Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி எல்லாம் சுகமே - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!ஹெல்த்

து நவீன ‘கேம்’ யுகம். நம்முடைய செரிமான மண்டலத்தை நாம் ஒரு கம்ப்யூட்டர்/வீடியோ கேமுடன் ஒப்பிடலாம். செரிமான மண்டலத்தில் வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், பெருங்குடல் என எட்டு முக்கியமான உறுப்புகள் உள்ளன.  இவற்றை எட்டு நிலைகள் (Level) என வைத்துக்கொள்வோம். விளையாட்டில் எப்படி ஒவ்வொரு நிலையாகத் தாண்டிச் செல்ல வேண்டுமோ, அதுபோலத்தான் செரிமான மண்டலத்திலும். முதல் நிலை, நம்முடைய வாய். கடைசி நிலை, பெருங்குடல். நாம் உட்கொள்ளும் உணவானது வாயில் ஆரம்பித்து பெருங்குடல் வரை ஒவ்வொரு நிலையையும் கடந்து வந்தால்தான், நமக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சக்கைகள் வெளியேற்றப்படும். இந்த எட்டு நிலைகளில் ஏதாவது ஒன்றில், கோளாறு ஏற்பட்டாலும், செரிமானம் எனும் சுகமான பயணம் தடைபட்டுவிடும்.

சமைக்கப்பட்ட உணவுக்கும் செரிமானத்துக்கும் நெருங்கிய  தொடர்பு உண்டு. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட ஆரம்பித்த பின்னர்தான்  பற்கள், வாய், வயிறு ஆகியவற்றின் வேலைகள் குறைந்தன. மனிதர்கள் குரங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். சிம்பன்ஸி போன்ற  வால் இல்லா குரங்குகளுக்கு பற்கள் பெரிதாகவும், வாய் அகலமாகவும், பெரிய தொப்பை இருப்பதையும் கவனித்திருக்கிறீர்களா? இவை, ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்தை, சாப்பாட்டுக்கு மட்டுமே ஒதுக்கும். நெருப்பு கண்டுபிடிக்கப்படாத ஆதிகாலத்தில் காய்கறிகள் ஆனாலும், அசைவ உணவானாலும் வெறும் பற்களால் மட்டுமே கடித்து, வாயில் அரைத்துச் சாப்பிட வேண்டும்.அதற்கு ஏற்ப வாய், பற்கள், தொப்பை எல்லாம் பெரிதாக இருந்தன. 

‘சமையல் முறையில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்த பிறகுதான், உணவு செரிமானம் அடைவது எளிதானது. நமக்கு, இப்போது சிறிய வாய், அழகான பற்கள், அளவான வயிறு கிடைக்கக் காரணம், சமையலில் மாற்றம்  ஏற்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெற்றதுதான்’ என்கிறார், சிம்பன்ஸிக்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துவரும் ரிச்சர்ட் ராங்கம்.

சமையல் அறையில் அம்மா தாளிக்க ஆரம்பித்ததுமே நம் மூக்கில் வாசனை ஏறுகிறது அல்லவா? அப்போதே  உடலில் செரிமானம் நடக்க  ஆரம்பித்துவிடுகிறது. உடலில் மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும் பல்வேறு ஹார் மோன்கள் சுரக்க ஆரம்பித்துவிடுகின்றன. நன்றாகப் பசியுடன் இருக்கும்போது உணவைப் பார்த்தாலோ, முகர்ந்தாலோ, வாசனையை நுகர்ந்தாலோகூட  நாக்கில்  எச்சில் ஊறுவது , செரிமான மண்டலம் செயல்படத் தயாராக இருக்கிறது என்பதன் அறிகுறி.

அவியல், மசியல், பிரட்டல், வதக்கல், துவையல், வேகவைத்தல் எனப் பல்வேறு சமையல்முறைகள் பின்பற்றி, செரிமானத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால்தான், செரிமான மண்டலத்தில் புற்றுநோய் வருவது, மற்ற நாடுகளைவிட இன்றும் இந்தியாவில் குறைவாக உள்ளது. நெருப்பு, செரிமான மண்டலத்தின் சிறந்த  நண்பன். நன்றாகச் சமைக்கும்போதே உணவில் இருக்கும் கடினமான மூலக்கூறு பிணைப்புகள் உடைந்து, எளிதில் செரிமானமாவதற்கு ஏற்ற வகையில் மாறிவிடுகின்றன.

`சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லதா... சமைக்காத உணவைச் சாப்பிடுவது நல்லதா?’ எனப் பலருக்கும் குழப்பம் உண்டு. இணைய வசதி எளிதாகிவிட்ட இந்தக் காலத்தில், உணவு குறித்து ஒவ்வொருவரும் தெரிவிக்கும் பல்வேறு  சொந்தக் கருத்துக்களைப் படித்துக் குழம்பி, ஏற்கெனவே இருக்கும் குழப்பத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். நம் பழந்தமிழர் உணவும் உணவுமுறையும் அற்புதமானவை. `உணவே மருந்து’ என்பது தமிழர் பண்பாட்டில் கலந்தது. ஒவ்வோர் உணவையும் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் எந்த முறையில் சமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

சில நட்ஸ் வகைகள், காய்கறிகள் மற்றும் அனைத்துவிதமான பழங்களையும் நாம் நன்றாகக் கழுவிவிட்டு, அப்படியே கடித்துச் சாப்பிடலாம். மீனையும், முட்டையையும், கிழங்குகள் காய்கறிகளையும் வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. சிறுதானியங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், கீரைகள், இறைச்சி உணவுகள் போன்றவற்றை நன்கு சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சமைக்கப்படாத உணவுகளைச் சாப்பிட்டால் எடை குறைந்துவிடும் என நினைப்பது தவறு. வெகுசில காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடலாம். மாவுச்சத்து குறைந்த, நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைச் சமைத்து உண்பதே நல்லது. உணவை நாம் எப்படிச் சாப்பிட்டால், சுகமான செரிமானம் நடக்கும் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்

படம்: தே.தீட்ஷித்,  மாடல்: மாயா, தியா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மனமே நீ மாறிவிடு - 3
நாட்டு மருந்துக்கடை - 24
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close