Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரித்திரம் படைத்த சரத் கெய்க்வாட்...

டல் குறையோடு பிறந்தது என்னுடைய தவறு அல்ல. ஆனால், அந்தக் குறையை நினைத்துக் குமுறி, எனக்குக் கிடைத்த இந்த அழகான வாழ்க்கையை அர்த்தம் இல்லாததாக மாற்றினால், அதுதான் பெரிய தவறு. எனது இந்த வலிதான் என்னுடைய வரமும்கூட” வாழ்க்கையின் மீதான காதலை, தன்னம்பிக்கையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் சரத் கெய்க்வாட். சர்வதேச அளவில் சாதித்துக்கொண்டிருக்கும்  மாற்றுத்திறனாளி நீச்சல்வீரர்.

சரத்துக்கு வயது 23. பிறக்கும்போதே ஒரு கை வளர்ச்சி இல்லாமல் பிறந்தவர். உடல்குறையை மற்றவர்கள் ஓயாமல் சுட்டிக்காட்டினாலும், அதைக்கேட்டு மனம் துவளாமல், உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் சரத், உடைத்து எறிந்தது விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட முந்தைய சாதனைகளை மட்டும் அல்ல; உடல் குறைபாடு பற்றிய மற்றவர்களின் ஏளனமான பார்வையையும்தான். கடந்த ஆண்டு வடகொரியாவில் நடந்த ‘ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி’-யில் ஆறு பதக்கங்களை வென்று, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.டி.உஷா அதிகபட்சமாக  ஐந்து பதக்கங்களை வென்றிருந்த சாதனையை உடைத்திருக்கிறார்.

2016-ல்நடக்க இருக்கும் ‘ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டி’க்காகத் தீவிரப் பயிற்சியில் இருக்கும் சரத் உற்சாகமாக இருக்கிறார்.

“என் பூர்வீகம் பெங்களூரு. என் அப்பா, ஒரு கம்பெனியில் சூப்பர்வைசர். அம்மா, குடும்பத் தலைவி. ஒரே அக்கா. அளவான குடும்பத்தைக் கொடுத்து, அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்த கடவுள், பிறக்கும்போதே என் இடது கையை மட்டும் சின்னதாகப் படைச்சிட்டார். ஓரளவு  வசதியான குடும்பம் என்பதால், என் வயதுப் பசங்களுக்குக் கிடைத்தது எல்லாம் எனக்கும் கிடைத்தாலும், இரண்டு கைகள் உள்ள மற்றவர்களைப் பார்த்து, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என நிறையவே  ஏங்குவேன்.

சிறு வயதில், டிரெஸ் போடுவது முதல் எனக்கு இன்னொருவரின் உதவி எல்லாவற்றுக்கும் தேவை.  ‘என்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும், வாழ்க்கை முழுதும் இன்னொருவரை எதிர்பார்த்துத்தான் வாழ வேண்டுமா?’ என மருகி, தூக்கம் இல்லாமல் கழிந்த இரவுகள் அதிகம். மிகுந்த சிரமப்பட்டு முதன்முதலாக அம்மாவின் உதவி இல்லாமல் டிரெஸ், ஷூ எல்லாவற்றையும் நானாகவே போட்டுக்கொண்ட அந்த நாளில்தான் ஒரு முழு மனிதனாக என்னை நானே உணர்ந்தேன்.   ‘இனி, யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது’ என நினைத்தேன். ‘மற்றவர்களைவிட உடலால் வித்தியாசப்பட்ட நான் ஏன் என்னுடைய வேலைகளையும் வித்தியாசமாகச் செய்யக் கூடாது?’ என்று யோசித்தேன். வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என வருந்திய எனக்கு, ஒரு கை இருப்பதே பாசிடிவ்வான விஷயம் எனத் தோன்றியது.” எனச் சொல்லும் சரத்தின் நீச்சல் பயணம் இதற்குப் பின்புதான் தொடங்கியது.

“நான்காம் வகுப்பு படித்தபோது, என் பள்ளியில் எல்லோரும் கட்டாயம் நீச்சல் பயிற்சிக்கு வர வேண்டும் என்றார்கள். ‘நமக்குத்தான் ஒரு கை சரியாக இல்லையே... எப்படி நீச்சல் பயிற்சிக்குச் செல்வது?’ எனத் தயங்கினேன். ‘சரி போவோம். அவர்களாக நம்மை ஒதுக்கிவிடுவார்கள்’ என நினைத்துத்தான் நீச்சல் குளத்தில் இறங்கினேன். ஆனால், தண்ணீரில் இருந்த அனுபவம் ஒரு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. ‘ஒழுங்காக நீச்சல் அடிக்கவில்லை என்றால் வெளியே அனுப்பிவிடுவார்கள்’ எனும் பயத்தினாலேயே ஓரளவு நீச்சல் கற்றுக்கொண்டேன்.
 
ஒரு கையை வைத்துக்கொண்டு குளிக்கவே கஷ்டப்பட்ட நான், நீச்சல் கற்றுக்கொள்ள அதிகமாகவே திணறினேன். நீச்சல் பயிற்சிக்கு கைகள்தான் துடுப்புப் போல. தண்ணீரை பின்னால் தள்ளி, நம்மை முன்னோக்கித் தள்ள கைகள் உதவுகின்றன. இரண்டு கைகளும் சேர்ந்து தர வேண்டிய விசையை, என்னுடைய ஒரு கையால் தந்தாக வேண்டும்.

சரியான வேகத்தில் நீந்தவில்லை என்றால், தண்ணீருக்குள் மூழ்கிவிட வேண்டியதுதான். இல்லை என்றால், எங்கேயாவது போய் முட்டிக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில், இந்த இரண்டுமே எனக்கு நடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டேன்.

பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்து, மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு முன்னேறி, இன்றைக்கு ஆறு பதக்கங்கள் வாங்கியுள்ளேன். ஆனால், இது அவ்வளவு எளிதாகக் கிடைத்த வெற்றி இல்லை. இதற்குப் பின் உள்ள உழைப்பும், இதற்கு நான் கொடுத்த விலையும் அசாதாரணமானவை. ஒரு கைக்கு மட்டுமே முழு அழுத்தத்தையும் தந்து நீந்தியதால், அதன் எலும்புகள் தேய்மானமாகி வலியில் துடித்தேன். பிசியோதெரப்பியால் ஓரளவு குணமாகிக்கொண்டிருந்தபோது,    தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலி தாளாமல் நீச்சலைவிட்டே விலகிவிடலாம் என்று நினைத்து இருந்தபோது ஒரு மாமனிதரைச் சந்தித்தேன். அவர் ராகுல் டிராவிட்.  ‘சரத்! ஒரு கையோடு பிறந்திருந்தாலும், நீ சாதித்துள்ள விஷயங்கள் அபாரமானவை. உனக்கு இந்தக் காயம் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இதில் இருந்து நீ மீண்டு வருவாய் என எனக்குத் தெரியும். இந்தியாவுக்கு மெடல் வாங்கித் தருவதுதான் உன்னுடைய பிறப்புக்கான அர்த்தமாக  இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொள்’ என்றார். இந்த மந்திர வார்த்தைகள்தான் முற்றுப்புள்ளி வைக்க இருந்த என் நீச்சல் கனவை டாப் கியரில் தொடர வைத்தன” என அடக்கமாக, தன் சாதனைகளைத் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் சொல்கிறார் சரத்.
                   
“கடவுள் படைப்பில் எல்லோருக்கும் எல்லாமும் நன்றாக அமைதுவிடுவது இல்லை. இல்லாததை நினைத்து வருந்துவதைவிட இருப்பதைக்கொண்டு என்ன செய்ய முடியும் என யோசித்தால், வலிகளும் வசந்தமாகிவிடும்” உறுதியாகச் சொல்கிறார் சாம்பியன் சரத்!

- க.தனலட்சுமி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா?
வாய்ப்புண்களை ஆற்றும் மணத்தக்காளி
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close