரம் கிரீன் டீ இலைகளை நீரில் போட்டு, வைத்திருந்தால், டார்க் கலரில் மாறிவிடும். இது உடம்புக்குக் கெடுதல்.

கிரீன் டீ இளம் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

கிரீன் டீயை அதிக சூட்டிலோ, ஆறிய பிறகோ குடிக்கக் கூடாது.

ஒரு நாளைக்கு ஆறு கப் கிரீன் டீக்கு மேல் குடிப்பது, உடல் தொந்தரவை ஏற்படுத்தும்.

ஆல்கஹாலுடன் சேர்த்தோ அல்லது உணவு சாப்பிடும்போது இடையில் அருந்துவதோ தவறு.

அல்சர் பிரச்னை உள்ளவர்கள், வெறும் வயிற்றில் கிரீன் டீ பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

- ச.ஆனந்தப்பிரியா

படங்கள்: சூ.நந்தினி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஜீரண சக்திக்கு சிறுகீரை
சருமப் பொலிவுக்கு வெள்ளரி-ஆரஞ்சு ஜூஸ்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close