ஒபிசிட்டி கல்லீரல் கேர்ஃபுல்

65 வயதான ராஜேஷ்வரன், தொடர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில், அவரின் கல்லீரல் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. அவருக்குக் கல்லீரல் எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல் ஆச்சர்யமாக இருந்தது.ராஜேஷ்வரன் 50 வயதிலேயே வி.ஆர்.எஸ் வாங்கியவர். மனைவி, இளம் வயதிலேயே இறந்துவிட்டதால், தனிமையில் இருந்துள்ளார். மாதத்துக்கு ஓரிருமுறை வெளியில் சென்று வருவதுடன் சரி. வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்ததால், அவர்கள் சமைத்துக்கொடுப்பார்கள். இவர் சாப்பிட்டுவிட்டு வீட்டிலேயே இருப்பார். இதனால், உடல் எடை அதிகரித்தது. எடை அதிகரித்ததால், அவருக்கு எழுந்து நடப்பதுகூட சிரமமாக இருந்தது. சிறிது நேரம் நடந்தாலே மூட்டு வலி வரும். இதனால், அறைக்குள்ளேயே முடங்கிப்போனார். மூட்டு வலி, உடல் வலியைத் தவிர்க்க, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். தவிர, மதுப்பழக்கமும் அவருக்கு இருந்தது. உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எனப் பல பாதிப்புகள் அவருக்கு இருந்தன. பார்வைத்திறனும் குறைந்தது.

‘வலி நிவாரணிகள் எடுக்கக் கூடாது, உடல் எடையைக் குறைக்க வேண்டும், முறையான சிகிச்சை பெற வேண்டும்’ என டாக்டர் சொல்லியும் கேட்கவில்லை. ஒருகட்டத்தில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்படவே, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பாதிக்கப்பட்டிருந்ததையும் கல்லீரல் செயல் இழந்துவிட்டதையும் டாக்டர்கள் கண்டறிந்தனர். உடல் பருமனைக் குறைத்திருந்தால் இத்தனை பாதிப்புகள்  வந்திருக்காது என்றனர் மருத்துவர்கள்.

ராஜேஷ்வரனுக்கு மட்டும் அல்ல, வரும் காலத்தில் பெரும்பாலான கல்லீரல் செயல் இழப்புக்கு உடல்பருமன்தான் காரணமாக இருக்கப்போகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு. உடல் எடை அதிகரித்தால் பார்க்கப் பருமனாகத் தெரிவோம், நமக்கான உடை கிடைக்காது என இதை ஒரு ‘பியூட்டி மற்றும் காஸ்மெடிக்’  பிரச்னையாக மட்டுமே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதித்து, ஆயுள் காலத்தையே குறைக்கக்கூடியது உடல்பருமன். இன்றைய வாழ்க்கைமுறையில் குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன் தொடங்கிவிடுகிறது. எந்த ஒரு நோயும், உடலில் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு உடலில் பாதிப்புகள் இருக்கும். உடல் பருமன் 20 - 25 வயதில் ஆரம்பித்து விடுகிறது என்றால், அப்போதே உள் உறுப்புக்கள் பாதிக்கத் தொடங்குகின்றன.

பொதுவாக, கொலஸ்ட்ரால், சர்க்கரை அதிகமாக இருந்தால், இதயத்தைப் பாதிக்கும் என்கிறோம். ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இந்த ரத்தம்தான் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் படிந்து, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இந்தக் கொழுப்புள்ள ரத்தம்தான் மற்ற எல்லா உறுப்புக்களுக்கும் செல்கிறது. இதனால், கொழுப்பு எல்லா உறுப்புகளிலும் படியும். 10-15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கல்லீரலில் கொழுப்புப் படிவதால் ஏற்படக்கூடிய பாதிப்பைப் பெரிய பிரச்னையாகக் கருதவில்லை மருத்துவ உலகம். உடலில் ஒவ்வோர் உறுப்பிலும் கொழுப்புப் படிவதுபோலத்தான் கல்லீரலிலும் எனச் சாதாரணமாக நினைத்தனர். அந்தக் காலகட்டத்தில் வைரஸ் கிருமிப் பாதிப்பு, மது போன்ற காரணங்களால் கல்லீரல் செயல் இழப்பு ஏற்பட்டதாகக் கருதினர். 17 சதவிகிதத்தினருக்கு அறிய முடியாத காரணங்களால் கல்லீரல் செயல் இழப்பு எனக் கூறிவந்தனர். இவர்களுக்கு எதனால் கல்லீரல் செயல் இழப்பு ஏற்பட்டது என ஆய்வு செய்தபோது, அனைவரின் கல்லீரலிலும் கொழுப்புப் படிந்திருந்தது தெரியவந்தது. அதாவது, ‘ஃபேட்டி லிவர்’ எனப்படும் கொழுப்புப் படிந்த கல்லீரல் பிரச்னை காரணமாக கல்லீரல் செயல் இழப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், இவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்றைக்கு நம் நாட்டில் இளைஞர்களுக்குக்கூட ஃபேட்டி லிவர் பிரச்னை இருக்கிறது. பெற்றோருக்கு அல்லது உறவினருக்குக் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்லீரலைப் பொருத்த முடியுமா எனப் பரிசோதனை செய்யும்போது, பெரும்பாலான இளைஞர்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. உடல் உழைப்புக் குறைவு, தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால் கல்லீரலில் கொழுப்புப் படிய ஆரம்பித்து இருக்கும். ஆரம்பநிலையில் சரிசெய்ய, சில மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைப் பரிந்துரைப்போம்.

கல்லீரல் அதிக சகிப்புத்தன்மை கொண்ட உறுப்பு. பாதிப்பு ஏற்படும்போது, தன்னைத்தானே சரிசெய்துகொள்ள பல முயற்சிகள் எடுக்கும். அனைத்தும் முடியாத, முற்றிய நிலையில்தான் அறிகுறிகளை வெளிப்படுத்தும். கல்லீரலில் கொழுப்புப் படிய ஆரம்பிக்கும்போது, கல்லீரலின் அளவு அதிகரிக்கும். அதன் பிறகு, கல்லீரல் சற்று கடினமாக மாறும். மூன்றாவதாக, சுருங்க ஆரம்பிக்கும். இந்த நிலையிலும் சரியாகவில்லை என்றால்தான், கல்லீரல் செயல் இழப்பு என்ற நிலைக்குச் செல்லும். உடல்பருமனுடன் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பிலும் செயல்திறன் குறைபாடு வரும். இதற்கு டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரை மருந்து எடுக்கும்போது அது கல்லீரலைத்தான் பாதிக்கும். மருத்துவர் பரிந்துரையுடன் ஓரிரு முறை வலிநிவாரணிகளை எடுப்பது தவறு இல்லை. அதையே தொடர்ந்தால் கல்லீரல், சிறுநீரகச் செயல் இழப்புக்கு வழிவகுத்துவிடும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், எல்லா நோய்களின் பாதிப்பில் இருந்தும் தப்பிக்க முடியும். ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.

- பா.பிரவீன் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick