Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் மழை நோய்கள்!

செய்ய வேண்டியது என்ன?

 

சென்னை, கடலூர் மட்டும்  அல்ல; தமிழகம் எங்கும் கனமழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை விட்டும், பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. பல இடங்களில் தண்ணீர் வடிந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்பவில்லை. தேங்கிக்கிடக்கும் நீர், மழைநீரில் கழிவுநீர் கலந்திருப்பது, அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகள்... என அனைத்தும் சேர்ந்து, தொற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. திடீரென, சில இடங்களில் வயிற்றுப்போக்கு, வாந்தியால் பலரும் அவதியுறுகிறார்கள் எனத் தகவல் வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நம்மைப் பாதுகாத்துக்கொள்ளச் செய்யவேண்டிய ஏழு  விஷயங்களை, உடனடியாகச் செய்ய வேண்டும் என்கிறார், பொது மற்றும் சர்க்கரைநோய் நிபுணர் கருணாநிதி.

மழை காரணமாக பலருக்குக் குடிக்கத் தண்ணீர்கூட கிடைப்பது இல்லை. இந்தச் சூழ்நிலையில், தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய மழைத் தண்ணீரைப் பிடித்துக் குடித்து, தாகம் தீர்த்துக்கொள்கின்றனர். இப்படிக் குடிக்கும் தண்ணீரில் எண்ணற்ற கிருமிகள் இருப்பதால், பல நோய்கள் வர நேரிடும். எனவே, ஒரு சுத்தமான சேலையைக்கொண்டு தண்ணீரை வடிகட்டிக் குடிப்பதே சிறந்தது. கேன் தண்ணீரைவிட காய்ச்சி, வடிகட்டிய நீரை அருந்துவதே நல்லது.

வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் தங்களது வீடுகளில் இருந்து கூடுமானவரை வெளியேறி, வெள்ளம் இல்லாத இடங்களில்  வசிப்பது நல்லது. தண்ணீர் மற்றும் சாக்கடை நீர் கலந்த வெள்ளநீர் போன்றவற்றில்  நின்றுகொண்டே இருந்தால், கால்கள் பாதிக்கப்படும். லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) போன்ற நோய்கள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த நிலையைத் தவிர்க்க, நன்றாகச் சுத்தமான தண்ணீரில் கால்களைக் கழுவி, துணியால் ஒத்தடம் கொடுத்து, கால்களில் உள்ள ஈரப்பதத்தை அகற்றுங்கள்.

ஈரப்பதம் இல்லை என்றால், பாதங்கள் பாதிக்கப்படுவது பெருமளவு தடுக்கப்படும். அலுவலகம் செல்பவர்கள், ஷூ அணிந்துகொண்டு வெளியே சென்றால், தண்ணீரில் ஊறி ஷூ நன்றாக நனைந்துவிடும். ஈரமான ஷூ, ஷாக்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளத்தால் பல இடங்களில் காலரா முதலான வயிற்றுப்போக்குப் பிரச்னைகள் ஏற்படும். இந்தச் சூழலில் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், டீஹைட்ரேஷன் எனப்படும் நீர் இழப்பு ஏற்படும். நீர் இழப்பைச் சமாளிக்க ஓ.ஆர்.எஸ் பயன்படுத்த வேண்டும்.

ஒ.ஆர்.எஸ் என்பது ஓரல் ரீஹைட்ரேஷன் சொல்யூஷன். இதை வீட்டிலேயே செய்யலாம். ஒரு லிட்டர் தண்ணீரில், ஆறு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். இதுதான் ஓ.ஆர்.எஸ். இந்தத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நீர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் வீடுகளில், ஓ.ஆர்.எஸ் மிகவும் உதவியாக இருக்கும்.

முட்டி வரை பல இடங்களில் நீர் தேங்கியிருக்கிறது. தேங்கிய மழைநீர் காரணமாக பல்வேறு தோல் வியாதிகளும், உடல் உபாதைகளும் வரக்கூடும். இந்தச் சூழ்நிலையைத் தற்போது  உடனடியாகச் சமாளிக்க, வீட்டில் பிளீச்சிங் பவுடர் இருந்தால், அதனைத் தேங்கிய நீரில் தூவலாம். தேங்கிய நீரில் பிளீச்சிங் பவுடர் தூவுவதால், அந்த நீரில் இருக்கும் பாக்டீரியா அழியும்.

வெள்ளநீர் வடிந்தநிலையில் உள்ளவர்கள், மூன்று வேளையும் புதிதாகச் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். உணவின் மூலமாக இந்த நேரத்தில் பல நோய்கள் பரவும். எனவே, சூடுபடுத்திய உணவையே எப்போதும் உண்ணுங்கள். ஹோட்டல்கள், வெளி இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டிலேயே உணவுப்பொருட்களை நன்றாகச் சுத்தம்செய்து,  சமைத்து உண்பதே சிறந்தது.

மழை முடிந்த பிறகுதான் டெங்கு முதலான பிரச்னைகள் பெரிய அளவில் தலைதூக்கும். தேங்கிய நீரில் கொசுக்கள் வளர ஆரம்பிக்கும், தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க இயலாமல் போகலாம். எனவே, முடிந்தவரை வீடுகளில் வசிப்பவர்கள் ஜன்னலைச் சாத்திவிடுங்கள். கொசுவலை அடிப்பது நல்லது. கொசுவலையைப் போர்த்திக்கொண்டு தூங்குவது சிறந்தது. கொசு பேட், கொசுவத்தி போன்றவற்றையும் இந்தச் சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம்.

மிளகை நன்றாக அரைத்து, சூடாக ரசம் செய்து குடியுங்கள். ரசம் சாதம் சாப்பிடுவதும் நல்லது. மிளகில் இருக்கும் சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும். மழைக்காலத்தில் பலருக்கும் சத்துக் குறைபாடு ஏற்படும். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நன்றாகக் கழுவி, சுத்தமாகச் சாப்பிட வேண்டும். வெள்ள நீர் நன்றாக வடிந்தவுடன், உடலுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுங்கள். நாம் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.

- பு.விவேக் ஆனந்த்,

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்,

ப.சரவணகுமார், மீ.நிவேதன்,

க.பாலாஜி, மா.பி.சித்தார்த்


நோய்த்தொற்றைத் தடுப்போம்! 

தேங்கி நிற்கும் நீரில் புழங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் சில...

தோலில் அலர்ஜி ஏற்படுதல்

உடலில் காயம் ஏற்பட்ட இடங்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் பரவும். இதனால், காயங்கள் எளிதில் ஆறாது. காது, மூக்கு, தொண்டையில் பிரச்னைகள் ஏற்படும்.

தடுக்கும் வழிகள்

வெளியே சென்று வீடு திரும்பியதும், சுத்தமான நீரில் கை, கால்களைக் கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும். மழையில் நனைந்த உடையுடன் அப்படியே வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு குடிப்பதற்கு கொதிக்கவைத்த நீரை மிதமான சூட்டில் பருக வேண்டும்.

தண்ணீர் தேங்கிய இடங்களில், நீர் வடிந்த பிறகு நன்றாக பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவி, காயவிட வேண்டும்.

பாதங்களில் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, பூஞ்சைகளை நீக்கும் க்ரீம்களைத்  தடவுவது நல்லது.

தண்ணீர் வழியாகப் பரவும் நோய்கள்

டைஃபாய்டு காய்ச்சல்

லெப்டோஸ்பைரோசிஸ் எனும் எலிக் காய்ச்சல்

காலரா வயிற்றுப்போக்கு

ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ்

தடுப்பது எப்படி?

ஹோட்டல், சாலையோரக் கடைகளில் துரித உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் சமைத்த உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

குழந்தைகள், நன்றாகக் கைகழுவிய பிறகுதான் உணவைத் தொட வேண்டும் என சொல்லித்தர வேண்டும்.

வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை குளோரின் பவுடர் போட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

கொசுக்கள் வழியாகப் பரவும் நோய்கள்

மலேரியா

டெங்கு

தடுப்பது எப்படி?

வீட்டைச் சுற்றித் தேங்கி உள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகள், தொட்டிகள் எதுவும் வைக்கக் கூடாது.

கொசுவலை பயன்படுத்தலாம். அலர்ஜி இல்லை எனில், கொசுவத்தி, கொசுவில் இருந்து தற்காக்கும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ, விட்டுவிட்டு காய்ச்சல் வந்தாலோ உடனடியாக மருத்துவமனைக்கோ, மருத்துவ முகாம்களுக்கோ சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளைத் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பகல் தூக்கம் நல்லதா?
யோகா பலன்கள்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close