தனுஷ் சொல்லும் 3 ரகசியங்கள்

‘துள்ளுவதோ இளமை’யில் தொடங்கி, `கொலைவெறி’ ஹிட்டு, ஜாலி கேலி பொயட்டு, தேசிய விருது, பாலிவுட் சக்சஸ் எனத் தடதடக்கிறது தனுஷ் கிராஃப். விமர்சனங்களை லெஃப்ட்டில் அடித்து ரைட்டில் ஒதுக்கித்தள்ளி, இன்று மாற்று சினிமா மற்றும் மாஸ் சினிமா இயக்குநர்களின் மோஸ்ட் வான்டட் ஹீரோ. தனுஷின் வெற்றிக்குப் பின் இருக்கும் ரகசியம் என்ன..?

``உடற்பயிற்சியை என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு விஷயமாக வெச்சிருக்கேன். அதைத்தவிர, நான் பெருசா எதுவும் செய்வது இல்லை. வாரத்துக்கு நான்கைந்து நாட்களாவது தவறாமல் உடற்பயிற்சி செஞ்சிடுவேன். வேலை அதிகமாக இருந்து ஓரிரு நாட்கள் தவறவிட்டாலும் தினமும் நான் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலில் உடற்பயிற்சி தவறாமல் இருக்கும்.

ஒரு மாடிப்படியை சாதாரணமாக ஏறுவதற்கும், ஒரு மாசம் வொர்க்அவுட் செய்தபின் ஏறுவதற்கும் ரொம்ப வித்தியாசம் தெரியும். அந்த அளவுக்கு உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக்கும். அடிக்கடி வொர்க்அவுட் செய்து, அதன் புத்துணர்ச்சியை அனுபவித்துவிட்டால், பிறகு அதைவிடுவதற்கு யாருக்கும் மனசு வராது. சோம்பலை முறித்து வொர்க்அவுட்டுக்குத் தயாராகுங்கள்.’’

“எனக்கு இயல்பாகவே ஸ்வீட்ஸ் பிடிக்காது. அதனால், அதிகமாகச் சாப்பிட மாட்டேன். எது எல்லாம் வெயிட்போடும்னு ஒரு லிஸ்ட் எடுத்தால், அது எல்லாம் பிறந்ததில் இருந்தே எனக்குப் பிடிக்காத விஷயங்களாகத்தான் இருக்கும். அதனால், உடல் எடை கூடுமோங்கிற கவலை கிடையாது. நான் டயட் கட்டுப்பாடு எதையும் பின்பற்றுவது இல்லை. அம்மா சமையல் தவிர, பெருசா எதுவும் எனக்குப் பிடிக்காது. முடிந்தவரை வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுவேன். ஷூட்டிங் போகும்போதுகூட, என் அம்மா வீட்ல சாப்பாடு செஞ்சு, ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு எப்போதும் என் அம்மா சாப்பாடுதான். அதில்தான் ஆரோக்கியமும், அக்கறையும், சுவையும் கலந்திருக்கும்.’’

``ஸ்ட்ரெஸுக்கு சிறந்த மருந்து, யோகா. உடல்போலத்தான் மனசும். உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் மனதின் ஆரோக்கியமும் நமக்கு முக்கியமானது. உடற்பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் யோகா அவசியம் செய்வேன். என்னுடைய ஸ்ட்ரெஸ்பஸ்டர் யோகாதான்.’’

இளைஞர்களுக்கு ஒரு ட்வீட்: நம்ம உடல் நம்முடனே வருது. நாம் எத்தனை வருடங்கள் வாழ்கிறோமோ, அத்தனை வருடங்கள் நமக்காக உழைக்குது. அந்த உடலை, நலமாகவெச்சுக்க ஒரு நாளில், ஒரு மணி நேரம் செலவழிக்கக் கூடாதா? கமான் பாஸ்! வொர்க்அவுட் பண்ணலாம் வாங்க!

-  பா.ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick