Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்க்கின்சன் நோயை வெல்ல...

ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சை

கார்ப்பரேட் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் கிருபா பாபு. எப்போதும், வேலை வேலை என மும்முரமாகப் பணியாற்றியவர். தன்னுடைய உடலில் வேகம் குறைந்திருப்பதை உணர்ந்தார்.  தொடக்கத்தில் வயது அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னை என்று சாதாரணமாக விட்டுவிட்டார். ஆனால், நாளாக ஆக உடலின் இயக்கம் மிகவும் மோசம் அடைந்தது. காரில் இருந்து இறங்கும்போதுகூட, முன்பைவிட அதிக நேரம் தேவைப்பட்டது. சில நாட்களுக்குப் பின், வலது தோள்பட்டையில் மிகவும் இறுக்கமாக உணர்ந்தார். 2008-ம் ஆண்டு மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு பார்க்கின்சன் நோய் (நடுக்குவாதம்) இருப்பது தெரியவந்தது.

`பார்க்கின்சன் நோயை, மாத்திரைகள் மூலமாகவே குணப்படுத்திவிடலாம்’ என மருத்துவர் தெரிவிக்க, 2015-ம் ஆண்டு வரை மாத்திரைகள் உட்கொண்டு வந்திருக்கிறார். அதனால் எந்தப் பயனும் இல்லை. இதற்கு சிகிச்சையே இல்லையா எனத் தேடும்போது, சென்னையில் ஒரு மருத்துவமனையில் இதற்கு சிகிச்சை இருப்பதைக் கண்டறிந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை வந்தார்.

சென்னை வரும்போதே அவரது உடலின் இயக்கம் மிகக் கடுமையாகக் குறைந்துவிட்டது. கழிப்பறைக்குச் செல்வதற்குக்கூட அடுத்தவரின் உதவி தேவைப்பட்டது. அவரால் சுயமாக எந்த வேலையையுமே செய்ய முடியவில்லை. இதனால், கண்டிப்பாக உடனே சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற நிலை. அவருக்கு ஆழ் மூளைத் தூண்டல் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, மற்றவர்களைப்போல தன்னுடைய வேலையைத் தானே செய்யும் அளவுக்கு நிலைமையில் முன்னேற்றம்.

இது குறித்து மூளை,  நரம்புமண்டல  அறுவைசிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவர் ஹல்பிரசாந்த் கூறுகையில், “இதயத்துக்கு எப்படி பேஸ்மேக்கர் கருவி பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோன்று மூளைக்குப் பொருத்துவதுதான் ஆழ் மூளைத் தூண்டல் சிகிச்சை (Deep brain stimulation (DBS)). கிருபா பாபுவுக்கு மாத்திரைகள் எந்தப் பலனையும் அளிக்காததால், 2015-ம் ஆண்டு, அவர் எங்களைச் சந்தித்தார். சிகிச்சைமுறை குறித்து, அவருக்கு விளக்கினோம். மூளைக்குள் மின்முனை செலுத்தப்படுவதால், முதலில் அவரது மனைவி சிகிச்சைக்குத் தயங்கினார். பின், கிருபா பாபுவின் நிலையைக் கண்டு சிகிச்சைக்குச் சம்மதித்தார்.

சிகிச்சையின்போது, முதலில், சி.டி ஸ்கேன் செய்து, தலைக்கும், சப் தாலமஸ்க்கும் உள்ள தூரத்தை அளவிட்டோம். பின்னர், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாக, கிருபா பாபுவின் மூளையில், மின்முனை பொருத்தப்பட உள்ள சப்-தலாமிக் நியூக்ளியஸ் பகுதியைக் கண்டறிந்தோம். பின்னர், தலையில் சிறுதுளையிட்டு, தலையைச் சுற்றி, ஒரு ஃப்ரேம் (Frame) பொருத்தி, சி.டி ஸ்கேன் மூலமாக, மின்முனையை, சப்-தலாமஸ் பகுதியில் செலுத்தினோம். பின்னர், மின்முனையின் அதிர்வுகளைப் பதிவு செய்தோம். அதாவது, கிருபா பாபுவின் கை, கால் அசைவுகளையும், கண் விழியின் அசைவுகளையும் சோதித்துப் பார்த்தோம். அசைவுகளில் முன்னேற்றம் தெரிந்ததால், மறுபடியும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து, மின் முனை, சரியாக சப்-தலாமஸ் பகுதியில் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டோம்.  இதுவரை கண்விழித்துக்கொண்டிருந்த கிருபா பாபுவுக்கு, மயக்க மருந்து அளித்து, வலதுபுறம் உள்ள காலர் எலும்பின் கீழ்ப்பகுதியில் இருக்கும், சதையின் பின்னால் பேஸ்மேக்கரைப் பொருத்தி, அதை மின்முனையுடன் இணைத்தோம். இந்த சிகிச்சை, ஆறு முதல் ஏழு மணி நேரம் நீடித்தது. இந்த சிகிச்சை முடிந்து, ஏழு முதல் எட்டு மாதங்கள் கிருபா பாபு மாத்திரைகள் உண்டுவந்தார். இப்போது, மீண்டும் பழையநிலைக்குத் திரும்பி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் பேர் பார்க்கின்சன் போன்ற மூளை  தொடர்பான நோயால் பாதிக்கப்படுகின்றனர். பார்க்கின்சன் என்பது மூளை நரம்பு மண்டலம் சிதைவால் ஏற்படும் நோய். மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனக் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த நோயைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனைமுறைகள் ஏதும், இதுவரை உருவாக்கப்படவில்லை. ஒருவருக்கு, பார்கின்சன் நோய் இருப்பது தெரியவந்தால், குறைந்தது நான்கு முதல் ஐந்து வருடங்கள் அவருக்கு, மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அளித்து குணமாகிறதா எனக் கண்காணிக்க வேண்டும். மருந்துகள் மூலமாகவே 60-70 சதவிகிதத்தினர், இந்த நோயில் இருந்து விடுபடுவர். மீதம் உள்ள 30 சதவிகிதத்தினருக்குத்தான் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது”என்றனர்.

- ஜெ. விக்னேஷ்


பார்க்கின்சன் அறிகுறிகள்

*கை அல்லது கை விரல்கள் நடுக்கம்.

*உடல் இறுக்கம்.

*பேச்சில், நடையில் தடுமாற்றம்.

போன்றவை பார்கின்சன் நோய்க்கான அறிகுறிகள். தொடக்கத்தில், மிகவும் லேசாக இருக்கும் நடுக்கம், சில மாதங்களில் தீவிரமாகிவிடும். கை மற்றும் கால்களின் ஒரு பக்கத்தில் மட்டும் இயக்கமும் அசைவுகளும் குறைந்து, நடக்கவோ, கைகுலுக்கவோ சிரமப்படும் நிலை ஏற்படும். இவை பார்கின்சன் நோய் தீவிரமாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கைசுத்தம் காப்போம்!
லப் டப் டிப்ஸ்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close