குளிர்ச்சி தரும் கோவை இலை!

கொடி வகையைச் சார்ந்தது கோவை. இனிப்பு, கசப்பு என இருவகையான கோவைக் கொடிகள் இருக்கின்றன. சமவெளிப்பகுதிகள், வேலியோரங்கள் போன்றவற்றில் இவைப் பரவலாக விளையும். கோவைக்காயை நாம் சமையலில் பயன்படுத்துகி்றோம். ஆனால்,  கோவை இலையை அதிகம் பயன்படுத்துவது கிடையாது. உண்மையில், கோவை இலை பல்வேறு மருத்துவப் பலன்களைத் தரக்கூடியது.

கோவை இலை, இருமல், நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண்களைக் குணமாக்கும்.

கோவை இலையை உலர்த்திப் பொடித்துச் சாப்பிட்டால் நீர் அடைப்பு, நீர்  எரிச்சல் முதலான தோல் நோய்கள் நீங்கும்.

கோவை இலைச்சாறை 50 மி.லி அளவுக்கு காலை, மாலை இரு வேளையும் நான்கு நாட்களுக்குக் குடித்துவந்தால் சீதபேதி குணமாகும்.

கோவை இலைச்சாறு, நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 20 மி.லி  சேர்த்து, இதனுடன்  ஒரு டம்ளர் நீராகாரம் சேர்த்துக் கலக்கி, ஒவ்வொரு நாளும் காலை, மாலை என ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால், வெட்டை நோய் குணமாகும்.

இதன் இலைச்சாறைவெண்ணெயுடன் சேர்த்துக் கலந்து, சிரங்குகளின் மீது தடவிவர, குணமாகும்.

கோவை இலைச்சாறுடன், சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்து, அதனை படை, சிரங்குகள் போன்றவற்றின் மீது தடவி வருவதோடு, ஒரு கைப்பிடி இலைகளை எடுத்து நசுக்கி, சுமார் 400 மி.லி அளவு நீரில் போட்டு, அதனை 200 மி.லி அளவுக்கு நன்றாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஏழு நாட்கள் தொடர்ந்து காலை, மாலை குடித்துவந்தால், படை, சொறி, சிரங்குப் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

கோடை காலத்தில்  கோவை இலையைக் கஷாயமாகச் செய்து அருந்தினால், உடல் சூடு சமநிலைக்கு வரும். கண்கள் குளிர்ச்சி அடையும். கண் நோய்கள் வராமல் தடுக்கும்.

வியர்வை வெளியேறாமல் நீர்கோத்து, வியர்க்குரு அதிகமாக உடலில் இருப்பவர்கள், கோவை இலையை அரைத்து, வியர்க்குரு கட்டிகளின் மேல் பூசினால் வியர்க்குரு பிரச்னை சரியாகும்.

- பு.விவேக் ஆனந்த்

படம்: தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick