ஸ்டார் ஃபிட்னெஸ்

தினமும் வொர்க்அவுட் செய்வதைத் தவிர்க்கும் பலரும் சொல்லும் காரணம் `நேரம் இல்லை.’ ஆனால், அது உண்மையா? `இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி... எப்பவும் பிஸி’ என்று கிண்டலுக்காகச் சொல்லப்படுவதைக் கவனித்து இருப்போம். உண்மையில், அமெரிக்க அதிபர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

`இளம் வயதிலேயே உடற்பயிற்சியை என் வாழ்வின் ஓர் அங்கமாக்கிக்கொண்டேன். எனக்காகவும் சரி, நாட்டுக்காகவும் சரி... உடல்நலம் முக்கியம் என்பதை அப்போதே நான் அறிந்திருந்தேன். அதனால்தான் சொல்கிறேன், இளைஞர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறைகொள்ள வேண்டும்’ என்கிறார்.

22 வயதில் இருந்தே புகையிலை, மது இரண்டையும் ஒபாமா தொடுவது இல்லை. `நம் உடலுக்குள் செலுத்தும் அசுத்தங்களைக் குறைப்பதுதான் எளிதான உடற்பயிற்சி’ என்பது ஒபாமா ஸ்டைல்.

ஒபாமா இளம் வயதில் தனது உடற்பயிற்சிகளைத் தொடங்கிய காலத்தில், தினமும் மூன்று மைல் ஓடுவார். இன்று வரை அந்தப் பழக்கம் மாறவில்லை. `உடற்பயிற்சி என்பது அன்றாட விஷயம். அது நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்’ என்பது ஒபாமாவின் ஹெல்த் ரூல்.

விளையாட்டின் மீது ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். வாரம் நான்கு நாட்கள் வொர்க்அவுட். கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள் இரண்டு நாட்கள். `விளையாட்டும் உடற்பயிற்சிதான். ஆனால், உடற்பயிற்சியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பது ஒபாமா பன்ச்.

ஆர்கானிக் உணவுகள் மீது ஒபாமாவுக்கு நம்பிக்கை அதிகம். அமெரிக்கா முழுவதும் பிரபலமான ஜங்க் ஃபுட்கள் அவருக்கு அலர்ஜி. நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகள் எல்லாமே ஒபாமாவின் ஃபேவரிட்’ என ரகசியம் சொல்கிறது வெள்ளை மாளிகை கிச்சன்.

ஒபாமாவைவிட அவர் மனைவி மிஷல் ஒபாமா உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அமெரிக்கர்களை ‘ஓடு... ஓடு’ என முடுக்குபவர் இவர்தான்.

‘`உண்மை அறிவோம்’ என்பது முதல் பாயின்ட். உடற்பயிற்சிகளைத் தொடங்கும் முன், என்ன செய்தால் நம் உடல் எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை அறிவது அவசியம்’ என்கிறார் மிஷல். அதனால், முறையான ஆலோசகரை நாடி, அவரிடம் கேட்டுப் பயிற்சிபெறச் சொல்கிறார்.

`ஆரோக்கிய உணவே போதுமானது. நாம் உண்ணும் அதிகப்படியான உணவைச் செரிக்கத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. எனவே, தேவையானவற்றை, அளவாக உண்பதும் ஒருவித உடற்பயிற்சிதான்’ என்கிறார்.

`நாம் சொல்வதை உடல் கேட்டால்தான், மனமும் கேட்கும். எனவே, உங்கள் உடலை நீங்கள் விரும்பும்வண்ணம் பராமரிக்கப் பழகுங்கள். மற்றவை தானாக நிகழும்’ என்பது ஒபாமா தம்பதி கண்ட உண்மை.

`குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய மிக முக்கியமான விஷயம், உடற்பயிற்சிதான். எனவே, அதில் உங்கள் செல்லத்தைக் காட்டாதீர்கள்’ என்கிறார்.

 கடந்த ஐந்து ஆண்டுகளாக  ‘லெட்ஸ் மூவ்’ என்ற உடற்பயிற்சி சார்ந்த பிரசாரத்தை மேற்கொள்கிறார் மிஷல். `அமெரிக்கர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே எனது லட்சியம்’ என்கிறார் ஃபர்ஸ்ட் லேடி.

- கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick