சிறிய இதயம் பெரிய நம்பிக்கை

அறுவைசிகிச்சையில் ஒரு மைல்கல்

காராஷ்ட்ரா மாநிலம், சாங்லி ஊரைச் சேர்ந்த சிறுமி மோக்‌ஷதா தேஷ்பாண்டேவுக்கு மூன்று வயது. இவருக்கு இடதுபுறம் உள்ள நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதை நீக்க ‘லெஃப்ட் பல்மனரி ஆர்ட்டரி பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ (Left pulmonary artery balloon angioplasty) எனும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் இதய மருத்துவ நிபுணர் பிரேம் சேகர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். பல்மனரி அட்ரீசியா (Pulmonary atresia) எனும் பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மோக்‌ஷதா, மூன்று வெவ்வேறு கட்ட சிகிச்சைகளைக் கடந்து, இன்று ஆரோக்கியமாக இருக்கிறாள்.

மோக்‌ஷதாவின் பெற்றோர் பங்கஜ் தேஷ்பாண்டே - ஷில்பா. இவர்கள் சொல்கிறார்கள்... “மோக்‌ஷதா 2012-ம் ஆண்டு, ஏப்ரல் 4-ம் தேதி பிறந்தாள். அவள் கருவுற்றிருந்த ஆறாம் மாதத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவளுக்கு, டி.ஜி.ஏ எனும் குறைபாடு இருப்பது தெரிந்தது. ‘அது சாதாரணமான குறைபாடுதான். கவலைப்பட வேண்டாம்’ என்றார்கள் மருத்துவர்கள்.

மோக்‌ஷதா பிறந்த பிறகு, அவளுடைய உடல் நீல நிறத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். பரிசோதித்த டாக்டர்களோ, ‘நுரையீரலுக்குக் கெட்ட ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக் குழாயே குழந்தைக்கு இல்லை’ என்றார்கள். மேலும், ‘இது சிக்கலான பிரச்னை, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ எனக் கைவிரித்தனர். இந்த நிலையில், மோக்‌ஷதாவை சென்னை கொண்டுவந்தோம்.

பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘இப்போது அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு அவள் உடல் வலிமையானதாக இல்லை. தற்சமயத்துக்கு உயிரைக் காப்பாற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்யலாம்’ என்றனர். மேலும், 9-வது மாதத்திலும், 5 வயதுக்குப் பிறகும் ஓர் அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும் என்றனர். இப்போது, அவளது நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயை விரிவடையச் செய்ய அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.”

டாக்டர் பிரேம் சேகர் சொல்கிறார்... “கருவில் இருக்கும்போது முதலில் உருவாகும் உறுப்பு இதயம். இதயத்தில் இருந்து இரண்டு குழாய்கள் ரத்தத்தை வெளியே கொண்டுசெல்கின்றன. ஒன்று, சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை உடலுக்குக் கொண்டுசெல்லும். மற்றொன்று, அசுத்தமான ரத்தத்தை நுரையீரலுக்குக் கொண்டுசெல்லும். மோக்‌ஷதாவுக்குப் பிறக்கும்போதே, நுரையீரலுக்கு அசுத்த ரத்தத்தைக் கொண்டுசெல்லும் பல்மனரி ஆர்டரி (Pulmonary artery) உருவாகவில்லை.

தாயின் கருவறையில் குழந்தை இருக்கும்போது, பேடன்ட் டக்டஸ் ஆர்டீரியோசிஸ் குழாய்  மூலம் தாயின் தொப்புள் கொடியில் இருந்து, ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் குழந்தையின் உடலுக்குக் கொண்டுசெல்லப்படும். குழந்தை பிறந்த சில நாட்களில் இந்த குழாய் மூடிக்கொள்ளும். மோக்‌ஷதாவுக்கு இந்த பி.டி.ஏ எனும் குழாய்தான் உயிர் வாழ உதவியாக இருந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் இந்தக் குழாய் மூடிவிடும் என்பதால், அதற்குள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தாக வேண்டிய கட்டாயம்.

அறுவைசிகிச்சையைத் தாங்கக்கூடிய அளவுக்கு மோக்‌ஷதாவுக்கு உடல்நிலை இல்லை என்பதால், பி.டி.ஏ ஸ்டென்டிங் செய்யப்பட்டது. அதாவது, பி.டி.ஏ குழாய் மூடிக்கொள்ளாமல் இருக்க, தற்காலிகமாக ஸ்டென்ட் பொருத்தினோம்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு, குழந்தையின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்தது. ஆனால், குழந்தைப் பருவத்தில் அது சரியாக இருந்தாலும், வளரும்போது அந்தக் குழாய் வழியாக ரத்தம் செல்வது போதுமானதாக இருக்காது. அதனால், அடுத்த கட்டமாகக் குழந்தைக்கு இதய அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது. மோக்‌ஷதா 9 மாதக் குழந்தையாக இருக்கும்போது, மேல் உடலில் இருந்து அசுத்த ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு வரும் குழாயை, நேரடியாக நுரையீரலுக்குச் செல்லும் குழாயுடன் இணைக்கும் அறுவைசிகிச்சையைச் செய்தோம். இந்த சிகிச்சையின்போது முன்னர் பொருத்தப்பட்டிருந்த ஸ்டென்ட் அகற்றப்பட்டது. தொடர்ந்து, அவளது இதயத்தின் செயல்திறனைக் கண்காணித்துவந்தோம்.

சென்ற முறை பரிசோதித்தபோது, இடது புறம் உள்ள நுரையீரலுக்குச் செல்லும் குழாயில், சிறிய அளவு அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, ரத்த ஓட்டம் சீராக உள்ள குழாய்தான் நன்றாக வளரும்; ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் குழாயின் வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆகையால், இதை விரிவடையவைக்கும் சிகிச்சை தற்போது வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சைக்குப் பிறகு, இடது மற்றும் வலது புறம் உள்ள நுரையீரல்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் சமமாக உள்ளது. இனி, இந்த ரத்தக் குழாயின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதனால், நுரையீரலும் நல்லபடியாக வளரும். இவற்றின் வளர்ச்சி, அடுத்தகட்ட சிகிச்சைக்கு மிகவும் முக்கியமானது. மோக்‌ஷதாவுக்கு ஐந்து வயதான பின், கீழ் உடலில் இருந்து அசுத்த ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டுவரும் குழாயை, நேரடியாக நுரையீரலுக்குச் செல்லும் குழாயுடன் இணைக்கும் இறுதிக்கட்ட ஃபான்டன் அறுவைசிகிச்சை (Fontan operation) செய்ய வேண்டும். அதன் பிறகு, மோக்‌ஷதா எல்லா குழந்தைகளையும் போல, ஆரோக்கியமான குழந்தையாக இருப்பாள்.” டாக்டரின் வார்த்தைகளில் நம்பிக்கை ஒளிர்கிறது.

தொகுப்பு மற்றும் படங்கள்: ஜெ.விக்னேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick