கன்சல்ட்டிங் ரூம்

கே.ராதாமணி, மயிலாடுதுறை.

“என் வயது 30. எனக்குக் கடந்த ஆறு மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுகிறது. உதட்டின் உட்புறம், வாயின் மேல் அன்னம், நாக்கின் கீழ்ப்பகுதி, ஈறுகள் ஆகிய பகுதிகளில் புண்கள் தோன்றுகின்றன. பிறகு, இரண்டொரு நாட்களில் சரியாகிவிடுகின்றன. வாய்ப்புண் அடிக்கடி ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு?”

டாக்டர் பி.செந்தில்நாதன்

ஜீரணமண்டல அறுவைசிகிச்சை நிபுணர், கோவை.


“தொடர்ச்சியாகப் புண் இருக்கிறது என்றால், ஏதேனும் நோய்த்தொற்றாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு விட்டு விட்டு வருவதால் வேறு காரணங்களால் வந்திருக்கலாம். பொதுவாக, வாய்ப்புண் ஏற்படுவதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, துத்தநாகம், பி12, இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுகள் எனப் பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு, பற்கள் கூர்மையாக இருக்கும். அது நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் பட்டு புண்களை ஏற்படுத்தலாம். எதுக்களிப்பு (Reflections of acid) காரணமாகவும் வாய்ப்புண் ஏற்படலாம். எலுமிச்சை, அன்னாசி போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுகூட வாய்ப்புண்களுக்குக் காரணமாகிறது. எனவே, எதனால் புண் ஏற்படுகிறது எனக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை பெறுவதன் மூலம் பிரச்னையில் இருந்து விலகலாம்.

பொதுவாக, இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, கட்டாயம் ஏழெட்டு மணி நேரம் தூங்க வேண்டும். மனஅழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில், அதிகப் பழங்கள், காய்கறிகள், கீரைகளைச் சேர்க்க வேண்டும். கூர்மையான பற்கள் இருந்தால், பல் மருத்தவரிடம் சென்று சரிசெய்துகொள்ள வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும், அவ்வப்போது வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால், நோய்த்தொற்றுக் கிருமிகளின் தாக்கத்தைக் குறைக்க முடியும். எதுக்களிப்புப் பிரச்னை இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அதிக மசாலா உள்ள உணவுப் பொருட்கள், கார்பனேட்டட் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்