கல்லீரல் வைரஸ் தவிர்ப்போம்!

ஹெபடைட்டிஸ் உஷார்!உலக ஹெபடைட்டிஸ் தினம் - ஜூலை, 28

லகம் முழுதும் மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவை வைரஸ் கிருமிகள். இதில், முக்கியமானது ஹெபடைட்டிஸ் வைரஸ்கள். இவை, கல்லீரல் செயல்இழப்பை ஏற்படுத்தி, உயிரையே பறித்துவிடும் அளவுக்கு ஆபத்தானவை. இது பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்கான உலக ஹெபடைட்டிஸ் தினத்தில், “2030க்குள் ஹெபடைட்டிஸ் வைரஸை ஒழிக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளில் ஐந்து வகை உள்ளன.

ஹெபடைட்டிஸ்-ஏ

பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ் தாக்குவதால்தான் பெரும்பாலானவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

எப்படிப் பரவுகிறது?

பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் உணவு வழியாகவே இந்த வைரஸ் பரவுகிறது.  அசுத்தமான இடங்களில் உள்ள சாலையோரக் கடைகளில் சாப்பிடுபவர்களுக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம். சோர்வு, பசியின்மை, மேல் வயிற்றில் வலி, காய்ச்சல், வாந்தி, அரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

எப்படித் தடுப்பது?

ஹாவ்ரிக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் ஹெபடைட்டிஸ் - ஏ வைரஸ் பாதிப்புகளைத் தடுக்க முடியும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டுச் சாப்பாடு நல்லது.

சிகிச்சை?

ஹெச்.ஏ.வி ஐ.ஜி.எம் (HAV IgM) எனும் ரத்தப் பரிசோதனை மூலமாக இந்த வைரஸை அறியலாம். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸைப் பொருத்தவரை கவலைப்படத் தேவை இல்லை.  உடல் தனக்குத்தானே சரி செய்துகொள்ளும். மாத்திரை மருந்துகள் சிலருக்குத் தேவைப்படலாம். அதிகபட்சம் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை மட்டுமே இதன் பாதிப்புகள் இருக்கும்.

ஹெபடைட்டிஸ் பி

இதுவரை உலகில் 35 கோடி நோயாளிகள் ஹெபடைட்டிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் ஐந்து கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதால், இது மிகவும் ஆபத்தானது.

எப்படிப் பரவுகிறது?

ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் இன்னொருவரின் ரத்தத்தில் கலக்கும்போதும், உடலின் மற்ற திரவங்கள் வழியாகவும் பரவும். உடலுறவு வழியாகவும் இந்த வைரஸ் பரவும். பெரும்பாலும், மருத்துவமனைகளில் ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்தும்போது பரவுகிறது. போதை ஊசி போட்டுக்கொள்பவர்கள், ஒரே ஊசியைப் பகிர்ந்துகொள்வதால் எளிதாகப் பரவுகிறது. கர்ப்பம் மூலமாக தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவுகிறது. பச்சை குத்துவதாலும், பாடி பியர்ஸிங் செய்வதாலும் பரவுகிறது.

அறிகுறிகள்

இந்த வைரஸ் உடலுக்குள் புகுந்தால், உடனடியாக  அறிகுறிகள் தெரியாது. ஒரு சிலருக்கு காய்ச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை, வயிற்றுவலி, உடல்வலி, சோர்வு போன்றவை ஏற்படும். கண் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த வைரஸ் தாக்குதலை ரத்தப் பரிசோதனை (HBsAg test) மூலம் அறியலாம்.

விளைவுகள்

ஒரு சிலருக்கு, கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்பட்டு , ஒரு கட்டத்தில் முற்றிலும் செயலிழந்துவிடும். சிலருக்கு, கல்லீரல் புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராக இருக்காது. உடலுக்கு சத்துக்கள் சரியாகக் கிடைக்காது. கல்லீரல் செயலிழப்பு மரணத்துக்கு வழி வகுக்கும்.

தடுப்பது எப்படி?

எஞ்செரிக்ஸ் - பி (Enjerix - B) என்னும் தடுப்பூசி மூலம் ஹெபடைட்டிஸ் பி வைரஸைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்ததும் முதல் ஊசி  போட வேண்டும். பின்னர், ஆறு வாரங்கள் கழித்து இரண்டாவது ஊசியும், பின்னர் அடுத்தடுத்த ஒவ்வொரு மாத இடைவெளியில் மூன்று ஊசிகள் அவசியம் போட வேண்டும். ஒருவேளை குழந்தைப் பருவத்தில் போடவில்லை என்றால், உடனடியாக  மருத்துவரிடம்  சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. பெரியவர்கள் முதலில் ஒரு ஊசியும், பின்னர் ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசியும் மீண்டும் ஒரு மாதம் கழித்து மூன்றாவது ஊசியும் போட வேண்டும். ரத்தம், எச்சில், தாய்ப்பால், விந்தணு வழியாகவே இது பரவும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

சிகிச்சை?

நவீன மருத்துவமுறையில் 90 சதவிகிதம் பேருக்கு முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும். சிலருக்கு, மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இதே வைரஸ் தாக்கலாம் என்பதால், வாழ்நாள் முழுமைக்கும் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது அவசியம். கர்ப்பிணிகளுக்கு ஹெபடைட்டிஸ்-பி வைரஸ் இருப்பது அறியப்பட்டால், குழந்தை பிறந்த 12 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போடுவது அவசியம்.

ஹெபடைட்டிஸ் சி

இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் வரை இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.  இந்த வைரஸ் உடலில் தங்கி நோயாளிக்கு பல்வேறு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். இதுவும் ஹெபடைட்டிஸ் பி போலவே ரத்தம், உமிழ்நீர், உடலுறவு மூலம் பரவுகிறது. மலம், சிறுநீர் வாயிலாகவும் இது பரவும். ஹெபடைட்டிஸ் பி வைரஸைப் போலவே இதற்கும் அறிகுறி தாமதமாகத் தெரியும்.

இந்த வைரஸ் நாட்பட்டு இருந்தால் மெதுவாகக் கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி, கல்லீரல் முழுவதுமாகச் செயல் இழக்கவைக்கும்.  ஹெச்.சி.வி ஆன்டிஜென் எனப்படும் ரத்தப்பரிசோதனை மூலம் இந்தத் தொற்றை அறியலாம். இந்த வைரஸுக்குத்  தடுப்பூசி கிடையாது என்பது வருத்தமான செய்தி. ஹெபடைட்டிஸ் சி வைரஸுக்கு சமீபத்தில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

ஹெபடைட்டிஸ் - டி வைரஸ் மிக மிக அரிதானது. இதுவும் ஹெபடைட்டிஸ் - சி வைரஸைப் போன்றதே. அறிகுறிகள், விளைவுகள் எல்லாமே ஒன்றுதான். இந்த வைரஸுக்கும்  தடுப்பூசி கிடையாது.

ஹெபடைட்டிஸ் இ

இந்த வைரஸ் உணவு மற்றும் தண்ணீர் வழியாகவே பரவக்கூடியது. இந்த வைரஸ் குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவை இல்லை. உடல் தானாகவே சரியாகிவிடும். சீனாவில் இதற்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் உலகம் முழுவதும் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவில்லை.

- பு. விவேக் ஆனந்த்


ஹெபடைட்டிஸ் பி, சி, தடுக்க...

மருத்துவமனையில் ஒருவருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு முன், ஹெபடைட்டிஸ் - பி, சி கிருமி அதில் இருக்கிறதா எனப் பரிசோதனைசெய்வது அவசியம்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான ஊசிகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தப்பட்ட ஊசிகளைக் குழந்தைகளிடம்  கொடுக்கக் கூடாது.

பிரசவம், அறுவைசிகிச்சை, கருக்கலைப்பு போன்ற நேரங்களில் மருத்துவ உபகரணங்களை முறைப்படி தொற்றுநீக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்ட  நோயாளிகளைப் பராமரிப்பவர்களும், சிகிச்சை அளிப்பவர்களும், செவிலியர்களும் தடுப்பூசி போட்டிருப்பது அவசியம்.

ஹெபடைட்டிஸ் பி,சி,டி வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர், நகம் வெட்டி போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. உடலுறவுகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick